Categories
கருத்து தமிழ்

வாடகை வீட்டு உரிமையாளர்களின் அபத்தமான நிபந்தனைகள்

வாடகை வீடு என்பதை இங்கு பெரும்பாலான நடுத்தர மக்கள் கடந்து வந்திராமல் இல்லை. அதுவும் தான் படித்த படிப்புக்குத் தகுந்த வேலை தேடி பெருநகரங்களுக்குக் குடியேறும் இளைஞர்கள், திருமணம் ஆகும் முன்பு பேச்சிலர்களாகவும் (மணமாகாத இளைஞர்கள்) , பிறகு திருமணம் முடித்து குடும்பத்துடனும் வாடகை வீடுகளிலேயே காலம் தள்ள வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

அப்படியான வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைக்குக் குடி வருபவர்ரகளிடம் காட்டும் அதிகாரத்தைப் பற்றிய எனது சில அனுபவங்களை, நினைவுகளைப் பகிர்கிறேன்.

பேச்சுலராக நான் தனியாக வாடகைக்கு வீடு தேடிய போது சில கறாரான உரிமையாளர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் போட்ட சில நிபந்தனைகள் இவை.

என்னை சந்திக்க யாரும் வீட்டுக்கு வரக்கூடாது.
மின்சார கட்டணம் யூனிட்டுக்கு பத்து ரூபாய்.
இரவு பத்து மணிக்கு கதவு சாத்தப்படும். அதற்குப் பிறகு நானே சாலையில் தான் உறங்க வேண்டும்.

சாலையில் உறங்குவதற்கு நான் எதுக்குடா வாடகை தரனும்?

இதுபோல அதிகாரம் தூள் பறக்கும் பல வாடகை வீடுகளை சென்னையில் ஆங்காங்கே காணலாம். சில வீடுகளில் அசைவம் சமைக்கக் கூடாது என்றும், சில வீடுகளில் பூஜைகள் செய்யக்கூடாது என்றும், பல வீடுகளில் சொந்த பந்தங்கள் என யாரும் உங்களைத் தேடி வரக்கூடாது என்றும், வந்தாலும் தங்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை கேள்விப்பட்டு இருக்கிறேன்.

பணம் மட்டுமே வாழ்க்கை என்று பணம் பணம் என்று ஓடக்கொண்டிருந்தால் கூட மனிதனுக்கு நிம்மதி என்பது தனது உற்றார் உறவினர்களுடன் அளவளாவி மகிழ்வதில் தானே உள்ளது. சொந்தம் என்று வருபவர்கள் இங்கேயே தங்கி விடவா போகிறார்கள்? இந்தக்காலத்தில் அதிகபட்சம் 4 நாட்கள் தங்கியிருக்கும் சொந்த பந்தங்களைக் காண்பதே அரிதாகி விட்டது. அப்படியிருக்க இப்படி நிபந்தனைகளால் அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

கேட்டால் தண்ணீர் பற்றாக்குறை என்பார்கள். நம் வீட்டில் சொந்தம் 4 நாட்கள் இருந்தால், நாமும் அங்கே ஒரு 4 நாட்கள் போகத்தானே போகிறோம். அப்போது அந்தத் தண்ணீரின் அளவு சரியாகி விடாதா?

வாடகை வீடுகளில் பலவற்றில் கட்டாயம் செல்லப்பிராணிகள் தடை. மனிதர்களுக்கே தடை இருக்கும் போது மிருகங்களையா விடப்போகிறார்கள்?

இன்னொரு எரிச்சலூட்டும் விஷயம் மாத மாதம் கரண்டுக்கு அவர்கள் யூனிட்டுக்கு இவ்வளவு என்று வசூலிப்பது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் அரசாங்கம் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தரும்போது
இவர்கள் யார் நடுவில்?

இது மிகப்பெரிய தவறு.

ஒரு வீட்டை நம்மிடம் வாடகைக்கு விட்டுவிட்டால் அதில் குடியருக்கும் வரை அது நமது பொறுப்பில் வந்து விடுகிறது. உரிமையாளரிடம் தகவல் சொல்லாமல் வீட்டின் வடிவமைப்பை மாற்றுதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் போன்ற விஷயங்களுக்கு உரிமையாளர்கள் தடை விதிக்கலாம். அல்லது குடும்பம் நடத்துவதற்காக வாடகை எடுத்து வணிகம் செய்வதை தடை செய்யலாம்.

அதை விடுத்து வீட்டில் அந்த லைட் போடாதே, இந்த லைட் போடாதே, பத்து மணிக்கு கதவை சாத்து, சொந்தக்காரன் வரக்கூடாது, குழந்தைகள் சுவரில் கிறுக்கக் கூடாது, குதித்து விளையாடக்கூடாது்,
இப்படியெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது அபத்தம்.
எப்படியும் வீடு காலி செய்யும் போது சுவரில் வண்ணப்பூச்சுக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோமே?

பிழைப்புக்காக ஊரை விட்டு உறவுகளை விட்டு, மனதில் பெரிய பாரத்தை சுமந்து கொண்டு பணத்துக்காக தினம் தினம் நரகத்தில் இருப்பது போல மனதில் தனது ஊர் நினைவுகளைச் சுமந்து கொண்டு நகரத்து வாழ்க்கையை பல்லைக் கடித்துக்கொண்டு வாழும் பாவப்பட்ட மக்களிடம் வீட்டு உரிமையாளர்கள் காட்டும் இந்த கண்டிப்பு அநியாயம். இதில் சில உரிமையாளர்களும் வெளியூரில் இருந்து பிழைக்க வந்தவர்கள் தான் என்பதை நினைக்கும் போது இன்னும் வேதனை அதிகம்.

எல்லாருக்குமே “சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போலாகுமா” என்பது ஒரு மறுக்க முடியாத உணர்வு தான்.

மனதில் வலியோடு இருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் நிம்மதியாக இருக்க விடுங்களேன் வீட்டு உரிமையாளர்களா?

நினைவுகளின் சார்பாக அன்பான வேண்டுகோளாக.

நினைவுகள் வலைதளத்தில் போன மாதம் வெளிவந்த சிறப்பான பதிவுகளை தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், நினைவுகள் பதிப்பாசிரியர் குறிப்பு – 02.