Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

நூற்றாண்டு கண்ட கலைஞர் புகழ்

தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் இவரது பங்கு எல்லையற்றது. கூட்டணி சாதுர்யம், ஆட்சியில் நற்கவனம், மற்றும் பலவகையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வல்வராகிய கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசியல்வாதி என்றாலே நேர்மறையான விமர்சனங்களுக்கு ஈடாக எதிர்மறையான விமர்சனங்களும் இருப்பது நிதர்சனம் தான். ஆனால் நாம் இப்போது அந்த எதிர்மறை விமர்சனங்களை மறந்து அவரிடமிருந்து நாம் பெற்ற இனிய நினைவுகளை மட்டுமே சற்று ஆராயலாம்.

கலைஞர் என்ற பட்டம் அவரது எழுத்து அவருக்குக் கொடுத்த பரிசு. சாதாரண கணேசனை சிவாஜி கணேசனாக்கிய வசனகர்த்தா, அல்லவா கலைஞர். சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றளவும் கூட பராசக்தி பட வசனம் நினைவில் இருக்கிறது. அப்படிப்பட்ட கம்பீரமான வசனமும், காட்சியும் அது.

அது போக, செம்மொழியான தமிழ்மொழியே என்று அவர் இயற்றிய பாடல் நம் நினைவிலிருந்து என்றும் நீங்காதவை தான்.

அவரது பேனா பல மறக்க முடியாத படைப்புகளை உருவாக்கியது போல, ஒரு அரசியல் தலைவராக அவர் எத்தனையோ மைல் கல்களை உருவாக்கியிருக்கிறார்.

ஆசியாவிலேயே முதல் திட்டமிடப்பட்ட குடியிருப்பு, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, சமத்துவபுரம், உழவர் சந்தை, மருத்துவ காப்பீடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் இப்படி அவர் தந்த எத்தனையோ திட்டங்களால் இன்னும் எத்தனையோ மக்கள் பயனடைந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அதமட்டுமல்லாது கட்டமைப்புகளில் நகரமேம்பாடு, குடிசை மாற்று வாரியம் புதிய புதிய பாலங்கள் , ஐடி நிறுவனங்கள், சிப்காட் என்று அரசு வருவாயை அதிகரிக்கவும், மக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்காவும் பல திட்டங்களை முன்னெடுத்தவர்.

அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாக இன்று அவர் முகம் பொறித்த 100 ரூ நாணயம் இந்திய அரசால் வெளியிடப்பட்டிருப்பது தமிழகத்திற்குப் பெருமை.

அந்த நாணயத்தில் அவரது கையெழுத்தாலே ஆன தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது இன்னும் சிறப்பு.

ஒரு அரசியல் தலைவராக பல நேர் மற்றும் எதிர்மறைகளான விமர்சனங்களைக் கொண்டிருத்தாலும், திரைக் கலைஞராகவும் சிந்தனையாளராகவும் கலைஞர் கருணாநிதி ஐயா என்றுமே நமக்கு இனிய நினைவுகளைத் தருபவர் தான். தமிழுக்கு தன் உயிருள்ளவரை தொண்டாற்றியவர்.

உதாரணமாக விதவை என்ற வார்த்தையில் கூட பொட்டு இல்லையே என்று மனம் நொந்த கணவனை இழந்த பெண்களுக்கு, கைம்பெண் என்று மாற்றுப் பெயரளித்தவர்.

ஊனம் என்ற வார்த்தை முள்ளாய் குத்தும் என்பதால் அதை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்று ஊனமுற்றோரை தலை நிமிரச் செய்தவர்.

கலைஞரைப் பற்றி பேச பல விஷயங்கள் உள்ளது. ஒரு ரசிகனாக, அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்வதில் பெருமிதம்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

தொடர்ந்து வாசிக்க, வள்ளியம்மா பேராண்டி இசைதொகுப்பின் கவித்துவத்தையும் அரசியலையும் இங்கு வாசிக்கலாம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுகளை இங்கு வாசிக்கலாம்.