சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி சில நேரங்களில் நம் மனதில் பெரும் மகிழ்ச்சியையும், ஆழமான கருத்துகளையும் பதிக்கும்.
அப்படியொரு மகிழ்ச்சியும், கருத்தும் தந்த மறக்க முடியாத தமிழ் சினிமா பட்டியலில் இணைந்திருக்கிறது போன வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம்.
போன வாரம் வந்த படங்களில் மட்டுமல்ல, சமீப காலத்தில் வந்த படங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக சிறப்பான திரைப்படம் என்று போற்றக்கூடியது இந்த லப்பர் பந்து.
இந்தப்படத்தின் முன்னோட்டம் பார்த்த போது , சென்னை 28 போல ப்ளூஸ்டார் போல ஏதோ ஒரு ஜாலியான படம் மற்றும் சின்ன கருத்து இருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனால் இப்படி மனதில் நீங்கா இடம் பிடிக்கும் பட்டியலில் இந்தப்படம் இடம்பெறும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சாட்டையை சுழற்றி கருத்துகளை திணிக்காமல், ஜாலியா நம்ம கூட உட்கார்ந்து பேசி தோளில் கைபோட்டு கருத்து கூறும் போது அது இன்னும் ஆழமாகப் பதியும். அப்படி ஜாலியாகவும், மனதிற்கு நிறைவாகவும், தோளில் கை போட்டு, சாதி தீண்டாமை, பெண்ணடிமை, ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை செருப்பால் அடித்தது போல சொல்லியிருக்கிறது இந்தப்படம்.
சிறுவயதில் ரப்பர் பந்தில் கிரிக்கெட் விளையாடாத மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி கிரிக்கெட் ஆடிய அனைவரின் மனதிற்கும் நெருக்கமான சிறுவயது ஞாபகங்களை தூண்டும் பல காட்சிகளை படத்தில் காணலாம்.
முக்கியமாக கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்து. கேப்டனின் புகைப்படம், பாடல் என ஆங்காங்கே கேப்டனின் நினைவுகள் தூண்டப்பட்டு, திரையரங்குகள் தூள் பறக்கிறது.
படத்தில் கிரிக்கெட் தான் முக்கிய காரணி என்றாலும் கூட அதை சுற்றி அதை சார்ந்து வாழும் நபர்கள், அவர்களின் குடும்பங்கள், அந்த குடும்பங்களின் வாழ்க்கை முறை, அவர்கள் வாழும் ஊரின் மக்கள், அந்த மக்களின் நடைமுறை என ஆங்காங்கே வரும் பல காட்சிகளில் நாம் இத்தனை விஷயங்களையும் அறிந்து கொள்ள இயன்றது என்பதே பெரிய வியப்பாக இருந்தது.
உதாரணமாக கனா படத்தில் கிரிக்கெட்டும் இருக்கும், விவசாயம் செய்யும் சத்யராஜின் வாழ்க்கையும் இணைந்திருக்கும். அதுபோல, இந்தப்படத்தில் கிரிக்கெட் ஆடும் கதாநாயகர்களின் குடும்பப் பின்னனியும் அழகாக திரையமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன. ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் வீரத்துடன், விவேகத்துடன், அதிகாரமிக்கவர்களாக வடிவமைக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு.
அதிலும் தினேஷின் மனைவி கதாபாத்திரம் உட்சபட்சம். படத்தின் தலைப்பே அந்த கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சியில் தான் வருகிறது. தன் கணவர் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காத அவர், மைதானத்திற்கு ட்ராக்டரில் கெத்தாக வந்து அவரை குழந்தை போல அமர வைத்து, இனிமேல் எவனாவது இவர ஆட்டத்துல சேத்தா இதான் கதி என்று கிரிக்கெட் பிட்ச்சை உழுது விட்டு செல்ல, அதிலிருந்து கிளம்புகிறது படத்தின் தலைப்பு. கதாநாயகிகளை மையாமாக வைத்து எடுக்கும் படங்களில் கூட இப்படி ஒரு அறிமுகம் இருக்காது போல.
அந்த கதாபாத்திரத்தின் சிறப்பு இதோடு முடிந்து விடுவதில்லை. தனது மாமியாரிடம் சிடு சிடுவென இருந்தாலும் அவர் காட்டியிருந்த அன்பு, கணவனின் மீதான வெறுப்பு காரணமாக அவரைப்பிரிந்து வாழும் சூழலில் அவர்மீது காட்டும் காட்டம், திரும்ப மாமியாரின் சொல்கேட்டு வீடு வந்த பிறகு கணவனிடம், “என் நெனப்பு வந்தா ஒரு சேலையில தூங்க மாட்டியா? இப்படி எல்லா சேலையையும் எடுத்துப்போட்டுருக்க? யாரு துவைக்கிறது?” என்று அதட்டி அன்பை வெளிப்படுத்தும் காட்சியும் மிக அழகான காட்சிகள் .
சாதி பெருமையை சுமக்கும் தினேஷின் அம்மா கதாபாத்திரம், சமாதானத்திற்காக தினேஷின் மனைவி வீட்டிற்கு போகும் போது, அவரது சம்பந்தாரிடம், ஏமா வந்தவளுக்கு தண்ணி தரமாட்டியா என கேட்கும் போது, தினேஷின் மாமியார், “நீங்க எங்க வூட்ல தண்ணி குடிப்பீங்களோனு தான் தரல” என்று கூறுவார். அவர் தண்ணியை வாங்கி குடித்து விட்டு கிளம்பும் போது, “இவ்வளவு நாளா ஏனோ தானோனு இருந்தேன், இப்ப உன்ன பாத்ததும் பசிக்குது, சாப்பாடு போடுனு” அவரது மருமகளிடம் குழந்தை போல கேட்டு சாப்பிடும் காட்சி, ரத்தம் சுண்டிப்போனால், அன்பும் அரவணைப்பும் தான் துணை நிற்கும், சாதியல்ல என்பதை தெளிவுறுத்தும் காட்சி. அதை நடிப்பில் யதார்த்மாக வெளிப்படுத்திய அந்த நடிகையும் அருமை.
அடுத்தது கதாநாயகி, அதாவது ஹரிஷ் கல்யாணின் காதலி கதாபாத்திரம் ஒரு கவிதை.
நீ எனக்காக எதையும் செய்ய வேண்டாம். அப்படி நான் என்னைக்குமே கேட்க மாட்டேன் என்பதில் துவங்கி, “அப்பா நான் உன் மேல வச்சிருந்த நம்பிக்கைய ஒடச்சிட்ட, அப்புறம் நான் சும்மா இருக்கிறேனு, 3 மாசத்துல ஒருத்தன் ரெடி, ஆறு மாசத்துல ஒருத்தன் ரெடினு எவனையாச்சும் என் தலைல கட்ட பாத்தா அவ்வளவு தான்” என அன்பையும், காதலையும், கோபத்தையும் தாறுமாறாக காட்டி நம் மனதில் தேவதையாகப் பதிகிறார்.
தேவதர்சினி கதாபாத்திரம் தன் மகனுக்காக ஆதரவாக நிற்கும் தாயாக மிளிர்கிறார். சில நேரங்களில் மகனோடு இணையாக தோழியாக கலகலக்கிறார்.
அட படத்துல ஹரிஷ் கல்யாணின் முன்னாள் காதலினு ஒரு பொண்ணு வருது. அந்தப்பொண்ணு கூட நம்ம மனசுல ஆழமா நிக்குது.
இதையெல்லாம் தாண்டி காளிவெங்கட்டின் மகள் கிரிக்கெட் அணியில் ஆடும் காட்சிகள்.
கனா படத்தில் பேசப்பட்ட பெண் அடிமைத்தனம் என்றாலும் கூட இந்தப்படத்தில் அந்த காட்சிகள் கைதட்டலை வாங்குகிறது.
அந்தப்பெண் கிரிக்கெட் விளையாடுவது எனக்குக் கூட ஒரு மாதிரி இருக்கு என சொல்லும் பால சரவணனிடம், “அவன் பன்றது சாதிதிமிர்னா இது என்ன ஆம்பளத்திமிரா?” என ஹிரிஷ் கேட்கும் காட்சி அட்டகாசம்.
இதையெல்லாம் தாண்டி இந்தப்படத்தின் மையப்புள்ளி கிரிக்கெட். தன் ஊரின் ஜாலி ப்ரெண்ட்ஸ் அணியில் விளையாட நினைக்கும் ஹரிஷ் கல்யாண் சாதி காரணமாக அணியில் சேர்க்கப்படுவதில்லை.
ஆனாலும் கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆல்ரவுண்டராக வளர்ந்து நிற்கிறார். அந்தப்பக்கம் கெத்து தினேஷ். வேற மாதிரி ஆட்டக்காரர். மட்டையை எடுத்தால் தீபாவளி தான். ஆனால் கிரிக்கெட் காரணமாக தனது வேலையில் கவனம் செலுத்தாத காரணத்தால் மனைவியால் கிரிக்கெட் ஆட தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் கூட, தனது மகள் ஆளாகி வேலைக்குப் போகும் காலம் வரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்.
அப்படி கிரிக்கெட் விளையாடும் போது யதார்த்தமாக இவருக்கும், ஹரிஷ் க்கும் சந்திப்பு ஏற்பட, “இந்த அண்ணன் ஆப் சைட்ல அடிக்க மாட்டாரு, என்கிட்டலாம் மாட்டுனா ஒரு ஓவர்ல காலி” என பேசும் பேச்சு, தினேஷின் நண்பர் மூலமாக தினேஷ்க்கு தெரிய வருகிறது.
அங்கே மூளும் ஆணவப்போர் எப்படியெல்லாம் பயணிக்கிறது, தினேஷின் மகளை காதலிக்கும் ஹரிஷின் காதல் இதனால் என்ன ஆனது, அவரை சாதி பெயரை சொல்லி அணியில் சேர்க்காமல் இருந்த அந்த அணியில் சேர்ந்தாரா, என்பதே கதை.
தாங்கள் மாமனாரும், மருமகனும் என்பது தெரியாமலே தினேஷும், ஹரிஷ் கல்யாணும் களத்தில் அடித்துக்கொள்ளும் காட்சிகள் அட்டகாசம்.
முதன்முதலில் மாமனாரும் மருமகனும் சந்தித்துக்கொள்ளும் காட்சி கலகலப்பு.
கிரிக்கெட் மீது கொள்ளைப்பிரியம் கொண்ட காளி வெங்கட் தான் ஜாலி பாய்ஸ் அணியின் தலைவர்.
ஆனால் அவர் சொல்லியும் கூட அவரது உறவுகள் சாதி காரணத்தால் ஹரிஷை அணியில் சேர்க்கவில்லை. அதோடு நில்லாமல் ஒருமுறை பேனரில் சேர்க்கப்பட்ட ஹரிஷின் புகைப்படத்தையும் மை வைத்து அழித்துவிடுகிறார்கள்.
இந்த கோபத்தை ஒரு காட்சியில் பாலசரவணன் காளி வெங்கட் இடம் வெளிப்படுத்துகிறார். அந்த காட்சியின் வசனங்கள், கதாநாயகர்களையும் மிஞ்சி பால சரவணனுக்கு நல்ல கைதட்டலைப் பெற்றுத் தருகிறது. இப்படி படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
ஏன் தினேஷின் குடிகார நண்பனாக வரும் கநாபாத்திரம் கூட, காரட் பந்தில் தினேஷ் கோமாளியாக்கப்படும் போது மீண்டும் அவர் கெத்தாக விளையாடக் காரணமாக அமைகிறார்.
படத்தின் துவக்கத்தில் பேருந்தில் அருமையான பழைய தேவா பாடல் ஒலிக்கிறது. அதைக் கேட்டு இரண்டு பெருசுகள் “ராஜா ராஜா தான்யா” என்று கூற, பாலசரவணன், “ராஜா ராஜா தான் ஆனா இந்தப்பாட்டு தேவா போட்டது” என்று கூறும்போது கலகலக்கத் துவங்கிய திரையரங்கம், பொட்டு வைத்த தங்கக்குடம், எனக்கென றெக்க கட்டி பறந்தவ போன்ற பழைய பாடல்களின் இனிமைகளோடு, கலகல காட்சிகளோடு, விறுவிறுப்பான திரைக்கதையில் , கடைசிகாட்சியில் ஹரிஷ் கல்யாண் “நாம வெற்றி பெறுவது முக்கியமல்ல, நமது எண்ணம் வெல்ல வேண்டும்“ என்று கூறும் போது கைதட்டலை பெற்று, திரும்ப மாமனாரும் மருமகனும் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என ஐயனார் சாமியிடம் சத்தியம் செய்வதாக கலகலவென முடிகிறது.
எவ்வளவு எழுதினாலும் பாராட்டுகள் போதுமானதாக இல்லை. ஆனாலும் என்ன செய்வது? முடித்து தானே ஆக வேண்டும்.
இது போன்ற நல்ல படங்களின் நினைவுகள் என்றும் மனதை விட்டு நீங்காது. அடுத்து இதுபோன்ற ஒரு நல்ல படத்தை எப்போது காண்போம் என்ற ஏக்கத்துடன்.
மேலும் சில சமீபத்திய விமர்சனங்கள் கீழே.
சமூக நீதி பேசும் நல்ல சினிமா- நந்தன்- சிறுமுன்னோட்டம்
ரசிக்க கூடிய என்டர்டைனர் – கடைசி உலகப்போர் – விமர்சனம்
மக்கள் தவறவிட்ட நல்ல சினிமா- ஜமா- விளக்கம் மற்றும் விமர்சனம்
புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்