Categories
சினிமா தமிழ்

மக்கள் தவறவிட்ட நல்ல சினிமா- ஜமா- விளக்கம் மற்றும் விமர்சனம்

சினிமா என்பதே பொழுதுபோக்குக்காகதான் என்ற வரம்பையும் மீறி சில சினிமாக்கள் நல்ல ஆழமான கருத்துகளையும், சிந்தனைகளையும், சில குறிப்பிட்ட மக்களின் வலியையும் வாழ்க்கை முறையையும் கூட நமக்கு ஆழமாக மனதில் பதித்திருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு சில சினிமாக்கள் பிரபலத்துவத்தின் காரணமாக அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. பல சினிமாக்கள் முகம் தெரியாத காரணத்தால் முடங்கி விடுகின்றன.

அப்படி முடங்கிப்போன ஒரு சினிமா தான் சமீபத்தில் வெளியான ஜமா என்ற திரைப்படம்.

இவ்வளவு விமர்சனம் பேசும் நானே கூட அந்த சினிமாவை திரையரங்கில் தவற விட்டுவிட்டேன் என்பது கசப்பான உண்மை.

தெருக்கூத்து மற்றும் அந்தக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை ஓட்டத்தை விவரித்த படம்.

திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் பல தெருக்கூத்து கலைஞர்களின் குடும்பங்களின் பின்னனி மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கை, வறுமையின் வாட்டம் மற்றும் அவர்களின் உள்ளூர் தொழுகை முறை சம்பிரதாயங்களை (சாமிக்கு செய்யும் திருவிழா) ஆகியவற்றை அழகாகவும், நிதானமாகவும் எடுத்து சொல்லியிருக்கும் சினிமா.

ஒரு தெருக்கூத்து கலைஞன் எப்படி உருவாகிறான், அவன் தெருக்கூத்து மீதும் அந்த ஜமா மீதும் எவ்வளவு காதல் கொண்டிருக்கிறான், அதற்காக தன்னால் ஆன எந்த ஒரு செயலையும் செய்கிறான் என்று நேர்த்தியாக எடுத்துரைத்த படம்.

படத்தின் இயக்குனரே நாயகனுமாவார்.

அவரது தந்தை தெருக்கூத்தின் மீது கொண்ட மோகத்தால், சிறிது சிறிதாக அதைக்கற்றுக் கொண்டு தெருக்கூத்தில் பெரிய ஆளாக அதாவது ராஜபாட் வேடம் கட்டும் ஆளாக உயருகிறார். அவரது நண்பருடன் இணைந்து சொந்தமாக ஒரு ஜமாவை கட்டமைக்கிறார்.

ஆனால் அவரது நண்பனின் துரோகத்தால் அந்த ஜமா அவர் கையை விட்டு அவரது நண்பனின் கைக்கு செல்கிறது. விரக்தியால் குடிக்கு அடிமையாகி இறக்கும் சூழலில் தனது மகனிடம், அந்த ஜமாவை நீ மீட்டெடுக்க வேண்டும் என்ற வாக்குறுதியை கேட்கிறார்.

தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற மகன் என்னவெல்லாம் கஷ்டப்பட்டான், அசிங்கப்பட்டான் என்ற கதையே படம்.

சூழ்ச்சிக்கார நண்பரோ நாயகனுக்கு திரௌபதி போன்ற பெண் வேடங்களை கொடுத்து கொடுத்து அவரை வளர விடக்கூடாது என்றே மட்டம் தட்டி வைத்திருக்கிறார்.

பெண் வேடமிட்டே பழகிய காரணத்தால், அன்றாட வாழ்க்கையிலும் அவருக்கு பெண்கள் போன்ற குணாதிசயமே வந்துவிடுகிறது.

அவரது நடை, தோரணை, பேச்சு எல்லாம் பெண் போல மாறிப்போகிறது.

இதனால் திருமணம் தடைபடுகிறது, பெண்பார்க்கப் போகும் இடங்களில் நடக்கும் லூட்டி நம்மை கலகலக்க வைக்கிறது.

இதையெல்லாம் மீறி இவரை காதலிக்கும் அபிராமியின் காதலும், அதன் ஆழமும் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இவரை அக்கா அக்கா என கேலி செய்யும் ஊர் இளைஞர்கள், முக்கியமான நேரத்தில் இவருக்காக கைகொடுக்கும் காட்சி கைதட்டலை வாங்குகிறது.

முதன் முதலாக இவருக்கு குந்திதேவியாக நடிக்க வாயப்புத் தரப்படுகிறது அந்த சூழ்ச்சிக்கார ஜமா முதலாளியால்.

அந்தக்காட்சியில் இவர் அழுது நடிக்கும் போது நம் கண்களில் சிறிது கண்ணீர் வராவிட்டால் நம் மனதில் துளியும் ஈரமில்லை என்றே அர்த்தமாகிப் போகும்.
அப்படிப்பட்ட நல்ல நடிப்பு.

குந்தி தேவி கர்ணனை இழந்து அழும் காட்சி

இவன்லாம் ராஜபாட்டா என்று சவால் விடும் ஆட்களின் முன் கர்ணமகாராஜா வேடமிட்டு இவர் ஆடும் தாண்டவம், விசிலடிக்க வைக்கிறது.
அதோடு படமும் நிறைவடைகிறது.

ராஜபாட் வேடமிட்டு ஆடும் நாயகன்

அழிந்து வரும் தெருக்கூத்து கலை பற்றி ஆழமாகப் பேசிய படம். பாவம் அந்தப்படமும் பிரபலமடையவில்லை.

இது போன்ற படங்களைப் பற்றி பலரிடமும் பல இடங்களிலும் பேசுவோம்.

கமர்ஷியல் என்ற பெயரில் குப்பையாக எடுத்து வைத்த படங்கள் கோடிகளில் சம்பாதிப்பதும், இம்மாதிரியான நல்ல படங்கள் கண்ணுக்குத் தெரியாமல் அழிந்து போவதும் சினிமாவின் சாபக்கேடு.

வருத்தத்துடன் நினைவுகள்

தொடர்ந்து வாசிக்க சென்ற மாத பதிவுகளை முன்வைக்கும் நினைவுகள் பதிப்பாசிரியர் குறிப்பு – 02

புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்