Categories
அறிவியல் கருத்து தமிழ்

விடுபடு திசைவேகம் – தீமையில் இருந்து விடுபட

அறவியல், இயற்பியல் படித்த அனைவரும் கடந்து வந்திருக்கக்கூடிய சொல்தான் இந்த விடுபடு திசைவேகம்.

ஆங்கிலத்தில் escape velocity என்று சொல்லப்படும்.

புவியிலிருந்து நாம் எந்தப்பொருளைத் தூக்கி எறிந்தாலும் அது சிறிது உயரத்தை அடைந்து விட்டு திரும்ப புவியை நோக்கி வந்தடையக் காரணம், புவியின் ஈர்ப்பு விசை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்படி மேலே எறியப்பட்ட பொருள் கீழ்நோக்கித் திரும்ப வராமல் மேலே புவி வட்டத்தை விட்டு சென்று விட வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் அந்த பொருள் எறியப்பட வேண்டும். அதுதான் விடுபடு திசைவேகம் எனப்படுகிறது.

புவியிலிருந்து விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் இந்த விடுபடு திசைவேகத்தை அடைந்தாலொழிய அது மேலே செல்ல இயலாது.

சரி விடுபடு திசைவேகத்தின் அளவு எவ்வளவு என்று பார்த்தோமேயானால் 11.2 கிமீ/ நொடி. அதாவது ஒரு பொருள் ஒரு நொடிக்கு 11.2 கிமீ வேகம் மேல்நோக்கி பயணித்தால் அது பூமியில் இருந்து வெளியேறும்.


இந்த தரவை வைத்து நான் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?
நாம் கற்ற அறிவியலை, அதிலிருக்கும் முக்கியமான கூறுகளை ஒரு முறை நினைவில் கொள்ளலாம் என்றும், அதிலிருந்து ஒரு சிறிய கருத்தினைப் பதிவு செய்யலாம் என்றும் தான் எண்ணம்.

நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு தீய பழக்கம் இருக்கலாம்.
புகை பிடித்தல், மது பழக்கம், செல்போன் நோண்டுதல், வாட்ஸ் அப்பிலே வாழ்க்கையை ஓட்டுதல், இன்ஸ்டாகிராமில் மட்டுமே இனிமையையைத் தேடுதல், X தளத்திலே எந்த இலக்குமே இல்லாமல் பொழுதை கழித்தல் போன்ற பல தீய பழக்கங்களால் நாம் இன்று நம் நிஜ வாழ்க்கையை இழந்து நிற்கிறோம். நிழலை நிஜமென நம்பி வாழ்கிறோம்.

இவற்றிலிருந்து வெளியேற நினைத்தாலும், பூமிக்குத் திரும்பும் மேலே எறியப்பட்ட பொருட்களைப் போல, இந்த விஷயங்களில் உள்ள மாய ஈர்ப்பு காரணமாக நம்மால் அவைகளிலருந்து விடுபட இயலவில்லை.

விடாமுயற்சி, பயிற்சி, தன்னம்பிக்கை என்ற விடுபடு திசைவேகம் இருந்தால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட்டு நல்ல, உண்மையான வாழ்க்கையை வாழ்வது சாத்தியம்.

நினைவுகள் வாசகர்களுக்கு இப்போது இந்தக் கருத்தைக்காட்டிலும், அறிவியலே பரவாயில்லை என்று தோன்றியிருக்கலாம்.

என்றென்றும் நினைவுகள் வாசகர்களின் நலனில் ஆர்வத்துடன் நினைவுகள் வலைத்தளம்.

நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.