முதலை தெரியும் அதென்ன அதலை? ஆம் இதுவும் முதலை போலத்தான்.
சத்தமில்லாமல் திடீரென வெளிப்படும், ஆனால் மிக சக்தி வாய்ந்தது.
அடேங்கப்பா , பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கே என்று வியப்பு வருகிறதா? பில்டப் மிகையல்ல.
இந்த அதலைக்காய் ஆனது வருடம் முழுக்க கிடைக்கும் பொருளல்ல.
சீசன் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைப்பது.
மீதி நேரங்களில் இதன் விதைகள் மண்ணுக்குள் உயிரோடு இருந்து மண் ஈரமாகும் மழைப்பருவங்களில் மட்டுமே வயல் வெளிகளிலும் மற்ற செடிகளிலும் கொடியாகப் படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி வகை.
இது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், கர்நாடக ஆந்திரப்பகுதிகளிலும் மட்டுமே விளையும் சிறப்பு வகை தாவரம்.
எனக்குத் தெரிந்து தமிழகத்தின் தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை பகுதிகளிலிருக்கும் சில ஊர்களைத் தவிர்த்து வெளியே இதன் அருமையோ, இதை சமைக்கும் முறையோ தெரிவதில்லை.
பாகற்காயை விட சக்தி வாய்ந்த இந்த கசப்புத்தன்மை மிக்க காய், நீரிழிவு நோய் மருந்தாகவும், குடற்புழு நீக்கும் மருந்தாகவும், நாட்டு மருத்துவர்களால் தயாரிக்கப்படுகிறது.
Momordica cymbalaria என்ற தாவரப்பெயர் கொண்ட இந்தக்காய் பாகற்காய் குடும்பத்தில் தான் வகைப்படுத்தப்படுகிறது.
பாகற்காயின் நீர்ச்சத்து 83.2 (100 கிராமில்) இதற்கு (அதலை 84.3) ஈடானது என்றாலும் நார்ச்சத்தில் பாகற்காயை (1.7), விட அதலை (6.42) ஐந்து மடங்கு அதிகம்.

கால்சியம் , பொட்டாசியம் ஆகியவற்றிலும் பாகற்காயை விட ஐந்து மடங்கு அதிகம் சத்துடைய இந்தக்காய் பற்றி நிறைய ஆட்களுக்கு தெரிவதில்லை.
காயில் பீனிக்ஸ் என்று இதை சொல்வார்கள். இறந்து மீண்டும் உயிர்க்கும் தன்மை கொண்டது.
இந்த அதலைக்காயின் நினைவுகள் தென் மாவட்ட மக்களுக்கு என்றுமே இனிமை தான்.
எங்களுடைய சிறிய வயதில் இதை விலை கொடுத்து வாங்கியதாக நினைவில்லை. மழைக்காலத்தில் நண்பர்களோடு கூட்டமாக காட்டுப்பகுதிகளில் உலாவி அதலைக்காய் பறித்துக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுக்கும் போது முதலில் அடிதான் விழும்.
“அதலைக்காய் பிடுங்கப் போகாத பாம்பு வரும்னு சொன்னா கேக்குறியா?” என.
பிறகு அந்த அதலைக்காய் வறுபடும் போது வரும் வாசனையில், ஆஹா இன்னும் எத்தனை அடி வேண்டுமானாலும் வாங்கலாமே!
அதலைக்காய் பொறியலும் , சாம்பாரும்- அற்புதம்
அதலைக்காய் பொறியலும் தயிரும்- அமிர்தம்.
அதலைக்காய் பொறியலும், பருப்பும்- பேரின்பம்.

இப்படி அதலைக்காய் பொறியலை முன்னிலைப்படுத்தி பேசும் வழக்காடல் தென் மாவட்டங்களில் இன்னும் உண்டு.
மறக்க முடியாத எதிர்பாராத ஆச்சரியமாக சென்ற ஜூன் மாதம் கல்லுப்பட்டி சந்தையில் அதலைக்காய் சாலையோரம் குவித்து விற்பனைக்கு இருந்ததைப் பார்த்து வண்டியை நிறுத்தி உடனே அரைக்கிலோ வாங்கி மறுநாள் அதை தின்று முடித்த பின் தான் எனது ஆவலாதி அடங்கியது.
இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ இந்த அதலைக்காய் பொறியலுக்கு..
பலருக்கும் தெரியாத ஒரு காயின் சிறப்பை நினைவுகள் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி.