நினைவுகளிலிருந்து என்றென்றும் நீங்காத சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என்றென்றும் நம் நினைவில் நிற்கக் கூடியவர்கள் தானே!
அப்படி தமிழ் சினிமா வரலாற்றில் தன்னிகரற்று விளங்கிய AVM Productions ஐ உருவாக்கிய A.V.Meiyappan- அதாவது ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரின் நினைவு தினம் இன்று.
ஆகஸ்ட் 12, 1979 ல் அவர் இயற்கை எய்தியிருந்தாலும் இன்றும் AVM தயாரிப்பின் தனித்துவமான சத்தம் நம் காதுகளை நிரப்பிக் கொண்டு தான் இருக்கிறது.
திரைப்படம் துவங்கும் முன்பு டான்…டட்டட்டட்டான்.. என்று ஒரு இசையுடன் AVM logo பின்னிருந்து முன்னால் வருவதையும், படம் முடிந்து பின்பு அதே இசையுடன் முன்னிருந்து பின்னால் செல்வதையும் ரசிக்கவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அதில்லாமல் வடபழனியில் உருளும் AVM புரொடக்ஷன்ஸ் என்ற பூமிப்பந்து பல சினிமா தொழிலாளிகளுக்கு படி அளக்கும் தெய்வம் போன்றது.
சினிமாவில் சம்பாதித்து செழிப்பாக வாழ்வதை மட்டுமே எண்ணமாக வைத்துக்கொள்ளாமல் AVM நிறுவனம் மைலாப்பூரில் ஒரு தொண்டு நிறுவனத்தை நிறுவி பல உதவிகளும் செய்து வருகிறது.
விருகம்பாக்கத்தில் ஆவிச்சி பெயரில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது, இன்று அது ஆவிச்சி மேல்நிலைப்பள்ளி ஆக பல குழந்தைகளின் கல்விக்கு வித்திடுகிறது.
இதன் நோக்கம் குறைந்த கட்டணத்தில் நல்ல கல்வி தருவது.
அதில்லாமல் வடபழனியில் தங்களது ஸ்டுடியோ பக்கத்திலேயே AVM Rajeswari என்ற பெயரில் சிறிது காலத்திற்கு முன்பு வரை ஒரு திரையரங்கம் இயங்கி வந்தது. மற்ற திரையரங்குகளை ஒப்பிடும் போது அதில் பாதி கட்டணம் தான்.
பல ஏழை மற்றும் நடுத்தரப்பட்ட சினிமா ரசிகர்களின் விருப்பமாக இருந்தது இந்த திரையரங்கம். பின்னர் ஏதோ காரணங்களுக்காக மூடப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் எண்ணற்ற படங்களை தயாரித்த பெருமை மற்றும் 50 ஆண்டுகளாக மூன்று தலைமுறைகளைக் கண்ட தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமை AVM ஐச் சாரும்.
ஒரு பெரிய ஸ்டுடியோ, அதில் எல்லாவிதமான படங்களுக்கும் செட் போடும் வசதி என்பதில் முக்கியமானது AVM, அதில்லாமல் ஸ்டுடியோவை விட்டு வெளியே வேறு இடத்தில் சென்று படமாக்கிய முதல் தமிழ் படமும் AVM தயாரிப்பில் தான் சாத்தியமானது.
முதல் டப்பிங் படம் AVM தயாரிப்பில் தான் வந்தது, முதல்முதலாக குரல் பின்னனிக்கு வேறு ஆட்களை பயன்படுத்திய முறையை AVM தான் அறிமுகம் செய்தது. இப்படி சினிமாவில் பல நேரங்களில் மைல்கல்லாக இருந்திருக்கிறது.
சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் AVM என்ற வார்த்தை நீங்கா நினைவுகளைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நமது சிறு மற்றும் இளைய வயதில் பல நீங்கா நினைவுகளையும், இனிமையையும் தந்த நல்ல படங்களை தந்த AVM ஐ என்றும் மறவாதிருப்போம்.
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.