பிரியாணி, பெரும்பாலான நபர்களால் விரும்பி சாப்பிடப்படும், அல்லது அவ்வாறு ஒரு மாயையைக் கொண்டிருக்கும் பிரபல உணவு வகை.
இது உண்மையிலேயே பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறதா என்ற கேள்விக்கு ஆதாரமாக, ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடப்படும் உணவு வகை பிரியாணி என்றே கூறப்படுகிறது.
பிரியாணி என்பது ஈரான் நாட்டில் உருவாகி இப்போது தெற்கு ஆசியப்பகுதியில் இருக்கும் பிரபல உணவு.
பிரியாணி என்ற வார்த்தை அரிசி என்பதைக் குறிக்கும் பிரிஞ்ச் என்ற பெர்சிய வார்த்தையிலிருந்தோ, அல்லது பிரியன் அ பெரியன் (பொறித்தல் எனப் பொருள்படும்) பெர்சிய வார்த்தையிலிருந்தோ, அல்லது பெரஹெஸ்தான் (பொறிக்கப்பட்ட வெங்காயம்) எனப் பொருள் கொண்ட பெர்சிய வார்த்தையிலிருந்து வந்ததாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
ஈரான் நாட்டிலிருந்து உருவாகியிருந்தாலும் இந்தியாவில் தான் இதன் பல பரிணாமங்கள் தோன்றியது.
நவீன பிரியாணி என்பது முகலாயர் காலத்தில் உருவானதாக நம்பப்படுகிறது.
இப்படி பிரியாணி என்பது, முகலாயர், அரேபியர்கள், தைமூர் படையெடுப்பு, பாபர் படையெடுப்பு என்று இஸ்லாமிய வட்டத்தை சுற்றியே சொல்லப்பட்டாலும், சங்க இலக்கியங்களில் சேர மன்னர்களின் படை வீரர்களுக்கு ஊன்சோறு, அதாவது சோறு, நெய், கறி ஆகியவை கலந்த சத்துள்ள உணவு அளிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.
பிரியாணி என்பது வரலாற்றில் இவ்வாறாக பயணித்து இன்று ஹைதராபாத் பிரியாணி , ஆம்பூர் பிரியாணி, கல்யாணி பிரியாணி, தலசேரி பிரியாணி, தலப்பாக்கட்டி பிரியாணி, சங்கரன்கோவில் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி , டெல்லி பிரியாணி, ராவுத்தர் பிரியாணி , கல்கத்தா பிரியாணி , ஸ்ரீலங்கா பிரியாணி என்று பல பரிணாமங்களை அடைந்து இன்றும் பலரின் விருப்ப உணவாகவும், செழிப்பான உணவாகவும் ஒருவரின்த குதியைத் தீர்மானிக்கும் உணவாகவும் கூட உள்ளது.
விருந்தில் பிரியாணி போடப்பட்டால் அது ஒரு பெரிய விருந்தாகத்தான் இன்றளவும் மதிக்கப்படுகிறது.
அசைவப்பிரியர்களின் பெருமையான உணவு என்பதையும் தாண்டி, அதற்கு ஈடாக சைவர்களும் விரும்பி உண்ணும் வகையில் காய்கறிகளில் ஆரம்பித்து காளான் வரை பல சைவ வகை பிரியாணிகளும் விற்றுத்தீர்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
பிரியாணி சாப்பிடாதவன்லாம் என்ன மனுஷன் என்று சொன்னாலும் சொல்லி விடுவார்கள் எதிர்காலத்தில்.
எங்கோ என்றோ ஒரு நல்ல பிரியாணியை நம்மில் பலரும் ரசித்து, ருசித்து சாப்பிட்ட நினைவுகள் நம்மிலிருந்து இன்னும் நீங்காமல் தான் இருக்கிறது.
அந்த நினைவுகளை தூண்டி உங்கள் மனதில் பிரியாணி ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி.