தமிழ்நாட்டின் இன்னும் கூட சாதி பார்க்கும் ஏதோ ஒரு ஊரின் சத்துணவு ஆயா அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அவர் அந்தப்பணியை செய்ய விடாமல் ஒரு கூட்டம் தடுக்கிறது.
சாதி என்றால் என்னவென்றே தெரியக்கூடாத 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அந்த ஆயா கீழ்சாதி என்று அவர் சமைத்த உணவை குப்பையிலிடுகின்றனர்.
கலெக்டர் தலையிட்டு அந்த ஆயாதான் இனி சமைப்பார் என உறுதி ஆன பின்னர், சாதி வெறி காரணமாக ஆயாவுக்கு தீ விபத்து ஏற்படச் செய்து தொடர் பிரச்சினைகள் கொடுத்து ஊரை விட்டு ஓடும்படி செய்கின்றனர்
காலம் கடந்து விட்டது
அந்த ஊரில் தான்தான் பெரியவன் என்று சுற்றிக் கொண்டிருந்த மாணவர்கள் பிழைப்புக்காக சென்னை வந்தனர்
இங்கே எவன் என்ன சாதி என்றெல்லாம் கேட்டுப்பழக வாய்ப்பு இல்லை, சமத்துவம் என்பது சரளமாக வேறு வழியின்றி பின்பற்றப்படுகிறது.
ஒரு நாள் அந்த மாணவர்களில் சிலர் ஒரு சந்திப்பை நிகழ்த்தினர்.
அருகே உள்ள மிகப்பிரபலமான உணவகத்தில் சாப்பிடச் சென்றனர்.
அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு உணவக ஊழியர்கள் பணம் வாங்கவில்லை. ஏன் என்று கேட்டால், எங்க ஓனரம்மா, எம் புள்ளைங்க அதுங்க என்று சொன்னதாக சொல்கிறார்கள்
ஓனரம்மாவைத்தேடிப்பிடித்த அந்த இளைஞர்களின் கண்கள் குளமாயின,
யார் சமைத்த சாப்பாட்டை குப்பையில் எறிந்தார்களோ, யாரை இழிசொல் பேசி அவமதித்து நெருப்பு வைத்து ஊரை விட்டுத்துரத்தி அடித்தார்களோ, அதே ஆயா!
ஏம்மா, நாங்க வந்த உடனே எங்கள வந்து பாத்துருக்கலாமே என்று அதிலிருந்த ஓர் இளைஞன் கேட்டதற்கு.
புள்ளைங்க இத்தனை வருஷம் கழிச்சு வந்துருக்கீங்க, என் முகத்தப்பாத்துட்டு சாப்புடாம போயிட்டீங்கன்னா, இந்த ஆயா மனசு தாங்காதுலப்பா என்று வெள்ளந்தியாக அந்த அன்பு தேவதை கூறியதைக்கேட்டு ஒட்டுமொத்த இளைஞர்களும், கதறி அழுது அந்த ஆயாவின் கால்களைத் தமது கண்ணீரால் கழுவி தன் பாவத்தைத் துடைத்துக்கொண்டனர்.
சாதி என்பது மனிதனின் தகுதியை நிர்ணயிக்குமெனில்
அது என்றைக்குமே மனிதனை மனிதனாக வாழ விடுவதில்லை.
One reply on “பரிமாறும் கைகள்”
அருமையான பதிவு.