தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூறு நூலின் வரிகளை முன்வைக்கும் கதை. இது கற்பனை கதையோ அல்லது வாசித்த கதையோ அல்ல. நான் கண்ட சினிமாவை கதையாக்கி இந்த கருத்தையும் முன்வைக்கிறேன்.
பேபி என்ற சினிமா. பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்த படம். படத்தின் கதை இதுதான்.
மனோஜின் மனைவி தனது முதல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பதால் சற்று மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார். பெரிய பாதிப்பாக இல்லாத காரணத்தால் குணமாகி இரண்டாவது முறை பிரசவிக்கிறார்.
இரண்டாவது முறை குழந்தை நல்லபடியாக பிறக்கிறது. ஆனால் சிறிய மருத்துவ சேவைக்காக குழந்தை 6-7 மணிநேரம் வென்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டிய கட்டாயம் வருகிறது.
மனோஜ்க்கோ இவள் கண்முழித்த உடனே குழந்தை அருகில் இல்லாவிட்டால் இவள் மீண்டும் மனநிலை பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து மருத்துவரிடமும் செவிலியரிடமும் கெஞ்சி கூத்தாடி வேறொரு குழந்தையை இவள் அருகே கிடத்தி விடுகிறார்.
இவளும் கண்விழித்து குழந்தையை கொஞ்சி தாய்ப்பாலும் கொடுக்கிறார்
வென்டிலேட்டரில் இருந்த தனது சொந்த குழந்தை திரும்பி வந்தவுடன் , தனது மனைவியிடம் உண்மையை சொல்கிறார் மனோஜ்.
சற்றே கோபம் கொண்டாலும் குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் தன் கையிலிருந்த வேறொருத்திக்குப் பிறந்த குழந்தையை கொடுத்து விட்டு தன் குழந்தையை வாங்கி கொஞ்சி பால் கொடுக்கிறாள்.
இதனிடையே அந்த இன்னொரு குழந்தையை அவளது சொந்தத் தாயிடம் கொண்டு சேர்க்கின்றனர்.ஆனால் அந்தத் தாயோ பிரசவத்திற்குப் பின்பு வரும் வலிப்பால் இறந்து விடுகிறார்.
அவள் அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்ததாகவும், அவளது கணவரைத்தவிர வேறு உறவுக்காரர்கள் யாரும் கிடையாது, அவளது கணவரும் சமீபத்தில் இறந்து விட்டதால் இந்தக்குழந்தையை காப்பகத்தில் சேர்க்கப் போவதாக மருத்துவர் கூறுகிறார்.
ஆனால் பிஞ்சுக் குழந்தையை அப்படி விட மனோஜ்க்கு மனமில்லை.
அதில்லாமல் ஒரு 3 மணி நேரத்திற்கு தனது மனைவியை எந்த பாதிப்பும் இல்லாமல் காத்தது அந்தக்குழந்தை தானே? அதை எப்படி காப்பகத்தில் விடுவது என்று எண்ணி தானே தத்தெடுக்க முன்வருகிறார்.
அவரது மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் சமயம் அந்தக்குழந்தையை தனது மனைவியின் அருகிலும் அவர்களுக்குப் பிறந்த குழந்தையை சற்று நகர்த்தியும் கிடத்தி விடுகிறார். அவள் வேறு குழந்தையை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்ற காரணத்தால், தன் குழந்தை பாதித்தாலும் பரவாயில்லை என்று இப்படி செய்கிறார்.
விழித்துப் பார்த்து அவரது மனைவி அவரின் எண்ணம்போலவே மற்ற குழந்தையை என்னால் பாசம் காட்டி வளர்க்க இயலாது அதனால் அதை காப்பகத்தில் விட்டு வா என்று கூறி அருகிலிருந்த வேறு தாயின் குழந்தையை தன் குழந்தையாக நினைத்து அரவணைத்துக் கொள்கிறாள். மயக்கத்திலே இருப்பவளுக்கு தனது குழந்தை அடையாளம் தெரியவில்லை.
அந்த குழந்தையை அப்படி காப்பகத்தில் விட முடியாது என்று மனோஜ் பிடிவாதம் பிடிப்பதால் இருவரும் பிரிகின்றனர்.
தற்போது மனோஜ்க்கும் அவளுக்கும் பிறந்த குழந்தை மனோஜ் இடமும், வேறு குழந்தை அவளிடமும் தனித்தனியாக வளர்கின்றன
வருடங்கள் ஓடுகின்றன. ஆறு வயதாகிறது இரு குழந்தைகளுக்கும்.
இப்போது மனோஜ் அந்தக் குழந்தையையும் கூட்டிக் கொண்டு அவளிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். அவள் இப்போது தன் வயிற்றில் பிறந்த குழந்தையை விட அந்த ஆறு வருடம் வளர்த்த பிள்ளை மீது கொள்ளைப் பிரியமாக இருந்த காரணத்தால், இரு குழந்தைகளையும் ஏற்றுக் கொண்டு நாம் நால்வரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவுக்கு வருகிறாள்
மனோஜ்க்கும் மகிழ்ச்சி. நால்வரும் சேர்ந்து வாழ்க்கையை ரசித்து வாழத் துவங்குகின்றனர். ஆனால் வீடுகளில் யதார்த்தமாக உடன்பிறப்புகளிடம் வரும் கோபம் போல, இங்கேயும் வருகிறது.
ஆறு வருடம் அம்மாவின் பாசம் மொத்தத்தையும் பெற்ற பிள்ளைக்கு இன்னொருத்தி பங்குக்கு வந்தது பிடிக்கவில்லை. பல சூழ்நிலைகளில் தான் அன்பு காட்டப்படாதவளாக உணர்ந்து தனிமையை நாடுகிறாள்.
அழுது தவிக்கிறாள். இப்படி அந்த பிள்ளை அழுவதைத் தாங்க இயலாத அந்த பிள்ளையின் தாய் ஆவியாக வந்து அவளை அடைகிறாள்
அவள் கண்ணுக்கு மட்டுமே தோன்றி அவளோடு விளையாடி, சிரித்து மகிழ்விக்கிறாள்.
அந்த ஆவியாக வந்த அம்மாவுக்கு இன்னொரு பிள்ளை மீது அதீத வெறுப்பு. அவளால்தான் தன் பிள்ளைக்கு தாய்ப்பாசம் கிடைக்கவில்லை என்று.
அதனால் அந்தப்பிள்ளையை பயமுறுத்தத் துவங்குகிறாள்.
பயமுறுத்தி அவளை பைத்தியமாக்கி இவர்களிடமிருந்து பிரிக்கலாம் அல்லது சாவடித்து விடலாம் என்ற ரீதியில் இதை செய்தாளோ தெரியவில்லை. ஆனால் இவள் பிள்ளை அழும்போதெல்லாம் அவளை பயமுறுத்துகிறாள்.
அவள் உச்சகட்ட பாதிப்புக்கு ஆளாகும் சூழலில் மனோஜ்ம் அந்த ஆவியைக் கண்ணால் கண்டு, இந்த வீட்டில் இனி இந்தக் குழந்தை இருந்தால் ஆபத்து என்று தன் மனைவியிடம் எடுத்துக்கூற அவள் ஆவி கதையை நம்பத் தயாராக இல்லை.
மீண்டும் இருவரும் பிரிகின்றனர்.
மனோஜ் இடம் அவர்களது சொந்தக் குழந்தையும், அவரது மனைவியிடம் அந்த வேற்று குழந்தையும் வளர்கிறது. சிறிது நாளில் கதாயநாயகிக்கு சந்தேகம் வந்து உண்மையிலேயே ஆவி இருக்கிறதா என்று தேடத் துவங்குகிறார். ஒரு நாள் அவரும் அந்த ஆவியைக்கண்டு மிரள்கிறார்
உடனே அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் கணவனை அழைக்கிறார். அவரோ பக்கத்தலிருக்கும் சர்ச் க்கு வர சொல்ல அங்கே செல்கிறார்கள். அங்கே மனோஜ் இந்த குழந்தையால் தான் இவ்வளவு பிரச்சினையும் அதனால் இவளை ஆசிரமத்தில் விடலாம் என்று கூற அவள் அதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் சண்டையிட்டுக் கிளம்புகிறாள்.
அவள் காரில் போய்க் கொண்டிருக்கும் போது மனோஜ் அவளுக்கு போன் செய்து சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனால் அவளோ, அந்த ஆவிக்கு தாய்ப்பாசம் நிறைய இருப்பதால் தான் இறந்தும் தன் குழந்தையை சுற்றி வருகிறது. அது என்னை எதுவும் செய்யாது. நான் இந்தக் குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன். ஒரு வேளை அது என்னைக் கொல்வதாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூற அந்த ஆவியும் அதை கவனிக்கிறது. இவளது நல்ல மனசை புரிந்து கண் கலங்குகிறது.
அப்போது அந்த குழந்தை என்னை விட்டுப் போகாத மா என்று சிணுங்க இவள் வாகனத்தை முன்னே கவனிக்காமல் பின்னே திரும்பி குழந்தையைப் பார்க்கிறாள். வாகனம் விபத்துக்குள்ளாகிறது.
ஆவி கதறி அழுகிறது.
அம்மாவும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அம்மா பிழைத்துவிடுகிறார். அந்தப்பிள்ளை இறந்து விடுகிறது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று படம் முடிகிறது.
எனக்கு குழப்பம்.
அந்தக்குடும்பம் நல்ல குடும்பம் தானே?
அவர்கள் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லையே?
பிறகு ஏன் இந்த வாசகம் என்று நினைத்த போது தான் புரிந்தது.
அந்த வாசகம் அந்த மனிதர்களுக்கு அல்ல.
அந்தத் தாய்பேய்க்கு.
இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்றால், நீ மனிதனாக வாழும் போது மட்டுமல்ல செத்துப்போய் பேய் ஆனா கூட தீதும் நன்றும் பிறர் தர வாரா தான்.
இந்தக் கதையின் மூலமாக நினைவுகள் வாசகர்களுக்கு சொல்ல வரும் கருத்து என்னவென்றால், நாமெல்லாம் வாழும் போதுமட்டுமல்ல இறந்த பிறகும் நல்லவர்களாகளே, அதாவது நல்ல பேய்களாக 👻 இருக்க வேண்டும்.
இந்த கதையை படித்து கொஞ்சம் குழம்பி போயிருக்கும் வாசகர்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படங்களின் விமர்சனங்களை வாசிக்கலாம். GOAT- 🐐 சினிமா விமர்சனம் , போகுமிடம் வெகு தூரமில்லை – திரைப்பட விமர்சனம், வாழை – பாராட்டுப் பத்திரம் (திரை விமர்சனம்).