ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்!
ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர் கதை தானாம்!
அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்,
குனிஞ்சி பார்த்தா பூமி,
இடையில் அவன்தான் பாரம்.
கால் நடக்க நடக்க நீளும் தூரம்.
மாரி செல்வராஜ் (“ஒரு ஊருல ராஜா” பாடல் வரிகள், இசை சந்தோஷ் நாராயணன்)
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சில சினிமாக்கள், புத்தகங்களைப்போல நல்ல கருத்துகளைத் தருவதாகவும், சில சினிமாக்கள் நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்த நல்ல மற்றும் கசப்பான சம்பவங்களை, அனுபவங்களை நினைவுபடுத்தும் ஊடகமாகவும் இருக்கின்றது.
அப்படி ஒரு நல்ல மற்றும் கசப்பான நினைவுகளை மனதில் ஆழமாகப் பதிக்கும் சினிமா தற்போது வெளியாகியுள்ள வாழை.
இயக்குனர் மாரி செல்வராஜ் சாதியை மையப்படுத்தியே படம் எடுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்கள் கூட இந்தப்படத்தை அந்த ரகத்தில் சேர்த்து விட முடியாது.
ஏழ்மையில் வாடும் மக்களின் வாழ்க்கை முறை, அன்றாட உணவுக்கு அவர்கள் படும் பாடு, வீட்டிலுள்ள பிள்ளைகள் உட்பட அனைவரும் வேலை செய்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலை, அந்தக்குழந்தைகளின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளிகளின் அருமையான சூழ்நிலை, ஆகியவற்றையும், தனது சொந்த ஊரின் வாழ்க்கை முறை, நடைமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றையும், மண் மனம் மாறாமல், அந்த ஊரின் பேச்சு வழக்கு முறை மாறாமல் அப்படியே தந்து மாரி ஜெயித்து விட்டார்.
கதை என்று பார்த்தால் பெரிய கம்ப சூத்திரமெல்லாம் இல்லை. நான் ஒரு வாய் சோற்றுக்காக எனது சிறுவயதில் எப்படிப் பாடுபட்டேன் என்று இயக்குனர் விளக்கியிருக்கிறார். அது ஒரு கசப்பான உண்மை சம்பவத்தோடு சேர்ந்து வெளிப்படும்போது நம் மனதில் துப்பாக்கி தோட்டா துளைத்தது போல பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.
படம் முடிந்து டைட்டில் கார்டில் பின்புறம் ஒலிக்கும் பாடல் முடிந்து திரை வெளிச்சமின்றிப் போகும் வரையிலும் ஒரு ரசிகரும் இருக்கையை விட்டு எழாமல் இருந்ததும், சில பலவீனமான ரசிகர்கள் கண்ணீர் சிந்தியதுமே அதற்கு சாட்சி.
வாழை என்ற பெயர் ஏன்?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர், ஏரல் பகுதிகளில் வாழை மகசூல் செய்வது வழக்கம். தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் பயணிக்கும் போது பல வாழைத்தோப்புகளைக் காண இயலும்.
அப்படி அந்த தோப்புகளில் வாழைத்தாரை அறுத்து, தோப்புக்கு வெளியே சாலையில் நிற்கும் லாரி வரையிலும் தலையில் சுமந்து வந்து பாரம் ஏற்றுவதையே தொழிலாக செய்யும் பல ஊர் மக்களும் உண்டு. அப்படியான ஒரு ஊரில் வாழ்ந்த இயக்குனர், தான் சிறுவயதில் தலையில் வாழைத் தாரை சுமந்து வயிற்றை நிரப்பியதை படமாக்கியிருக்கிறார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை மையமாகக் கொண்டே கதை நகர்கிறது. பள்ளியில் சுட்டியாகப் படித்தாலும் வீட்டின் வறுமை காரணமாக தன் அம்மாவோடும், அக்காவோடும் சேர்ந்து விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறான்.
வாழைத்தார் சுமப்பதன் வலி என்ன என்பதை படமாக்கப்பட்ட விதம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.
பள்ளிக்கூடத்தில் இயல்பான எட்டாம் வகுப்பு மாணவர்கள் செய்யும் சேட்டைகள், ஒரு குறிப்பிட்ட ஆசிரியை மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்று பள்ளிக்கூட காட்சிகளும் நகைப்போடும், இனிமையோடும் நகர்கின்றன.
அந்த நாயகனின் நண்பனாக வரும் இன்னொரு மாணவன் படுசுட்டி. நாயகன் ரஜினி ரசிகனாகவும், அவனுடைய நண்பன் கமல் ரசிகனாகவும் டாலர்களை வைத்துக் கொண்டு அடிக்கும் லூட்டி என்போன்ற 80, 90 களின் ஆட்களுக்கு மனதிற்கு மிக நெருக்கமான காட்சி.
ஆமாம் திருச்செந்தூர், இருக்கன்குடி போன்ற ஊர்களுக்குப் போகும் போது டாலர் வைத்த கருப்புக்கயிறு வாங்கி கழுத்தில் கட்டுவது வழக்கம். பெரும்பாலும் அதில் சாமி டாலர் தான் வாங்கித் தருவார்கள்.
ஆனால் சில நேரங்களில் நாங்கள் அடம்பிடித்து எங்களுக்கு விருப்பமான ரஜினி , கமல், விஜயகாந்த் டாலர்கள் வாங்கி அணிவது உண்டு. அது இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதுமட்டுமல்லாது, மருதானி பறித்து அரைத்து கை கால்களை அழகுபடுத்திக் கொள்வது, அரசுப்பள்ளி லூட்டி, ஆசிரிய ஆசிரியையகள் என்று தென்பகுதி மக்களின் வாழ்வியல் அப்படியே படமாகியிருந்தது மிக அருமை.
ஊரில் ஒரு பெருசு மண்டையப்போட்டால் நிகழும் நடைமுறைகள், இளசுகளும், குழந்தைகளும் போடும் ஆட்டம் எல்லாம் முதல் காட்சியில் அருமையாக வெளிப்பட்டிருந்தது.
ஊரில் உள்ள ஒரு புரட்சிகரமான இளைஞன், அவனது தூதுவளை இலை அரைச்ச காதல் கதை மிகப்பெரிய சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் அழகு.
படம் எட்டாம் வகுப்பு மாணவனின் கண்ணோட்டத்தில் நகர்ந்த காரணத்தாலோ என்னவோ அதில் பெரிய ஈடுபாடு வரவில்லை.
ஒரு சிறுவன் செய்யும் சிறிய பிழை எப்படியான விளைவுகளில் முடியும் என இடைவேளை காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் வெளிப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நமது இதயத்தின் ஈரத்தைப் பதம் பார்ப்பது நிச்சயம். அந்தக்காட்சிகளை வெளிப்படையாக சொன்னால் படத்தின் சுவாரஸ்யம், இருக்காது என்பதால் அதை வெளிப்படுத்தவில்லை.
ஒரு 2.15 மணி நேரம் எங்கள் ஊரில் வாழ்ந்தது போலவே ஒரு அனுபவம். அப்படியே பிசிறு தவறாமல் ஊர் பாஷை.
அதே மாதிரி, ஊர்மக்களுக்கு கூலி தரும் ப்ரோக்கர், வாழை வியாபாரி ஆகியோரின் யதார்த்தமான முகங்களைக் காட்டியிருந்தார் மாரி.
புல்லட்டில் மைனர் போல வரும் வாழை வியாபாரியிடம் ஊர்மக்கள் நேருக்கு நேராக துணிச்சலாக பேரம் பேசி கூலி வாங்குவதும், வேலை முடிந்த பிறகு ப்ரோக்கர் கூலி ஆட்களை ஏற்றி செல்ல தனியாக வண்டி கேட்பதும் என அவர்களின் நியாயமான முகங்களும் வெளிப்பட்டிருந்தன.
அதுபோல முதலாளி, அந்த சாதி, கூலி மக்கள் இந்த சாதி என்ற பாகுபாடுகள் இந்தப்படத்தில் வெளிப்படையாக இல்லாமல், இருப்பவன் இல்லாதவன் என்ற அளவோடு நின்று விடுவது இந்த படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மாமன்னன் படத்தில் சாதி ஆதிக்கத்தை வெளிப்படையாக காட்டி அதனால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளான மாரி இந்த படத்தில் அதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அதன் பின்னணியை வர்ணனை இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.
சாதி ஆதிக்கத்தை ஒழிக்க விரும்புபவர்கள் சாதியை பற்றியே ஏன் பேசுகிறார்கள் என்று ஒரு கேள்வி வருகிறது. நியாயம் தான். அதை புரிந்துகொள்ள நம் சமூகத்தில் பெரும்பாலும் வெளிப்படையாக இல்லாமல், ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் தென்படாமல், சாதியின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
“அவன் ஊரில் பஸ் ஏன் நிற்கவில்லை என்ற கேள்வி அவனுக்கு பின்பு தான் வருகிறது.” (கர்ணன் திரைப்படம்) என்கிறார் மாரி செல்வராஜ்.
சாதியின் ஆதிகத்தை, பேராசையால் வரும் நட்டத்தை அடியில் இருப்பவர்களே சுமக்கிறார்கள். மேலிருப்பவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வருவது இல்லை. இது அவர்களுக்கு புலப்படுவது கூட கிடையாது என்பதை இந்த படம் பதிவு செய்கிறது.
உழைப்பாளிகளின் உரிமைக்கு குரல் குடுப்பவன் தாழ்த்தப்படுவதும், முதலாளிக்கு கப்பம் கட்டுபவன் வாழ்க்கையில் உயருவதும் வழக்கம் தானே? உழைப்பில்லாமல் எதுவும் கிடைக்குமோ? அந்த உழைப்பிற்கு தக்க சன்மானம் வழங்கப்பட வேண்டாமா என்ற கேள்விகளும் வைக்கப்படுகின்றன.
தாருக்கு ஒரு ரூபாய். கூட்டி கேட்டு வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு அவர்களிடமே பறிக்கப்பட்ட ஒரு ரூபாய் செய்யும் விளைவு பார்ப்பவர்களுக்கு அந்த வாழையின் சுவையில் கலந்திருக்கும் வலியையும், அவன் இருக்கும் இடத்தில் அவன் வேண்டிய நேரம் வாழைப்பழம் கிடைக்கப்பெற அவன் எவ்வளவு கொடுத்து வைத்தவன் என்றும் உணர வைக்கிறது.
இவ்வளவு சுமை இருந்தாலும் சிலரின் அன்பால், கல்வியால் அது எப்படி மாறக்கூடும் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறார் மாரி.
நூற்றாண்டா வரும் காயம்
விவேக் (“ஒத்த சட்டி சோறு” பாடல் வரிகள், இசை சந்தோஷ் நாராயணன்)
கொஞ்சம் கொரஞ்சிடுதே
இந்த கூண்டே தெரியாதே
ஒரு தொன வரும்போதே
கதை, ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சியமைப்புகள், என்று ஒட்டுமொத்த படமும் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை அழகாகப் படமாக்கி வெற்றி அடைந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசை கவனத்தை கலைக்காமல் காட்சிகளுக்கு ஆழம் சேர்க்கிறது.
இந்தப்படத்தைப் பற்றி எழுதலாம் என துவங்கியது எளிதாக இருந்தது, ஆனால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கும் போது அவ்வளவு எளிதாக இல்லை. அத்தனை நினைவுகளைத் தூண்டியிருக்கிறது. அவைகளில் அழுத்தமான சோகம் கொஞ்சம் இருந்தாலும் கீழுள்ள பாடல் வரிகளை போல இன்பமே பெரிதும் பொங்குகிறது.
காசு பொட்டிகுள்ள
ஆச கொள்ளாதே,
வேச சல்லடையில்
தேன் நிக்காதே,
ஒரு கோடி வம்ப தாண்டி
அன்ப வச்சோம்,
அத தூக்கி ஓடத்தானே
தெம்ப வச்சோம்,
சும தாங்கும் நேரத்திலும்
நேசம் வச்சோம்,
அந்த கல்லும், கால் முள்ளும்,
இப்போ வலிக்கலையே,
ஒரு கள்ளி செடி பூக்க
இப்ப மணக்குது காடே!
ஏ ஒத்த சட்டி சோறு,
கர ஒட்டிகிட்ட சேரு,
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே….
விவேக் (“ஒத்த சட்டி சோறு பாடல் வரிகள்”, இசை சந்தோஷ் நாராயணன்)
தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படம்.
சிவப்ரேம் இன் சில குறிப்புகளுடன் எழுதியவர் அருண் பாரதி.
இதே போல் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட வள்ளியம்மா பேராண்டி இசை தொகுப்பின் விமர்சனம் இங்கே.
தூத்துகுடி வட்டார வழக்கில் எழுதிய எங்கள் கிராமத்து கசாப்புக் கடையின் நினைவுகள் இங்கே.