Categories
கருத்து தமிழ்

இரவு விழிப்பும், ஆரோக்கியமற்ற உணவும் – சீரழியும் சுய கட்டுப்பாடு

பூமியின் சுழற்சி மாறினால் நமக்கெல்லாம் எவ்வளவு சிரமமும், இடையூறும், ஏற்படுமோ, அது போலத்தான் நமது அன்றாட சுழற்சி முறை தவறும் போது நமது உடல் சிரமத்திற்குள்ளாவும் என்பதை உணராமல் நம்மில் பலரும் சுய கட்டுப்பாடுகளை இழந்து சந்தோஷம் என்ற பெயரில் கூத்தடிக்கிறோம்.

காலை உதிக்கும் சூரியன் மாலை மறைவதைப்போல, மனிதன் தனது பணி நேரம், சாப்பாடு நேரம், உறங்கும் நேரம் என்பனவற்றில் ஒழுக்கமாக இருப்பது மிக அவசியமானது.

மின்சாரம் வரும் காலத்திற்கு முன்னர் இருட்டிய பின்பு, அதாவது வீட்டில் விளக்கேற்றிய பிறகு யாரும் வீட்டை விட்டு வெளியேறுவதே இருந்திருக்கவில்லை. அவசர, அவசிய காரியங்களோ அல்லது ஏதாவது பண்டிகை நாட்களிலோ மட்டும் இரவில் கண் விழித்திருந்தார்கள்.

மின்சாரம் என்பதல்ல விஷயம். எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் என்னுடைய பள்ளி படிப்பு முடியும் வரையிலும் அதாவது என்னுடைய பதினேழு வயது வரையிலும் நான் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த காரணத்தால், இரவு உறக்கம் என்பது கட்டுப்பாட்டோடு நேரம் தவறாமல் அதிகபட்சம் இரவு பத்து மணி அல்லது பத்தரை மணியாக இருந்தது. அதுவும் தேர்வுக்கு படிக்க நேரம் நீட்டிக்கப்பட்ட காரணத்தால். இல்லாவிட்டால் 9.30 மணிக்கெல்லாம் தூங்கும் பழக்கமே இருந்தது.

என்னுடைய அந்த பதினேழு வயது வாழ்க்கையில் இரவு அதிக நேரம் விழித்திருந்த நாட்களை கணக்கெடுத்து விடலாம். திரையரங்குகளில்
இரவுக் காட்சிகளெல்லாம் குடும்பங்களுக்கானது அல்ல என்ற மனப்பான்மை இருந்தது. உணவுக் கட்டுப்பாடும், உணவு உட்கொள்ளும் நேரமும் வரையறைக்குள் இருந்தது.

படிக்கிறதா இருந்தாலும் இரவு 8.30 மணிக்கு சாப்பிட்டு முடித்து விட்டு அப்புறம் படி என்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தோம்.

இன்று எல்லாம் மாறி நிற்கிறது. சில விஷயங்களை பார்க்கும் போது மனதில் சின்ன நெருடல்.

ஆமாம். இப்போதெல்லாம் திரையரங்குகளில் இரவுக்காட்சிகளில் பெரும்பாலும் குடும்பங்களைத் தான் பார்க்க முடிகிறது. அதிலும் இரவு 12 மணிக்கு விடப்படும் இடைவேளையில் முட்டை பப்ஸ், சிக்கன் பப்ஸ் பாப்கார்ன், நேச்சோஸ், ப்ரைஸ் என்று கடினமான எண்ணெய் உணவுகளை தானும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள்.
இது எப்படிப்பட்ட ஆரோக்கிய சீரழிவு என்பதை சிறிதும் உணராமல்.

நான் நேற்று மாலை சினிமா பார்த்து விட்டு, இரவு உறவினர் ஒருவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.50 ரயிலுக்கு வழியனுப்பி விட்டு, வெளியே பிற பகுதிகளில் உணவு கிடைக்குமோ என்ற சந்தேகத்தில் ரயில் நிலையத்திலேயே சாப்பிட்டு வெளியேறினேன்.

மவுன்ட் சாலையை கடக்கும் போதுதான் உணர்ந்தேன், என்னுடைய எண்ணம் தவறென்று.
அங்கிருந்த பெரிய அசைவ கடைகள் இரவு 12.30 மணி வரை இயங்கும் என்றும், சைவ கடைகள் இரவு 2 மணி வரை இயங்கும் எனவும் எழுதப்பட்டிருந்தது.

இரவு 11.30 மணியளவில் அனைத்து உணவகங்களிலும் அத்தனை கூட்டம். மெதுவாக வேளச்சேரியை நெருங்கும் போது சிறிய தூக்கக் கலக்கம். சரி ஒரு டீயோ காபியோ குடிக்கலாம் என்று ஒரு பிரபல காபி கடையில் வண்டியை நிறுத்தினேன்.

சரியாக இரவு பனிரெண்டு மணி. ஒரு அப்பா அவரது ஆறு ஏழு வயது மதிக்கத்தக்க பையனோடு அங்கே வருகிறார். அவனுக்கு ஒரு ஹார்லிக்ஸ் சொல்லிவிட்டு, பனீர் கட்லெட்டை வாங்கி பாசத்தோடு ஊட்டி விடுகிறார்.

பாமாயிலில் ஊறிய கட்லெட்டை பாசத்தோடு இரவு பனிரெண்டு மணிக்கு ஊட்டினால், குழந்தையின் குடல் என்ன ஆவது என்று யோசித்து முடிப்பதற்குள் இன்னொரு குடும்பம் காரில் வந்து இறங்குகிறது.
அவர்களில் ஒரு வயதான அம்மா, ஒரு கணவன் மனைவி, அவர்களின் 3 அல்லது 4 வயது குழந்தை.

அந்தப்பாப்பா என்னத்த வாங்கி முழுங்கப்போவுதோ 12 மணிக்கு?

இவர்களெல்லாம் யார்?

பகல் முழுக்க இவர்களுக்கு என்ன வேலை? நேற்று விடுமுறை நாள் தானே?

ஏதோ வருடத்தில் சில நாள் கொண்டாட்ட மனநிலையில் இரவு முழுக்க அல்லது நெடுரேம் விழித்து ஊர்சுற்றுவது நியாயம். இப்படி வாரம் தோறும் இரவு கூத்தடிக்க என்ன அவசியம். அதிலும் சிறு பிள்ளைகளை இப்படி ராப்பாடிகளாக வளர்த்தால், அவர்களின் உணவுக் கட்டுப்பாட்டை நீங்களே சீரழித்தால் என்ன பாசம் உங்களுடையது?

ஒரு சைவ உணவகம் இரவு 2 மணி வரை இயங்கும் என்று போட்டிருக்கானே? இது என்ன ஆரோக்கியமான பழக்கம் என்பது புரியவில்லை.

இப்படி சில விஷயங்களில் மிகப்பெரிய கோட்டையை விடும் இதே சமுதாயம் ஆரோக்கியத்தைப் பற்றிய கேள்வி வரும்போது குடிகாரர்கள், புகைப்பவர்களை மட்டுமே கை காட்டி விட்டு தான் யோக்கியனாக நினைத்துக் கொள்கிறார்கள், முட்டாள்தனமாக.

குடிப்பவனின் குடல் மட்டும் வெந்து போகாது. இரவு 12 மணிக்கு கட்லெட் சாப்பிட்டால், அதுவும் வாரம் வாரம் இப்படி ஒரு நாளில் உடலை வாட்டி எடுத்தால் சிறு வயது பிள்ளை பருவ வயதை அடையும் முன்பே பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம்.

பதினெட்டு வயது வரை பிள்ளைகள், இரவு 12 மணிக்கு பேய் வரும் என்று பயந்து தூங்குவது ஒரு நல்ல விஷயம். அவர்கள் பதினெட்டு வயதுக்குப் பிறகு பேய் என்பது இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஐந்து, ஆறு வயது பிள்ளைகளை பேய்போல இரவு நேரத்தில் உலாத்தி மகிழ்வதை, நேரக் கட்டுப்பாடு இல்லாமல் உண்பதை, ஊட்டுவதை தவிர்க்கலாமே?

நினைவுகள் வாசகர்களின் நலன் கருதி.

இதற்கு முன் வெளிவந்த குழந்தைகளுக்கான திரை நேர அறிவுரை பற்றி வாசிக்க.

இரவு பனிரெண்டு மணிக்கு 3 வயது பாப்பா காபி கடையில்.