78 ஆவது சுதந்திர தினத்திலே அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நமது சுதந்திரத்திற்கு காரணமான தியாகங்களை ஒரு முறை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.
இந்த சுதந்திரம் எத்தனையோ இன்னல்களைத்தாண்டி நமக்குக் கிடைத்தது.
அப்படி சுதந்திரத்திற்காக நடந்த பல சம்பவங்களில் நம் நினைவிலிருந்து நீங்காத சம்பவம் ஜாலியன்வாலாபாக் படுகொலை. அதை நாம் இந்த நன்னாளில் ஒருமுறை நினைவில் கொண்டு அதற்கான சந்தர்பம் அமைந்த சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
பஞ்சாப் மாகாணத்தில் அமிர்தசரஸ் என்ற நகரிலுள்ள ஜாலியன் என்ற இடத்தில் நடந்த படுகொலை சம்பவம் தான் இந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ல் ஜெனரல் ரெஜினால்ட் டயர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் ஒரு திடலில் கூடிய மக்களை கிட்டத்தட்ட 150 சிப்பாய்கள் சூழ்ந்து பத்து நிமிடம் தொடர்ந்து சுட்டுத் தள்ளிய சம்பவம் இது. நம் நினைவில் என்றும் ஆறாத வடுவாய் இருக்கும் சம்பவம்.

1919 ல் ஆரம்பிக்கப்பட்ட, சுதேசி இயக்கம், காந்தியடிகளின் சத்தியாகிரக போராட்டம் ஆகியவை பிரிட்டிஷாரை உலுக்கிய காரணத்தால், ரௌலட் என்ற அடக்குமுறை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கூட்டம் கூடுபவர்களை கேள்விகளே இல்லாமல் கைது செய்தல், அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுபவர்களை கைது செய்வது போன்ற பயங்கர சட்டம். அந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் நாடு முழுக்கப் போராட்டங்கள் பரவியது.
அதை அடக்க ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 13 – பஞ்சாபில் விசேஷ நாள்- வைசாகி்.
குரு கோவிந்த் சிங், சீக்கிய அறப்படை இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய நாள் என்பதால் அதை மக்கள் விசேஷமாக கொண்டாடுவது வழக்கம். அன்றும் வழக்கம்போல அந்த கொண்டாட்டத்திற்காக ஜாலியன் திடலில் திரண்ட மக்கள் தான் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்டார்கள்.
பிரிட்டிஷாரின் அன்றைய கணக்குப்படி 379 பேர் இறந்ததாகக் கூறப்பட்டாலும் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக அறியப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி படுகொலை நிகழ்ந்திருக்கிறது.
இன்று நாம் இத்தனை சுதந்திரமாக சுற்றித் திரியவும், வாழவும், படிக்கவும், பண்டிகைகளைக் கொண்டாடவும் பல உயிர்கள் இதுபோல இழக்கப்பட்டிருக்கிறது என்பதை என்றும் நினைவில் கொள்வோம்.
78 ஆவது சுதந்திர நாளில், நாம் சுதந்திரத்தை மட்டும் அனுபவிக்கும் குடிமகனாக அல்லாமல், கடமையைச் செய்யும், நாட்டைப்பேணும், நற்குணங்கள் கொண்ட, விதிமுறைகளை மதிக்கும் நல்ல குடிமகனாக வாழ்வோம் என்ற சத்தியத்தை எடுத்துக்கொள்ளலாமே!
நம்பிக்கையின் உயிர் விட்ட தியாகிகளின் ஆசைக்கு இணங்க இந்திய நாட்டை உலகில் ஒப்பில்லா நாடாக உயர்த்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து நற்காரியங்களை முன்னெடுக்கலாம் தானே?
தொடர்ந்து வாசிக்க, வரலாற்றை ஏன் அறிந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனையை இங்கு சிவப்ரேம் வழங்குகிறார். யாம் எழுதியிருக்கும் மேலும் சில வரலாற்று நினைவுகளை வாசிக்க கீழ் காணும் தொடர்புகளை கிளிக் செய்யலாம்.

வாசகர்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய இந்த பக்கத்தில் உள்ள கமெண்ட் செக்ஷனை பயன் படுத்தலாம்.