Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கல்விக்கூடத்தில் ஆன்மீகம் தவறா?

சமீபத்திய பரபரப்பான செய்தி பற்றிய சிறிய அலசல் தான் இது.

அரசுப்பள்ளியில் ஆன்மீகம் பேசிய ஒருவரை பாதியில் அவரது பேச்சை நிறுத்தச் செய்து அவர்மீது சர்ச்சை பேச்சு பேசிய காரணத்திற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதை இரு வேறு அரசியல் குழுக்கள் வரவேற்றும் , எதிர்த்தும் பேசி வருகிறார்கள்.

அதாவது பள்ளியில் ஆன்மீகம் பேசினால் என்ன தவறு? அவர் மறுபிறவி பற்றி தானே பேசினார், திருக்குறளிலும் மறுபிறவி பற்றி பல கருத்துகள் உள்ளனவே, அப்படியென்றால் திருக்குறளையும் தடை செய்வீர்களா? என்றெல்லாம் ஒரு சாரார் வன்மையாக இதை கண்டித்து வருகின்றனர்.

இன்னொரு சாரார் அவர் பேசியது முற்றிலும் தவறு என்பதையும், அந்தப்பேச்சைத் தட்டிக் கேட்ட ஆசிரியரையும் பாராட்டி வருகிறார்கள்.

சரி அப்படி என்ன பேசினார் அந்த மகா விஷ்ணு.
யார் அவர்? பரம்பொருள் என்ற அமைப்பை நடத்தி வரும் ஆன்மீக சொற்பொழிவாளர்.

அவர் என்ன பேசியிருக்கிறார் என்றால், வாழும் இந்தப்பிறவியில் நாம் நல்லதை நினைக்க வேண்டும் நல்லதை செய்ய வேண்டும். அப்படி ஏதாவது தவறு செய்தால் அடுத்த பிறவியில் நாம் ஏதோ குறைபாட்டுடன் பிறந்து இதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

மேலும் இப்போது ஊனமுற்று பிறந்திருப்பவர்கள் அனைவரும் முற்பிறவியில் செய்த செயலின் விளைவாகவே இப்படி அவதிப்படுகிறார்கள் என்று.

உடலில் ஒவ்வொரு உறுப்பும் இப்படி வேலை செய்கிறது. இந்த பிரச்சினைக்கு இந்தக் கிருமியோ இந்தக் குறைபாடோ காரணம் என்று அறிவியல் சொல்லித் தரப்பட வேண்டிய மாணவ மாணவிகள் மத்தியிலே, ஊனம் என்பது முற்பிறவி பலன் என்று பேசினால், அவர்கள் குழம்பி விட வாய்ப்பு உள்ளதே?
மேலும் இனி வரும் காலங்களில் அவர்கள் யாராவது ஊனமுற்றோரை கண்டால் அவர்களின் மீதான அவர்களது பார்வை எப்படி இருக்கும்?
இந்தாளு செஞ்சதுக்கு இப்ப அனுபவிக்கிறான் என்ற ரீதியில் அல்லவா இருக்கும்?

ஆதாரமில்லா ஒரு விஷயத்தை உவமையாக்கி நல்லது சொன்னால் பரவாயில்லை.

திருக்குறள் போல ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் காவல் நிற்கும் என்று.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினரை அவதூறு பேச ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை இங்கே உவமையாக்குவது சரியல்ல.

ஊனம் என்ற சொல்லே காயப்படுத்தும் என்ற காரணத்தால், அதை ஒழித்து மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கும் சமூகத்தில் வந்து உனது குறைபாட்டுக்கு காரணம் நீ முற்பிறவியில் செய்த தவறு என்று பிற்போக்குத் தனமாக பேசினால் கண்டனம் எழாமல் என்ன செய்யும்.

அந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர், தன்னைப்போல குறைபாடுகளுடன் உள்ள மக்களுக்கு எதிரான அவதூறு பேச்சுக்கு எதிர்வினை ஆற்றியது தவறு என்றால், அந்த பேச்சாளர் இப்போது ஏன் தனது மீது போடப்பட்ட வழக்குகளுக்கு எதிர்வினை ஆற்றுகிறாரோ?

தனது முற்பிறவியில் செய்த ஏதோ கடுமையான பாவத்தின் விளைவால்தான் தற்போது சிறை செல்கிறோம், எல்லாம் அவன் செயல், மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்று சிரித்துக் கொண்டே சிறை செல்லலாமே!

தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற நிலையில் இருக்கும் இவரா முழு ஆன்மீகவாதி? இவரது பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

நல்லதை பேசுவோம், நல்லவைகளை விதைப்போம்.

அன்புடன் நினைவுகள்.