ஆடு 🐐 வெட்டலாமா?
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் GOAT படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்க விரும்புபவர்கள் எச்சரிக்கையாக அணுகலாம்.
ஒரு பெரிய நடிகரின் படம் அதுவும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இரண்டு மூன்று நாட்களாக திரையரங்குகளில் இணைய வழி முன்பதிவில் யாருக்குமே சரியாக நுழைவுச்சீட்டு கிடைக்காமல், அடித்துப்பிடித்து எப்படியோ ஒரு நுழைவுச்சீட்டைப் பெற்று படம் பார்க்க அமரும் போது எதிர்பார்ப்பு இல்லாமல் அமர முடியாது.
அந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சந்தோஷம் இல்லாவிட்டால் ரசிகர்கள் அதை கழுவி ஊற்றுவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய உதாரணம். இந்தப்படம் தற்போதைய உதாரணம்.
ஆமாம் நான் இந்தப்படத்தை கழுவி ஊற்றத்தான் போகிறேன். ஏனென்றால் இதில் பாராட்டுவதற்கு மிகப்பெரிய விஷயங்கள் இல்லை. இருக்கும் சில விஷயங்களும் நமது கோபத்தில் மறைந்து போகும் அளவில் தான் உள்ளது. அதையும் பார்க்கலாம்.
படம் துவங்கியவுடன் கதாநாயகனின் அறிமுகம் அதற்கு ஒரு சண்டைக்காட்சி, அதில் கதாநாயகனின் மற்ற நண்பர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
சண்டைக்காட்சியில் நமக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி இருக்கிறது. கொஞ்சம் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சண்டைக்காட்சியின் நீளம் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். வசனங்கள் கன்றாவியாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
“நிறைய பேரு காந்தி வேஷம் போட்டு பாத்துருக்கேன், காந்தியே வேஷம் போடுறத இப்பதான் பாக்குறேன்“ என பல்லாயிரம் மைல் தாண்டி தன்னை கொல்ல வந்த தமது எதிரியிடம் மங்குனி வில்லன் பேசும் வசனம். வில்லனும் நம்மை பயமுறுத்தவில்லை அவரது வசனங்களும் மங்குனித்தனமாக நம்மை வெறுப்பேத்துகிறது.
வழக்கம்போல கதாநாயகன் டப்பாக்கு பின்னாடி உக்காந்திருக்க, அடியாட்கள் இயந்திர துப்பாக்கியில் இருக்கும் மொத்த தோட்டாவும் தீர்ந்து போகும் வரை டுபு டுபு டுபு என சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள், மேலேயும் கீழேயும்.
அவர்கள் துப்பாக்கியில் தோட்டாக்கள் காலியானதை கணக்குபண்ணிக் கொண்டிருந்த கதாநாயகன் தன் துப்பாக்கியிலிருந்த 3 தோட்டாவை வைத்து சரியாக 3 அடியாட்களை சுடுகிறார்.
பெரிய தீவிரவாத கும்பலான வில்லன் கும்பலின் மற்ற அடியாட்களிடம் வேறு துப்பாக்கியே இல்லை. கதாநாயகன் கையாலே சண்டை போடுகிறார். சரிதாம்பா நீ வீரன்தான் ஒத்துக்குறோம், சண்டைய முடி என்று நாம் சொன்னதும் சண்டை முடிகிறது.
இதற்குள் ஒரு ட்ரெயினை எரித்து, ஒரு ஹெலிகாப்டர் காட்சி வைத்து பில்டப் செய்து கதாநாயகனை கயிற்றில் தொங்கவிட்டு ஹெலிகாப்டர் பறக்க மம்மி பட பாணியில் பட டைட்டில் வருகிறது.
இந்த சண்டையில் மீட்ட யுரேனியம் எதுக்குனே கடைசி வரை சொல்லல. தண்டத்துக்கு ஒரு சண்டை.
சண்டை முடிந்த உடனே பாட்டு. அப்போதே முடிவாகிவிட்டது படம் எப்படி என்று.
பாட்டு முடிந்ததும் ஒரு அதரப்பழசான க்ரிஞ்ச் காமெடி. குடித்து விட்டு மனைவியிடம் மாட்டிக்கொண்டு சமாளிப்பது. மறுநாள் காலை மணியடித்து பூசை செய்வது.
அடுத்து கொஞ்ச நேரம் படம் ஓடுது. சில வாட்ஸ்அப் பார்வேர்டு காமெடி, சில க்ரிஞ்ச மசாலா காமெடி என. அப்புறம் குடும்பத்தோட தாய்லாந்து போறாங்க.
அங்க என்னத்தையோ உயரமான கட்டிடத்துல இருக்கிற ரூம்ல இருந்து எடுக்குறாங்க அதுவும் எதுக்குனு சொல்லல.
இப்படி ஹீரோயிசம் காட்டுவதற்கென தேவையில்லாத சில காட்சிகள் நம்மை சலிப்பில் ஆழ்த்துகிறது.
அதையடுத்து வரும் சண்டைக்காட்சி நல்ல ஒரு சண்டை மற்றும் சேஸ். ஆனால் அதற்கடுத்து விஜய் தனது மகனைத்தொலைக்கும் காட்சி அபத்தம்.
ஒரு இன்டலிஜன்ட் ஆபிஸருக்கு, காணாமல் போன குழந்தையை ஆஸ்பத்தரியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பார்க்க இயலும் என்பது தெரியாமல் போனது அல்லது குழந்தை காணமல் போனால் ஆஸ்பத்திரியில் சிசிடிவி யை காட்ட மாட்டார்களா?
போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்து அவர்கள் கண்டுபிடிக்கும் வரை இவர்கள் எதுவும் செய்யவில்லை.
சரி விஜயின் மகன் இறந்ததாக சொல்லப்படுகிறதே?
போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடற்கூறாய்வில் தெரிந்து விடாதா அது அவனில்லை என்று? 2000-2005 காலகட்டங்களில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.
இப்படி மங்குனித்தனமான லாஜிக் ஓட்டைகளை விட்டொழிந்து என்டர்டெயினர் என்ற ரீதியில் படத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
ஏதோ ஒரு பிரச்சனையை சமாளிக்க இந்தியாவில் வேற யாருமே இல்லாத காரணத்தால் விஜய் ரஷ்யா போகிறார். அங்கே அவ்வளவு அமுளி துமிளியில் வந்திருக்கும் அதிகாரி கையால் அடித்து கட்டி உருண்டு சண்டை போடும் அளவிற்கு காவல் கட்டமைக்கப்பட்டிருந்ததை வைத்தே நாம் கண்டுபிடித்து விடலாம், விஜயோடு முகமூடி அணிந்து சண்டையிடும் நபர்களில் யாரோ ஒருவர் முக்கியமான ஆள் என்று.
ஆம் அது அவரது காணாமல் போன மகன். இது ட்விஸ்ட் தான் என்று ஒப்புக்கொள்ளுங்கள். அந்த மகன் இறந்துவிட்டான் என்று நம்பிய நமக்கும் திரைக்கதை வழியாக வந்த ஆச்சரியம்.
ஏனென்றால் குட்டி விஜய் வருவார் என்று யாருக்குமே தெரியாதே. யாருமே ட்ரெயிலர்ல பாக்கலையே? ட்ரெயிலரில் வந்த குட்டி விஜய் நமக்கெல்லாம் சொல்லி விடுகிறார், பாங்காக்கில் நான் சாகவில்லை என்று. அதனால் நான் ஏதோ விமர்சனம் எழுதி கதையை வெளிப்படுத்தியதாக நினைக்க வேண்டாம்.
அங்கே அப்பாவும் மகனும் ஒரு கும்பலிடமிருந்து சண்டையிட்டு தப்பித்து நாடு வந்து சேர்கிறார்கள். ஆனால் விஜய் ரஷ்யாவுக்கு எதுக்குப் போனாரோ அந்த விஷயம் அதோடு முடிந்தது.
இது மூன்றாவது விஷயம், ட்ரெயினில் எடுத்த யுரேனியம், பாங்காக்கில் எடுத்த ஏதோ ஒன்று, இப்போது இந்த காரியம்.
ஒரு தீவிரமான விஜய் ரசிகன் இதுதான் இன்டர்வெல் சீனா இருக்கும்னு நினைச்சேன். ஆனா அடுத்தும் படம் ஓடுது, இன்டர்வெல் வேற லெவல்ல வச்சிருந்தாங்க என்று சொன்னார். அதன் ஆழ்ந்த அர்த்தம் என்னவென்றால் இந்த ரஷ்யா சண்டைக்காட்சி நடக்கும் போதே நமக்கு இன்டர்வெல் எப்படா விட்டுத் தொலையுவீங்க என்ற சலிப்பு வந்துவிட்டது என்பது.
ஒரு இன்டலிஜன்ட் அதிகாரி, வந்திருப்பது நமது மகன் தானா? என்ன நோக்கத்தோடு வந்திருக்கான்? என்றெல்லாம் ஆராயாமல் வீட்டுக்குள் தனது மகனை சேர்த்து குடும்பத்தோடு கும்மி அடிக்கிறார்.
இன்டலிஜன்ட் அதிகாரி என்பவர்கள் தன்னோட இருக்கும் தனது தாய் தகப்பனையும் தேவைப்பட்டால் சந்தேகப்படும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படியிருக்க இந்த 5 வயதில் காணாமல் போய், 24 வயதில் திரும்பி வந்த பித்தளை மூஞ்சி மீது அவர் சந்தேகப்படவில்லை என்பது அபத்தம்.
(பித்தளை மூஞ்சி என்ற வார்த்தை உபயோகம் விஜயை கேலி செய்வதற்காக அல்ல- சிறுவயது விஜயை நாம் பார்த்து வளர்ந்திருக்கிறோம்.
இந்தப்படத்தில் டி ஏஜிங் என்று, செயற்கையான ஒரு முகத்தை காட்டியிருக்கிறார்கள். உண்மையிலேயே அது நமது இளைய தளபதி என்று முழுதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை.) செய்வன திருந்தச் செய் என்பதை மறந்தது இந்த GOAT TEAM.
எப்போதும் களத்திலே இறங்கி வேலை செய்யாத ஜெயராமுக்கு ஏதோ ரகசியம் கிடைக்கிறது. சரி அது எங்கேயோ கிடைத்தது என்று வைத்துக்கொள்ளலாம்.
அதை அவர் விஜயிடம் தெரிவிக்க விரும்பி அழைக்கிறார். (நான் விஜய் என்று சொல்வது வயதான ஒரிஜினல் விஜயை. இன்னொரு கதாபாத்திரத்தை பித்தளை மூஞ்சி என்றே அழைப்பது பொருத்தமானது. டிஏஜிங் அந்த லட்சணத்தில் தான் இருந்தது).
அப்போது ஒரு ஹெல்மட் காரன் வந்து சண்டை போட்டு ஜெயராமை கொன்று விடுகிறான். சண்டை சிறிய அளவில் இருந்திருந்தால் நாம் யூகித்திருக்க மாட்டோம். ஆனால் இவர்கள் கொடுத்த பில்டப்பிலேயே தெரிந்து விட்டது அது பித்தளை தான் என்று. அதை ட்விஸ்ட் என்று சொல்லி இடைவேளை விட்டார்கள்.
யப்பா சாமி ஒரு வழியா இடைவேளை விட்டாச்சு என்று நான் மூச்சு விட்ட தருணத்தில் செகன்ட் ஆப் தான் நல்லா இருக்கும் னு ஏற்கனவே சொன்னாங்க என்று ஒருவன் சொன்னான்.
சரி அதையும் பார்த்து விடலாம். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அல்லவா, ஜெயராமை கொன்றுது யார் என்று. அது எதற்காக என்பது தான் படத்தின் கதை.
தமிழ்சினிமாவில் தேய்த்து தகரம் கிழித்த கதை. இது ஆயிரத்தில் ஒன்று. வில்லன் கதாநாயகனின் மகனை கடத்தி அவனை வளர்த்து கதாநாயகனை பழிவாங்கும் கதை. கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்கும் விஜயக்கு கடைசி காலகட்டங்களில் இப்படி ஒரு கதையை வைத்து படம் எடுக்கலாமா வெங்கட்? என்ன கோபம்? ஏன் இந்த சதி?
சரி மோகன் எதுக்கு இவரை பழிவாங்குகிறார் என்று சொல்லனுமே. ஆரம்பத்தில் ஒரு 20 நிமிஷம் சண்டை போட்டு ஒரு ட்ரெயினை கொளுத்துனாங்களே அதில் மோகனோட மொத்த குடும்பமும் செத்துடும், அவன் மட்டும் பொழச்சிருவான்.
அதுக்கு காரணமான விஜய பழி வாங்குவான். ஆனா பாருங்க விஜய் டீம்ல இருக்க ஒரு ஆளு மோகனுக்கு உளவாளியாம். அப்படி உளவாளி இருந்தா மோகனுக்கு அந்த தகவல் முன்னாடியே போயிருக்கனும், அவரு யுரேனியத்தையும், அவரு குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு அந்த ட்ரெயின் பக்கமே போயிருக்க மாட்டாரே?
என்னங்க வெங்கட் பிரபு சார். மன்னாங்கட்டி மாதிரி கேவலமான லாஜிக் ஓட்டை. இதெல்லாம் எப்படி மிஸ் பண்ணுவீங்க? எதோ படம் எடுத்தா எல்லாரும் கைதட்டிருவாங்களா?
பிறகு படத்தில் என்ன தான் நல்லா இருந்தது?
பிரபுதேவா மற்றும் பிரசாந்த இருவருக்கும் வெங்கட் பிரபு டச்சில் இரண்டு ட்விஸ்ட்கள், அட்டகாசம். செம.
அதையெல்லாம் விட்டு ஒழிஞ்சு க்ளைமாக்ஸ் க்கு வரலாம்
ஒரு 25 நிமிட க்ளைமாக்ஸ். க்ளைமாக்ஸ் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் ஒரு ட்விஸ்டோட நல்லா ஆரம்பிக்குது. முடியும் போது அப்பாடா ஒரு வழியா முடிச்சுட்டாங்கப்பா என்ற ரீதியில் இருந்தது. படத்தைப் போலவே க்ளைமாக்ஸ் ம் பெரிய ஜவ்வு.
யுவன் ஷங்கர் ராஜா க்கு க்ளைமாக்ஸ் முன்னாடி காட்சி வரைதான் பேமென்ட் போல. க்ளைமாக்ஸ் காட்சி முழுவதும் பின்னனி இசைக்கு பதிலாக ஐபிஎல் கமென்ட்ரி தான் ஓடியது். நடுவில் சிவகார்த்திகேயன் வந்து ஒரு டயலாக் பேசுகிறார்.
மும்பை இந்தியன்ஸ் 205, சிஎஸ்கே வெற்றிபெற 206 ரன் தேவை, கடைசி ஓவரில் தோனி பேட்டிங் செய்கிறார். அதுவும் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்று தியேட்டரே பரபரப்பாகி விட்டது.
திரையரங்கில் சிலர் தோனி தோனி என்று கத்த ஆரம்பித்து விட்டனர். எனக்கு அருகிலிருந்தவனோ , ப்ரோ சிஎஸ்கே ஜெயிச்சிடுமா , பைனல்ஸ் போயிடுமா என்று கேட்டான்
அட கூமுட்ட இது உண்மையான மேட்ச் இல்ல, இது ஆடு படம், விஜய் நடிச்சது என்று சொன்னால் கூட அவனால் படத்துக்குள் வர இயலவில்லை. ரசிகர்களில் பலர் சீட் நுனியில் அமர்ந்து பதட்டத்தில் இருந்தனர்.
எப்படியாவது தோனி ஒரு பாலில் 5 ரன் அடிப்பாரா என்று. நடுநடுவே விஜயும் பித்தளை முகனும் கூரை மேலே நின்று வித்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்
இதில் மங்கத்தா தீம் மியூசிக் வேற நடுவுல வந்து ரசிகர்களை குஷிபடுத்துகிறது. அப்படியே தோனி சிக்ஸ் அடிக்கிறார், சிஎஸ்கே ஜெயிக்கிறது. ரசிகர்களின் மனது முழுக்க மகிழ்ச்சி.
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடோடே விஜய் ரசிகர்கள் படம் பட்டாசு , மாஸ் , தூள் டக்கர் என்று கிளப்பி விட்டுவிட்டார்கள். ஆனால் யாருக்கும் படம் மகிழ்ச்சி தரவில்லை. படத்திலிருந்த சின்ன சின்ன விஷயங்கள் மகிழ்ச்சியை தந்தது.
ஆங்காங்கே சில காட்சிகளைத்திணித்து படம் நல்ல படம் என்று காட்ட முயற்சி செய்திருந்தார்கள். அடுத்த பகுதிக்கு முன்னோட்டம் வேற. இதையே தாங்க முடியல.
மொத்தத்தில் லாஜிக் பார்க்காமல், ஆங்காங்கே விசிலடித்து கைதட்டி,, படம் வெளியான நான்கு ஐந்து நாட்களுக்குள் கூட்டத்தோடு கூட்டமாக சும்மா ஜாலியா ஒரு விஜய் படம் என்று பார்த்தால் கூட ஒரு சின்ன சலிப்புடனே படம் பார்த்து முடிக்க இயலும் வகையில் உருவாக்கப்பட்ட காவியம்.
தொடர்ந்து வாசிக்க, நினைவுகள் முன்பக்கம். சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படங்களின் விமர்சனங்கள் இங்கே போகுமிடம் வெகு தூரமில்லை – திரைப்பட விமர்சனம், வாழை – பாராட்டுப் பத்திரம் (திரை விமர்சனம்).