போகுமிடம் வெகு தூரமில்லை.
அருமையான வாசகம். அருமையான சினிமாவும் கூட.
சுஜாதா போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களே சினிமாவில் தனது கால் பதித்த பிறகு தான் மிகப் பிரபலாமானவர்களாக மாறினார்கள். புத்தகங்கள் செய்ய வேண்டிய வேலையை தற்போது சில சினிமாக்கள் செய்து கொண்டிருக்கிறது.
ஒரு நல்ல கதையம்சம் உள்ள சினிமா இங்கே மிகப்பெரிய வெற்றி அடைவதைக்காட்டிலும் மசாலா வகையான படங்களே இங்கே அதிகம் வெற்றி அடைகிறது. மக்களுக்கு கருத்துகளை விட, பொழுதுபோவது அவசியமாகிறது. அப்படியான சூழலில் ஒரு வித்தியாசமான, அதே சமயம் நல்ல கருத்தாழமிக்க, திரைப்படமான இந்தப் படத்தைப்பற்றி விவரிப்பது அவசியமாகிறது. அது சொல்ல வரும் சில கருத்துகளை மக்களிடம் சேர்ப்பதில் மகிழ்ச்சி.
விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களே பெரும்பாலான காட்சிகளை தூக்கி சுமந்திருக்கிறார்கள். இருவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அமரர் ஊர்தி ஓட்டுனராக விமலும், ஒரு கூத்துக் கலைஞனாக கருணாஸும் நடிப்பில் நம்மை வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள்.
விமல் வைத்திருக்கும் அந்த அமரர் ஊர்தியின் பின்புற கண்ணாடியில் எழுதியிருக்கும் வாசகமே சினிமாவின் தலைப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.
போகுமிடம் வெகு தூரமில்லை.
சென்னையில் விபத்தில் இறந்த ஒரு மிகப்பெரிய பணக்கார மற்றும் ஊரில் மதிப்பான ஒரு பெரியவரின் உடலை உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது இரண்டாவது மனைவியின் ஊரான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காட்டுக்கு கொண்டு செல்லும் பணியை விமல் ஏற்றுக் கொள்கிறார்.
அவர் பயணிக்கும் அந்த ஓர் இரவும், மறுநாள் பகலும் தான் படம்.
அந்த நாளில் விமலின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பயணத்தின் நடுவே கூத்துக் கலைஞரான கருணாஸ் விமலின் அமரர் ஊர்தியில் வந்து ஏறிக்கொள்கிறார். போகும் வழியில் அவர்களுக்கு மீளவே முடியாது என்கிற ரீதியில் மிகப்பெரிய பிரச்சினை யதார்த்தமாக வந்து சேர்கிறது.
அதிலிருந்து அவர்கள் தங்களை எப்படி மீட்டுக்கொள்கிறார்கள் என்ற கதையே இந்தப்படம்.
ஒரு கூத்துக்கலைஞனாக மிக யதார்த்தமாக கருணாஸ் நடித்திருந்தார். முழுவிவரமில்லாமல், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளாமல், தான் நினைத்ததை நினைத்த நேரம் செய்து கொண்டு கூட இருக்கும் விமல் கதாபாத்திரத்தை மட்டுமல்லாது படம் பார்க்கும் நம்மையும் கோபம் கொள்ளச் செய்கிறார்.
இதிலேயே நமக்கு உணர முடிகிறது, கதையோடு ஒன்றிவிட்டோம் என்று.
இதற்கிடையே அந்த பிணத்திற்கு நான்தான் கொள்ளி போடுவேன் என்று முறுக்கிக்கொண்டு சண்டைக்குத் தயாராகும் மூத்த மற்றும் இரண்டாவது மனைவியின் வாரிசுகள். இழவு வீட்டிற்கு எதிரே மறுநாள் தன் மகளுக்கு திருமணம் தடபுடலாக ஏற்பாடு செய்திருக்கும் ஜமீன் என்று படத்தில் ஒரு காட்சியில் கூட நம்மை சோர்வடைய விடாமல் சுவாரஸ்மாக நகர்த்துகிறார்கள்.
இருக்கும் வரைக்கும் தான் ஆட்டம் பாட்டம் எல்லாம். இறந்த பிறகு வெறும் பிணம் தான். அதிலும் இயற்கையாக இறந்து போகாவிட்டால் இறுதி சடங்குகள் கூட முழுமையாக நடக்காது. அப்படியிருக்க எதற்கு இந்த போட்டி பொறாமை எல்லாம்? என்ற கருத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறது படம்.
வாழ்விலும் தான் நினைத்தவற்றை இழந்து, கூத்துக் கலைஞனாகவும் மரியாதை கிடைக்காமல் விரக்தியின் உச்சத்தில் வாழும் கருணாஸ் தான் படத்தின் அஸ்திவாரமே. ஒரு கலைஞனாக நமது இதயங்களில் ஆணி அறைந்தாற் போல சேர்ந்துவிடுகிறார்.
படத்தில் இடைவேளையின் போதும், க்ளைமாக்ஸ் காட்சியின் போதும் நிகழும் சம்பவங்கள் நம்மை ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்த்தும். க்ளைமாக்ஸ் காட்சி நம்மை கட்டாயம் அழ வைக்கும்.
ஆடிய ஆட்டமும் பாடிய பாட்டமும் ஆறடி மண்ணுக்குள்ளே, அல்லது அரைப்பிடி சாம்பலுக்குள்ளே முடிந்து விடுகிறது. வாழும்போது முடிந்தளவு பிறருக்கு உதவியாக வாழ வேண்டும், இணக்கமாக அன்பு காட்டி வாழ்வேண்டும் என்ற கருத்துகளை மறைமுகமாக வித்தியாசமான விறுவிறுப்பான கதைக்களத்தில் சொன்ன இந்தப்படம் பாராட்டுக்குரியது.
போகுமிடம் வெகு தூரமில்லை.
மற்றொரு பொக்கிஷ சினிமா.
போவது இருக்கட்டும், வாழும் போது எப்படி வாழ வேண்டும் என்று இங்கே விவாதிக்கிறோம் – இனிய பேச்சின் தன்மையும் நன்மையும்
தொடர்ந்து வாசிக்க, வாழை பாராட்டுப் பத்திரம் – திரை விமர்சனம்