Categories
இலக்கியம் தமிழ்

குறளுடன் குட்டிக்கதை – உயர்ந்த சிந்தனை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

திருவள்ளுவர், குறள் 596

நாம் சாதிக்க நினைக்கும் காரியங்களை சிறியதாக நினைக்காமல் உயர்ந்த லட்சியங்களை சிந்தித்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
அது முடியுமா முடியாதா என்ற சிந்தனையை விட்டு, ஒருவேளை அது முடியாவிட்டாலும் கூட அதை நான் அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதை விளக்குகிறது இந்தக் குறள்.

இன்றைய சூழலில் மக்களின் மனநிலை மிகவும் குறுகிப் போனது.
நம்மால் இது முடியாது, நம்மால் அது முடியாது, என் சூழ்நிலை காரணமாக நான் இதை செய்ய இயலாது, என்னிடம் இந்த வசதி இல்லாத காரணத்தால் என்னால் இவ்வளவு தான் இயலும். என் வாழ்க்கைக்கு இது போதும் என்ற எண்ணமும், கூடவே சாதித்தவரை மனம் விட்டுப் பாராட்டாமல், அவருக்கு அந்த கொடுப்பனை இருந்தது, பின்புலம் இருந்தது , அதனால் தான் அவரால் அதை சாதிக்க முடிந்தது என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய சாதித்த நபர்களிடமும் பல குறைகளை காரணங்களை கண்டுபிடித்து, குறுகிய மனப்பான்மையோடே வாழ்கின்றனர்.

இதை ஒரு குட்டிக்கதையாக கேட்க இயன்றது.

சமூக வலைதளங்களில் உலாவரும் சுல்தானா பர்வீன் என்பவரது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் இந்த கதையைக் கேட்டேன். அதைப் பகிர்வதில் மகிழ்ச்சி.

ஒரு குளக்கரையில் ஒரு சிறுவன் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறான். அவனது தூண்டிலில் நல்ல பெரிய மீன்களெல்லாம் வரிசையாக சிக்குகின்றன. ஆனால் அவன் அதை மீண்டும் மீண்டும் குளத்துக்குள்ளே விட்டு விடுகிறான்.

சின்ன மீன்கள் கிடைத்தால் அதை மட்டும் தனது கூடையில் போட்டுக் கொள்கிறான்.

இதை வெகு நேரமாக பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவருக்குக் குழப்பம்.

இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆவலாக அவனிடம் வந்து கேட்கிறார், “ஏன் தம்பி பெரிய மீனை குளத்தில் போட்டுவிட்டு சிறிய மீன்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று.

அதற்கு அந்த சிறுவன், “ஐயா எங்கள் வீட்டில் சின்ன சின்ன பாத்திரங்கள் தான் இருக்கின்றன. பெரிய மீன்களை எடுத்தால் அந்த சின்ன பாத்திரத்தில் சமைக்க இயலாது. அதனால் தான் சின்ன சின்ன மீன்களை எடுத்துக்கொள்கிறேன்” என்றான்.

அந்த சிறுவனின் அறியாமையை நினைத்து வருந்திய பெரியவர், “அட கிறுக்குப் பயலே பெரிய மீன்களை சிறிய துண்டுகளாக நறுக்கினால் அந்த சின்ன பாத்திரத்தில் போட்டு சமைக்கலாம். இப்படி உன்னுடைய முயற்சியில் கிடைத்த பெரிய மீன்களை வீணாக்கி விட்டாயே, இனி அப்படி செய்யாதே” என்று அறிவுறுத்தினார்.

அப்படித்தான் இன்றைய சூழலில் பலரும் ஒரு விஷயத்தைத் தன்னால் செய்ய முடியும் என்றால் கூட இது நம்மால் நடக்காது, அல்லது இதை செய்யும் அளவிற்கு நம்மிடம் பயிற்சி இல்லை, நேரமில்லை, வயது இல்லை வசதி இல்லை என்று தங்களுக்குள்ளே ஆறுதல் சொல்லிக்கொண்டு தங்களது இலக்கை சுருக்கிக் கொண்டு வாழ்கின்றனர்.

வள்ளுவன் வாக்கான உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை என்றும் நினைவில் கொள்வோம்.

அன்புடன் நினைவுகள்

தொடர்ந்து வாசிக்க,

சுதந்திர தின கேள்வி – நாட்டுக்கு என்ன தேவை?

குறளுடன் குட்டி கதை -பொறையுடைமை