Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

ஈடு செய்ய இயலாத இழப்பு

அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும்.

காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள்.

ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு காய்கறிகளை நறுக்குகிறார்.

மகன்களோ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். பேரக் குழந்தைகள் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றன.

அந்தக்குடும்பத்தின் மூத்த தலைவர் மெதுவாக வெளியே வந்து தமது மருமகள்களை அழைத்து மகன்களை எழுப்பச் சொல்கிறார்.

அம்மா எழுந்துருக்கல. என்னனு தெரியல பாருங்க என்று கலங்கி நிற்பதைக் கண்டு இரு மகன்களும் தமது தாயை எழுப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவர் எழவில்லை.

சோகமான அவர்கள் குடும்ப மருத்துவரை அனுகுகிறார்கள். மருந்துவர் சிறிது நேரம் முடியாது என்று மறுத்திருந்தாலும் கூட, தமது நண்பர் என்ற காரணத்திற்காக வீடு தேடி வந்து பரிசோதிக்கிறார்.

மருத்துவர் பரிசோதித்து விட்டு உங்கள் மனைவி இறந்துவிட்டார் என்று கூற இடிவிழுந்தது போல மொத்த வீடும் அதிர்ந்தது.

மருத்துவரும் கூட பலமுறை அந்தத் தாயின் கையால் சாப்பிட்டிருக்கிறார். வந்தவர்க்கெல்லாம் முகம் சுழிக்காமல் விருந்தோம்பல் செய்வதில் பலே கில்லாடி.

மொத்த குடும்பத்திற்கும் அன்பு களஞ்சியம். பேரக்குழந்தைகளுக்கு பேரன்பும் அரவணைப்பும் தருவதில் தாயை விட மேலானவர்.

தனக்கு ஓய்வு வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார் போல.

தான் இருந்த வரை வீட்டில் பெரும்பாலான வேலைகளை செய்தவர் இன்று ஓய்வில் இருப்பதால் ஆளாளுக்கு ஒரு வேலை வந்துவிட்டது.

பெரியவர் தமது சொந்த பந்தங்கள் அலுவலக மற்றும் சுற்று வட்ட நட்புகளுக்கு தகவல் சொல்லத் துவங்குகிறார்.

மூத்த பிள்ளை தனது தாய்மாமாவுக்கு போன் செய்து வரசொல்லி, இருவரும் அருகிலுள்ள மின் மயானத்திற்குச் சென்று அங்கே பதிவு செய்து விட்டு இறுதி ஈமகாரியங்கள் செய்யும் ஒரு முகவரிடம் பணம் கொடுத்து அழைத்து வருகிறார்கள்.

இளைய பிள்ளையோ சாமியானா பந்தல் காரனுக்கும் வரும் கூட்டத்திற்கு இருக்கைக்கும், டீ காபி, தண்ணீருக்கும் ஏற்பாடு செய்ய கிளம்பிவிட்டார்.

ஏசியின் குளிர் கூட பிடிக்காத அந்த ஆயா ஐஸ்பெட்டியில் கிடத்தப்படுகிறார். தெற்கு பக்கம் தலை வச்சு படுக்காத என்று அதட்டும் அன்பான ஆயா இன்று தெற்குப் பக்கம் தலை வைத்து படுத்திருக்கிறார்.

அவரது தலைமாட்டில் விளக்கும் பத்தியும் வைக்கப்படுகிறது. கால்கள், கைகள் கட்டப்பட்டு மூக்கு துவாரங்கள் பஞ்சு வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது.

ஆயாவின் அன்பில் கரைந்த உள்ளங்கள் உற்றார் உறவுகள் என அனைவரும் வந்து தமது இறுதி மரியாதையை செய்கிறார்கள்.

ஆயாவின் தங்கைகளும், மகளும் மருமகள்களும் துக்கம் தாளாமல் அழுது தவிக்கிறார்கள்.

ஒரு பேரன் பேத்தி லேசாக கண் கசக்கினாலே உடைந்து்போகும் ஆயா இன்று என்னவோ கல் நெஞ்சக்காரியாக இத்தனை பேரின் அழுகைக்கும் செவி சாய்க்கவில்லை.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது.

ஈம காரியம் செய்யும் ஆளோ, பச்சை ஓலைநில் அழகாக பாடை கட்டிவிட்டு சங்கை ஊத ஆயா மெதுவாக தூக்கி வரப்பட்டு வீட்டு வாசலில் கிடத்தப்படுகிறாள்.

ஆயா இத்தனை நாள் குளிப்பாட்டிய பேரன் பேத்திகள் உட்பட சொந்த பந்தம் அனைத்தும் ஆயாவின் தலையில் எண்ணெயும் சீயக்காயும் தடவி குளிப்பாட்டுகிறார்கள்.

ஆயாவின் தாய்வீட்டிலிருந்து வந்த புதுச்சேலை உடுத்தப்பட்டு மஞ்சள் பூசப்பட்ட அழகு முகத்துடன் அழகாக ஜொலிக்கிறாள் ஆயா. அப்படியே மாலை தோரணம் கட்டப்பட்ட வண்டியில் ஏற்றி அவரை மின் மயானத்துக்கு கொண்டு வருகிறார்கள்.

ஈம காரியம் செய்யும் ஆள் அரிச்சந்திரனிடமும் பைரவரிடமும் பிராரர்தனை செய்து விட்டு, நமசிவாய போற்றி என சிவபெருமானை நோக்கி பால் பாடி இனி எனக்கு எந்தப்பிறவியும் வேண்டாம் என்ற வேண்டுதலை வைத்து பெரியவரிடம் மஞ்சள் கயிறாலான தாலியை கட்ட சொல்லி, தங்கத்தாலியை கழற்றி விடுகிறார்கள். ஆயாவின் உடலிலிருந்த மொத்த நகைகளும் கழற்றப்பட்டது.

ஆயாவின் இறுதி சடங்குக்காக வந்திருந்தவர்கள் வாய்க்கரிசி போட, ஆயாவின் மகன்கள் மண்பானை சுமந்து இறுதி காரியம் முடித்த பிறகு இறுதியாக முகம் பாருங்கள் என்று சொல்லி ஆயாவின் உடல் ஒரு வெப்ப அறைக்குள் தள்ளப்பட்டது.

ஒரு சில மணி் நேரத்தில் சிறிது சாம்பல் தரப்பட்டது.

அதையும் கடலில் கரைத்து விட்டு வீடு திரும்பிய உற்றார் உறவுகள் என யாரும் இல்லாத வெறிச்சோடிய வீட்டில் தன்னை வரவேற்று உபசரிக்கத் தன் மனைவி இல்லை, ஏம்ப்பா இவ்வளவு நேரம் எனக் கேட்கும் தாய் இல்லை, ஏதாவது தொன தொன என திட்டும் ஆயா இல்லை என்பது அந்த குடும்பத்திற்கு உணர்த்தப்படுகிறது.

இது இன்றோடு முடியவில்லை. இனிதான் ஆரம்பம்.

தனிமையின் வேதனை என்னவென்று புரிந்து கொள்ள பிறக்கும் புதிய அத்தியாயம் இது.

ஆனால் என்ன செய்வது. ஆயிரம் தான் அழுதாலும் புரண்டாலும் மாண்டவர் திரும்ப வரப்போவதில்லை.
அவர்களின் நல்ல நினைவுகளோடு, அவர்கள் வாழும்போது நமக்குக் காட்டிய அன்பையும், நல்வழியையும் பின்பற்றி வாழ்ந்தால் நம்மோடு அவர்கள் பயணிப்பதை உணரலாம்.

ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்த ஒவ்வொருவருக்கும் இது வெறும் கட்டுரையாக இருக்காது என்பதை அறிவேன்.

இழப்பின் வலியை உணர்ந்தவன் நான்.

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள் முன்பக்கம் மற்றும் சென்ற மாத பதிவுகளை முன்வைக்கும் ஆசிரியர் குறிப்பு.