Categories
தமிழ் வரலாறு

பூலித்தேவர்- வெள்ளையர் எதிர்ப்பை முன்னெடுத்த வீரரின் வரலாறு

இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை.

இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம்.

நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு.

பூழி நாடு:
1378 ல் சேர நாட்டில் இருந்த பாண்டிய தளபதியான வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்பப் பூழித்தேவர் என்பவருக்கு பாண்டிய மன்னரால் பரிசளிக்கப்பட்ட பகுதி தான் இந்த பூழி நாடு. இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். பிறகு நாயக்கர்கள் காலத்தில் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட போது அதில் ஒன்றாக இது இருந்தது.

வரகுண சிந்தாமணி பூழித்தேவர் வழிவந்த பத்தாவது தலைமுறை மன்னர் சித்திரபுத்திரத் தேவர் ஆவார். அவரது மகன் பூலித்தேவனே இந்திய சுதந்திரப்போரில் பங்கெடுத்தவர்.

சிறுவயதிலிருந்தே வீரமாக வளர்ந்த பூலித்தேவனுக்கு புலி வேட்டையாடுதல் மிகவும் பிடித்தமான ஒன்று. புலிகளை வேட்டையாடி அதன் தோல்களையும், பற்களையும் ஆபரணங்களாக்கி அணிந்து கொள்வாராம். இதனால் அவர் புலித்தேவர் என்றும் அழைக்கப்பட்டார் என நாட்டுப்புறப்பாடல்கள் உண்டு. இவர் குளம் அமைத்துத் தந்த ஆதாரமாக ஒரு செப்பேடும் கிடைத்திருக்கிறது.

நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையாளர்கள், தனக்கு மேல் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என யாருக்கும் ஒரு மணி நெல் கூட வரியாகத் தரமாட்டாராம். இதனால் ஆவுடையாபுரம் நெல்கட்டான் செவலாக மாறியதாக சொல்லப்படுகிறது.

பூலித்தேவரின் வெள்ளையன் எதிர்ப்பு:
1750ல் ராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலேய கொடியை நாட்டி, தென்னாட்டு பாளையக்காரர்கள் அனைவரும் தன்னை சந்திக்க வேண்டும் என்றும் வரிகட்ட வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பூலித்தேவர் திருச்சிக்குப் படையெடுத்துப் போய் ஆங்கிலேயர்களை வென்றதாக பூலித்தேவன் சிந்து என்ற கதைப்பாடல் கூறுகிறது.

1755 ல் கர்னல் கீரோன் தனது கோட்டையை முற்றுகையிட்ட போது மனம் தளராது அதை எதிர்த்து முறியடித்தார். அதே ஆண்டில் களக்காடு மற்றும் நெற்கட்டான் செவல் பகுதியில் நடந்த போரில் மஹ்ஃபுஸ் கானை வீழ்த்தினார்

1756 ல் திருநெல்வேலி பகுதியில் மஹ்ஃபுஸ்கானுடன் நடந்த சண்டையில் தனது உயிர் நண்பன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் வெட்டிக் கொன்றதால் மனமுடைந்து சண்டையிலிருந்து பின்வாங்கினார். இதனால் திருநெல்வேலி ஆங்கிலேயர் வசமானது.

பிறகு 1760 ல் யூசுப்கான் என்ற மருதநாயகம் நெற்கட்டும்செவல் கோட்டையைத் தாக்கிய போதும், 1766ல் கேப்டன் பௌட்சன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் அதை முறியடித்தார்.

1766 ல் ஆங்கிலேய தளபதி பொறுப்பேற்ற கான்சாகிப்வால் என்ற கொடூர வீரனை பத்தாண்டுகள் தாக்குப்பிடித்து எதிர்த்த பூலித்தேவர் அதன்பிறகு ஆங்கிலப்படையை ஈடுகட்ட முடியாமலும் பிற பாளையக்காரர்கள் ஆதரவில்லாமலும் போனதால் தலைமறைவானார்.

இதன் ஆரம்பப்புள்ளி
பூலித்தேவர் ஆட்சி செய்த காலத்தில் அந்தப்பகுதி பாண்டியர்களின் கட்டுப்பாட்டிலும் இல்லை, பாண்டியர்களை வீழ்த்திய நாயக்கர்களின் ஆட்சி காலமும் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தது. இந்தப் பாளையங்கள் எல்லாம் முகமதியர்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஆற்காடு நவாப் ன் கட்டுப்பாட்டில் வந்தது. பூலித்தேவர் ஆற்காடு நவாப் க்கு வரிசெலுத்த மறுத்து தன் போன்ற பிற பாளையக்காரர்களையும் ஒன்றிணைத்து தாமாகவே சுதந்திரப் பகுதிகளாக தமது பாளையங்களை அறிவித்துக் கொண்டனர். இதை கட்டுப்படுத்த இயலாத நவாப் வெள்ளையர்களிடம் சரணடைந்து இந்தப் பகுதிகளின் வரி வசூல் உரிமையை அவர்களிடம் ஒப்படைத்தான்.

ஆனாலும் வெள்ளையர்களுக்கும் அடிபணிய மறுத்து 16 ஆண்டுகளாள எதிர்த்துப் போராடினார் பூலித்தேவர்.

பூலித்தேவரின் மறைவு:

பூலித்தேவரின் மறைவு குறித்துத் தெளிவான செய்திகள் இல்லை.

ஆங்கிலேயப் படைகளிடம் சிக்கிவிடக்கூடாது என்று பூலித்தேவர் தப்பித்து ஆரணி சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை கொண்டு்செல்லும் வழியில் சங்கரன்கோவிலில் சாமி கும்பிடும் போது கோவிலினுள்ளேயே மறைந்து புகையாக மாறிவிட்டார் என்ற செய்தி உண்டு. சிவபதம் அடைந்த காரணத்தால் இவருக்கு பூழிசிவஞானம் என்ற பெயரும் உண்டு.

இன்றும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் பூலித்தேவரின் நினைவறை உள்ளது.

ஆனால் இவர் தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானால் பெரும் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் ஆங்கிலேயர்கள் இதனை மறைத்திருக்கலாம் என்ற செய்தியும் உண்டு.

மாபெரும் வீரனின் பிறந்த தினமான செப்டம்பர் 1 ஆம் தேதி இதை ஒருங்கிணைத்து கட்டுரையாக்கி நினைவுகள் வாசகர்களுக்காக உருவாக்கியிருக்கிறோம்.

தொடர்ந்து வாசிக்க பண்டைய தமிழகத்தின் நாகரீகம் – கற்றோர் சிறப்பு.