Categories
கருத்து தமிழ்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா? – 02

இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க.

பன்றி இறைச்சியைப்பற்றி பேசி கட்டுரையை முடிந்திருந்தோம்.
அதாவது பன்றி இறைச்சி என்பது இஸ்லாமிய மதத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அந்த பன்றி கொழுப்பு தடவப்பட்டிருந்த வெடிகளின் திரிகளை வாயில் கடிக்க வேண்டிய கட்டாயம் வந்த காரணத்தால் தான் சிப்பாய் கலகம் ஏற்பட்டது என்றும் பரவராக அறியப்பட்ட ஒன்று.

ஆனால் ஏன்?

ஆடு 🐐 மாடுகளின் 🐮 மீது இல்லாத இரக்கம் பன்றிகளின் 🐷 மீது மட்டும் எதற்காக? நான் பைபிளோ, குர்ஆனோ படிக்கவில்லை. சில காணொளிகள் மற்றும் சில பெரியவர்களின் பேச்சுகளை கவனித்து இங்கே எழுதுகிறேன்.

முதலில் பன்றி இறைச்சி பற்றி குர்ஆன் மட்டும் பைபிள் என்ன சொல்கிறது என்றால், பன்றி இறைச்சி அசுத்தமானது, அது உன் உடலுக்கு உகந்தது அல்ல என்று.

குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் 145 ஆவது வசனம் பன்றி இறைச்சி அசுத்தமானது மனிதனுக்கு உகந்ததல்ல என்று சொல்வதாக கூகுள் செய்தாலே கிடைக்கிறது.

இதை ஒரு காணொளியில் கண்டு கேட்டு பகிர்கிறேன்.

டாக்டர் ஜாகிர் நாயக் என்ற தடை செய்யப்பட்ட பேச்சாளர் பேசிய காணொளியில் இருந்து நான் பெற்ற அறிவு. இவரது பேச்சில் மயங்கி பலர் மதம் மாறி விடுவதால் இவரது பேச்சுகள் தடைசெய்யப்பட்டன என்பதையும், இவரே கிறஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாமியராக மாறினார் என்பதையும் நண்பரின் மூலமாக அறிந்தேன். இது அதிகப்படியான தகவல் மற்றும் நம்பகத்தன்மை நிரூபணமாகாத ஒன்று. அவரது பேச்சுகள் இந்தியாவில் தடை என்பது மட்டும் உறுதி. நமக்குத் தேவையான கருத்துகளை மட்டும் அதிலிருந்து பகிர்கிறேன்.

ஒரு கிறிஸ்தவ பெண் அவரிடம் இந்த கேள்வியை முன் வைக்கிறார், கிறிஸ்தவர்கள் பன்றிக் கறி சாப்பிடும் போது இஸ்லாமியர்கள் ஏன் அதை ஏற்பதில்லை என்று. அதற்கு அவர் ஒரு நாலு குர்ஆன் வாசகங்களை மேற்கோள் காட்டி பன்றிக்கறி அசுத்தமானது, உடலுக்கு ஏற்புடையதல்ல என்று நான்கு இடங்களில் குர்ஆன் கூறுவதாகவும், மேலும் பைபிளிலும் மூன்று இடங்களில் பன்றிக்கறி ஏற்புடையதல்ல என்ற வாசகம் இருப்பதாகவும் மேற்கோளிட்டுக் கூறுகிறார்.

அதோடு நில்லாமல் நாம் பைபிள் மற்றும் குர்ஆனை நம்பாவிட்டால் கூட நிகழ்கால அறிவியல் என்ன சொல்கிறது என்று விளக்குகிறார்.

பன்றி இறைச்சி உண்பவர்கள் எழுபதுக்கும் மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்படக்கூடும் எனவும், தேனியா சோலியம் என்ற பன்றி தட்டைப்புழுவால் ஏற்படும் பாதிப்புக்கு ஆளாகலாம் எனவும் கூறுகிறார்.
அதாவது பன்றியின் இறைச்சியில் காணப்படும் இந்தப்புழு, சரியாக சமைக்கப்படாத பன்றிக்கறியிலிருந்து மனிதர்களின் உடலுக்கும் பரவி நோய் உண்டாக்கலாம். கடந்த 3000 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா, ஆசியா , தென் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றிலிருந்து இது நிரூபணமாகிறது.

அந்தப்புழுக்களின் முட்டைகள் நன்கு சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியில் இருந்தும் கூட நாளடைவில் மனிதனின் குடலில் வளர்ச்சியடைந்து பல விதமான நோய்களை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்பட்டாலும் இதற்கு ஆதாரம் இல்லை. பன்றிக்கறி நமது உடலில் தசைகளை வளர்ப்பது கிடையாது, கொழுப்பை மட்டுமே வளர்க்கிறது என்ற இவரது கூற்றுக்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. பன்றி இறைச்சியில் உள்ள உயர்தர புரதங்கள் மற்றும் முழுமையான அமினோ அமிலங்கள் புதிய தசையை உருவாக்குவதற்கான கட்டமைப்புகளை கொண்டிருக்கின்றன என்று விஞ்ஞானம் சொல்கிறது.

அடுத்தது 🐶 நாய் கறி.

இது இந்தியாவில் பேசப்பட வேண்டியதல்ல, நமது நாட்டில் 🐶 நாய் 🐱 பூனை போன்ற கறிகளை சாப்பிடும் வெகுஜனம் கிடையாது. ஆனால் சீனாவில் நாய்க்கறி சாப்பிடவதற்கென்றே ஒரு திருவிழாவே உண்டு என்று கேள்விப்படுகிறோம்.

சரி நாய்க்கறி பற்றி மதபோதனை என்ன சொல்கிறது?

இந்து மதம் என்றால் பைரவர் என்று நாயும் ஒரு கடவுளின் அவதாரமாக வெளிப்படுகிறது.

இஸ்லாமிய மதம், அதாவது குர்ஆன் புத்தகத்தில் கால் குளம்பு இல்லாத மிருகங்களின் இறைச்சியும் மனிதனுக்கு ஏற்புடையதல்ல என்று கூறப்பட்டிருக்கிறுது. இதை நான் ஒரு இஸ்லாமிய நண்பரின் மூலமாக அறிந்து கொண்டேன்.

சில புத்தகங்களில் இறைச்சி மனிதனுக்கு அறவே ஆகாது, காய்கறிகளை உண்ணும் விதமாக மட்டுமே மனிதனின் குடலமைப்பு இருக்கிறது என்று விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது.

ஆனால் ஆதிகாலத்தில் மனிதன் வேட்டையாடியே உண்டிருக்கக் கூடும்.
அப்போது இறைச்சி உண்ணாமல் வாழ்ந்திருக்க இயலுமா என்பதற்கு ஆதாரமில்லை.

தற்காலத்தில் கூட பேலியோ டயட் வகையறாக்கள் முழு நேர இறைச்சி உட்கொள்ளல் மூலமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இயலும் என்று கூறுகின்றன.

அறிஞர் ஓஷோ, ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் இறைச்சி உண்பதை மறுக்க வேண்டும் என்கிறார். இறைச்சி உண்ணுதல் என்பது ஆன்மீகப்பயணத்தில் மலை ஏறும் போது முதுகில் ஒரு பை நிறைய கற்களை சுமந்து கொண்டு ஏறுவதற்கு சமம் என்கிறார். இறைச்சியை நீக்கிவிட்டால் அந்தப்பையை இறக்கி வைத்து எளிதாக நடப்பது போல நடக்கலாம் என்கிறார்.

ஆன்மீகம் பற்றி பேசுவதற்கு பெரிதாக நம்மிடம் அறிவில்லை என்றாலும் கண் முன்னே பார்க்கும் விஷயங்களை ஒப்பிடலாம் அல்லவா?

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் இறைச்சி உண்ட பிறகு ஆன்மீகத்தை அடைய தடை விதிப்பதில்லை. அவர்களுக்கு தொழுவதற்கோ, சர்ச் செல்லவோ தடை இல்லை. இறைவனை நிந்திக்கவோ சிந்திக்கவோ பிரார்த்திக்கவோ இறைச்சி தடை இல்லை. நமக்கு மட்டும் ஏன்?

இறைச்சி உண்ட அன்று இறைவனை என்னால் சிந்திக்கவோ, நிந்திக்கவோ இயலாதா? இறைச்சி உண்ணும் என்னை இறைவன் ஒதுக்கிவிடுவானா?

என்ற கேள்வியுடன், நான் தேடிப்படித்த பல பதில்களையும் உங்களுக்காக இந்தக் கட்டுரையில் பதிப்பித்திருக்கிறேன்.

நினைவுகள் வாசகர்களுக்காக.