Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

சமூக வலைத்தளங்களின் அவலங்கள்

சமூக வலைதளங்கள் இன்று பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனிதனின் வாழ்க்கைத் துணை போல, நண்பன் போல, சகோதர, சகோதரிகள் போல மாறி வரும் அவலமும்; மேலும் வருமானம் வரும், பிரபலமாக வாய்ப்பு வரும் என்று பலரும் அதில் மூழ்கி அழியும் அபாயமான சூழலும் உள்ளது.

முன்பெல்லாம் முகம் பார்த்து மனிதனின் நிலையறிந்த மக்கள் இன்று டிஸ்ப்ளே பிக்சர் அதாவது முகப்புப்படம் பார்த்து, ஸ்டேடஸ் பார்த்து ஒருவன் சோகமாக இருக்கிறானா, மகிழ்ச்சியாக இருக்கிறானா என்று அறிந்து கொள்ளும் நிலை உருவாகி விட்டது.

முகநூலில் ஒருவன் தொடர்ந்து பத்து நாள் பதிவேதும் போடாமல் விட்டால் அவன் உயிரோடு இருக்கிறானா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இந்த சமுதாயம் சமூக வலைத்தளங்களை சார்ந்து வாழத்துவங்கி விட்டது.

சாமானியனும் பிரபலமாகலாம் சமூக வலைதளங்களிலே, பிரபலமானால், நமது பதிவுகள் அதிகம் பார்க்கப்பட்டால் பணம் கொட்டும், நாமும் சினிமாக்காரன் போல ஊரில் வலம் வரலாம் என்ற எண்ணமும் பலரை பலவிதமாக பைத்தியமாக்கிக் கொண்டிருப்பதும் உண்மை தான்.

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்று ஆபாசமாக வலம் வரும் பெண்கள், பைத்தியக்காரத்தனமான செய்கைகளை செய்யும் ஆண்கள் என்று சமுதாயம் சீரழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவன் தொண்டை கவ்வ, ப்ராண்ஸ் எனக்குப் பெருமையா இருக்கு என்று பைத்தியக்காரத்தனமாக கத்துவதில் துவங்கி, மாட்டு சானத்தில் முகம் கழுவுவது, பொது கழிப்பறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது, மலம் கழிப்பதை படமாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது என ஒரு கூட்டமே பெரும் பைத்தியக்காரக் கூட்டமாக மாறிக் கொண்டிருப்பது மிக அவலம்.

இன்னொரு புறம் இந்த சமூக வலைதளங்களில் சினிமா பாடல்களுக்கு வாய் அசைக்கும் இளைஞர்களை கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்த அவலம் போதாதென, அவனைச்சுற்றி சுற்றி கல்லூரி மாணவிகள் புகைப்படம் எடுப்பது, சைகை செய்வதென பைத்தியக்கார ரசிகைகளாக இருப்பதைப்பார்க்கும் போது மனம் இன்னும் பதைபதைக்கிறது.

வாகனங்களில் வேகமாக செல்வதை படம் எடுத்துப் போடுபவனுங்கு ஒரு பைத்தியக்கார ரசிகர் கூட்டம். தான் உழைத்து சம்பாதித்து , ஒரு வண்டி வாங்கி, அல்லது தனது பெற்றோரிடம் அன்பாகப் பெற்ற வண்டியில் தன்னால் முடிந்த வேகத்தில் சென்று மகிழ்ச்சியை தனது நண்பர்களிடம் பகிர்ந்த போன தலைமுறைக்கு, இன்னொருவன் வண்டியில் வேகமாக செல்வதை காணொளியில் பார்த்து அவனுக்கு ரசிகர்களாக மாறும் இந்தத் தலைமுறையைக் கண்டால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.

சினிமா கதாநாயகர்களுக்கு ரசிகனாக இருப்பதே கேவலம் என்று ஒரு சாரார் பேசிக் கொண்டிருக்க, இப்படி சினிமா கதாநாயகர்களைப் போல வாயசைக்கும் , தலையசைக்கும் சமூக வலைத்தள பைத்தியங்களுக்கு இத்தனை பைத்தியக்கார ரசிகர்கள் இருப்பது மிகக் கேவலம்.

ஒருவரை மிகழ்விப்பது என்பது நல்ல செயல். கலை எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அதை முறையாகப் பயின்று அதன்மீது ஒரு மரியாதையோடு அதை வெளிப்படுத்தும் பல சினிமா நாயகன், நாயகிகளுக்கு ரசிகனாக இருப்பது தவறில்லை. முறையான கற்றல் இல்லாமல், கோமாளித்தனமாக எதையாவது செய்து நான் பிரபலாமாவேன் என்ற எண்ணம் ஆபத்தானது.

எனக்கும் இந்தக் கேள்வி வரலாம். நீ எழுதுவதற்கு எங்கேயாவது முறையாகப் பயின்றாயா? இப்படி அடுத்தவனைக் குறை கூறி எழுத உனக்கு என்ன தகுதி உண்டு என்று.

அதற்கான பதில், நான் அந்த சமூக வலைத்தள பைத்தியங்களைப் போல, இன்னொருவன் செய்ததை அப்படியே செய்யவில்லை. பலரும் சினிமா வசனங்களை பேசி நான் தனுஷ் மாதிரியே பன்றேன், நான் ஜெனிலியா மாதிரியே பன்றேன் என்று கூறிக்கொண்டு முழு ஜென் நிலை தாண்டிய பைத்தியங்களாக பிரபலமானால் போதும் என்று அலைகிறார்கள்.

என்னுடைய எழுத்து அப்படிப்பட்டதல்ல. என்னுடைய சொந்தக்கருத்து, இந்தக்கால இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி சீரழிந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தைப் பகிரும் கருத்து. நல்லதைப் பகிர தகுதி தேவையில்லை.

எனக்கு நல்லதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம். நினைவுகள் வாசகர்களோடு இன்றைய சமூக வலைத்தளங்களின் அவலங்களைப் பேசிப் பகிர்ந்து மன ஆறுதல் பெறுவதற்கான ஒரு சிறுமுயற்சி.