நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.
இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை.
(டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் பேர்வழி)
டூட்: மாமே, இன்னிக்கு வேலை செய்யும் போது மிஷினுக்குள்ள விரலை விட்டுட்டேன், வலி தாங்க முடியல வா மாமே 2 ரூ பேன்டேஜ் வாங்கி சுத்திட்டு கட்டிங் போட்டு வருவோம்.
நபர் 2: டேய் அறிவுகெட்ட மாங்கா, எல்லாத்துக்கும் கட்டிங் போட்டா சரி ஆவாது. இது என்னடா கோடு?
டூட்: அது ஆனி கீச்சுடுச்சு மாமே. துருப்பிடிச்ச ஆனி.
நபர்2: பைத்தியம், சீல் வச்சிரும், வா ஆஸ்பத்திரி போயிட்டு தடுப்பூசி போடனும்.
டூட்: மாமே நான்லாம் கொரோனா தடுப்பூசியே போடல, இது என்ன பில்லாக்கி.
நபர் 2 : டேய் ஒழுங்கா வாய மூடிக்கிட்டு வா. இல்லாட்டி வாய தச்சிருவேன்.

மருத்துவமனையில்.
நபர்2: டாக்டர், இவனுக்கு கைல ஆனி கிழிச்சிருச்சு. அதில்லாம விரல்ல அடிபட்டுருக்கு என்னனு பாருங்க.
டாக்டர்: பிரச்சினை இல்ல, டிடி போட்டுரலாம். ட்ரஸ்ஸிங் பண்ணி ஆயின்மன்ட் போட்டா ஆறிடும். இங்க வாங்கப்பா, ஏன் ஆளு பாக்க ஒரு மாதிரி இருக்கீங்க? வாங்க பிபி செக் பண்ணனும்.
டூட்: பீபி லாம் வேணாம் சார், ஊசி போடுங்க கிளம்பனும்.
டாக்டர்: அட வாப்பா, பாக்கவே ரொம்ப டல்லா இருக்க..
BP – Blood pressure 150/110 இருக்கிறது.
டாக்டர்: என்னப்பா இவ்வளவு அதிகமா இருக்கு? என்ன வயசு உனக்கு?
டூட்: 21 சார்.
டாக்டர்: இப்பலாம் இப்படி தாம்பா ஆவுது. சின்ன வயசுலையே எல்லாம் வருது. சரி நான் மாத்திரை எழுதித் தரேன், போட்டுட்டு பத்து நாள் கழிச்சு வா.
எப்படி இருக்குனு பாப்போம்.
டூட்: பிபி மாத்திரையா. சார் நான்லாம் கொரோனாவுக்கே ஊசி போட்டதில்ல சார். காய்ச்சல், சளினு எதுக்குமே ஆஸ்பத்திரி போறதில்ல. ஏதோ என் மாமா சொன்னாருன்னு இன்னைக்கு வந்தேன். நாங்கலாம் சித்தர் மாதிரி வாழுறவங்க சார்.
டாக்டர்: அதில்லப்பா, இப்படி பிபி இருக்குனு உனக்கு முன்னாடி தெரியாதுல. இப்ப தெரிஞ்சும் மாத்திரை போடாட்டி எப்படி?
டூட்: இல்லசார் அதெல்லாம் 3 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க. ப்ளட் டொனேஷன் குடுக்கப் போனப்ப பிபி அதிகமா இருக்கு, 140 இருக்குனு ப்ளட் தர முடியாதுன்னுட்டாங்க.
டாக்டர்: அப்புறம் ஏம்ப்பா மாத்திரை வேணாம்ங்குற?
டூட்: நீங்க வாழ்க்கை புல்லா ல மாத்திரை சாப்பிட சொல்லுவிங்க? நாங்கலாம் கெத்தா வாழுறவங்க. மாத்திரை மருந்துலாம் செட் ஆவாது. வேற ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க.
டாக்டர்: வேற வழின்னா? மந்திரம் தாம்ப்பா போடனும்.
ஏன் மாத்திரை வேணாம்ங்குற?
டூட்: அதான் சொன்னனே சார், நாங்கலாம் சித்தர் மாதிரி வாழுறவங்க! எங்களுக்குல்லாம் மாத்திரைலாம் செட் ஆவாது.
டாக்டர்: சித்தரா? என்னென்ன காய்கறிலாம் சாப்புடுவப்பா?
டூட்: கத்திரிக்காய், வெங்காயம்.
டாக்டர்: அதென்னப்ப , அது ரெண்டு மட்டும்.
டூட்: பிரியாணி கூட அதான தராங்க.
டாக்டர்: ஓ, இந்த பூசணிக்காய், சுரைக்காய், பாகற்காய்?
டூட்: சே..சே அதெல்லாம் அனாவஷியம். பிரியாணி கூட கத்திரிக்காயும், வெங்காயமும் தான் செட் ஆகும்.
டாக்டர்: பிரியாணி தவிர வேறென்ன சாப்புடுவீங்க..
டூட்: பிரியாணி இல்லாட்டி 4 புரோட்டாவும், 2 ஆப்பாயிலும்.
டாக்டர்: ஓ 4 புரோட்டா, 2 ஆப்பாயில். சரி இந்த பழம் ஏதாவது?
டூட்: எப்பயாச்சும் செரிமானத்துக்கு வாழப்பழம்.
டாக்டர்: ரன்னிங் ஏதும் போற பழக்கம் உண்டா?
டூட்: சில நேரத்தில கண் அசந்துருவேன். அப்புறம் 9.45 க்கு திடீர்னு முழிப்பு வரும். அப்ப கடைய மூட 15 நிமிசம் தான் இருக்குனு செம ஓட்டம் ஓடுவேன்.
டாக்டர்: ஓ , இது வேறயா!
டூட்: ஆமா சார், ப்ளாக்ல 50 ரூ அதிகம்.
டாக்டர்: சரிப்பா, இந்த மாத்திரை போட்றதால என்ன ஆகப்போவுது? போடலாம்ல.
டூட்: அய்ய, அதான் சொன்னனே சார். இங்கிலிஸ் மாத்திரைல சைட் எபெக்ட்லாம் இருக்காமாம். அதெல்லாம் சாப்டா நான் செத்துருவேனாம்.
டாக்டர்: நீடுழி வாழ்க தம்பி.. சித்தர் மாதிரியான உங்க அருமையான வாழ்க்கையை தொடருங்க. மிக்க நன்றி.

இந்த உரையாடல் வெறும் முழு கற்பனை அல்ல.
நம்மில் பலரும் வாழும் முறையில் இப்படி பல ஓட்டைகளை வைத்துக்கொண்டு, எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஆரோக்கியமாக சித்தர்களைப்போல வாழ்கிறோம் என்று நமக்கு நாமே போலியான நம்பிக்கை கொடுத்துக் கொண்டு வாழ்கிறோம்.
ஏதோ ஒரு நாள் மருத்துவமனை செல்லும் கட்டாயம் வரும்போது, இப்படி நம் உடலில் ஏதாவது கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், இவன் ப்ராடுக்காரன் டா, நம்மகிட்ன துட்ட பிடுங்க எதையாவது சொல்லுவான். கட்டிங் போட்டா எல்லாம் சரி ஆயிடும்னு உதாசினம் செய்து விட்டு நகர்ந்து விடுகிறோம்.
மருத்துவம் ஒரு புறம் சீரழிந்தி இருப்பது உண்மை தான். ஆனால் நம் வாழ்வியல் கொடூரமான முறையில் சீரழிந்து இருப்பது அதைவிட நிதர்சனமான உண்மை
ஆக இப்படியான வாழ்வியலில் இந்த வயசில் இந்த வியாதியா என்று ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
மாரடைப்பால் மரணமடையும் எத்தனையோ இளைஞர்களைக் கடந்து தான் வாழ்கிறோம்.
உங்கள் உடல் சம்பந்தமான கோளாறுகள் கண்டறியப்பட்டால், தேவைப்பட்டால் இன்னொரு மருத்துவமனையிலோ அல்லது அரசு மருத்துவமனையிலோ அதை உறுதி படுத்தி விட்டு தேவையான மருத்துவத்தை எடுத்துக் கொள்வதே சிறந்தது.
அதைவிட்டு , நாங்கலாம் சுனாமில ஸ்விம்மிங் போட்டுவங்க என்றால்.
பிபி ஒருநாள் நமக்கு பீப்பி ஊதிவிடும்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
குற்றம் மட்டுமல்ல, நோயும் வரும் முன்பே குணப்படுத்துவது நல்லது.
வருமுன் காப்போம்
நினைவுகள் வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
வாழ்வியலையும், மருத்துவ முறைகளையும் பற்றி தொடர்ந்து பேசுவோம்.