Categories
சினிமா

டென் ஹவர்ஸ்- திரை விமர்சனம்

டென் ஹவர்ஸ்.

ஹாலிவுட் படம் போல பெயர்.

அதேபோல படத்தின் மொத்த நீளமும் ஹாலிவுட் படத்திற்கு இணையானதாக 116 நிமிடங்கள் மட்டுமே.

படம் ஆரம்பித்த விதமும், படத்தின் போக்கும், இடைவேளை வரை அடுத்தடுத்து நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்களும், காவல்துறையிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகும், சிறிதும் தயங்காமல் காவல்துறையினரைக் கொன்று குவித்து விட்டு அசால்ட்டாகத் தப்பிக்கும் வில்லன் குழு என படம் முதல் பாதியில் நம்மை மிரட்டி விடுகிறது.

ஒரு பெண் கடத்தப்படுவதாகத் துவங்கும் காட்சி, அதை சிபிராஜ் விசாரிக்கும் விதம், என்று சுவாரஸ்யத்திற்குப் பச்சமில்லாமல் முதல் பாதி விறுவிறுவென நகர்கிறது.

சிபிராஜ் விசாரித்து முன்னேற முன்னேற வில்லன் குழு, ஒவ்வொரு தடயமாக அழித்துக்கொண்டே சுவாரஸ்யத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

படத்தில் சிபிராஜ்க்கு அறிமுகம் கொடுப்பதற்காக ஒரு கதை சொல்கிறார்கள், அது மிகப்பெரிய லாஜிக் ஓட்டையோடு முடிவடைகிறது.

அதேபோலத்தான் இந்தப்படத்தின் கதையும், மிக அற்புதமாக சுவாரஸ்யமாகத் துவங்கி பயங்கர லாஜிக் ஓட்டைகளோடு கட்டையைக் கொடுத்து கடுப்பேற்றுகிறது இரண்டாம் பாதியில்.

பெண் கடத்தல், பேருந்தில் ஒரு பெண்ணுக்கு வன்கொடுமை, அதை காவல்துறைக்குத் தெரிவித்த இளைஞர் ஓடும் பேருந்திலேயே மரணம் என்று அடுத்தடுத்து நம்மை அசர வைத்தாலுல், இதை எல்லாம் இணைத்த புள்ளியில் மிகப்பெரிய சொதப்பலும் லாஜிக் ஓட்டையும் விட்டு அடப்போங்க பாஸ், இதத்தான் விடிய விடிய உக்காந்து ஒட்டிக்கிட்டு இருந்தீங்களா என்று கேட்க வைக்கிறார்கள்.

இரண்டு பேருந்து ஒரே நம்பரில், அதுவும் அடுத்தடுத்து, டோல்கேட்டை கடக்கிறதாம். என்னங்க பாஸ்? சரி பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வண்டியே சரியான நேரத்தில் நிறுத்தத்திற்கு வராத போது, கடத்தல் சாமானை வைத்திருக்கும் பேருந்து எதற்காக பயணிகள் நிறுத்தம் வழியாக வர வேண்டும்?

என்னங்கடா உங்க திட்டம்?

கடத்தப்பட்ட பெண் தேர்தல் அதிகாரியுடைய பெண்.

இடைத்தேர்தல் வைத்துக்கொண்டு தேர்தல் அதிகாரியை மிரட்டினால் ஓட்டுப்பெட்டியை மாற்றி விட முடியும் என்றால், இங்கே கவுன்சிலர் கூட நியாமாகத் தேர்ந்தெடுக்க முடியாது.

ஒரே ஒரு தேர்தல் அதிகாரி மட்டும் நினைத்தால், ஒரு வாக்குச்சாவடியின் ஓட்டுப் பெட்டிகள் அனைத்தையும் மாற்ற முடியாது.

இதுதான் படத்தின் மையக்கரு என்பதால் இந்த லாஜிக் இல்லாத காரணத்தால், எள்ளுக்கு பதிலாக எலிப்புழுக்கையைப் போட்டு நல்லெண்ணெய்க்குச் செக்கு ஆடிய கதையாகப் படம் ஒன்றுமே இல்லாமல் போனது.

ஆனால் இந்த லாஜிக் புரிதல்கள் இல்லாமல், விவரமில்லாமல் இதை சினிமாவாகப் பார்த்தால் இரண்டு மணி நேரம் நல்ல படம் பார்த்த அனுபவம் உண்டு.

படத்தின் மையக்கருவே பலத்த லாஜிக் ஓட்டை என்பதால், மற்ற சின்ன சின்ன லாஜிக் ஓட்டை காட்சிகளைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை.

ஓகே ஒரு முறை பார்க்கலாம்.