Categories
தற்கால நிகழ்வுகள் வணிகம்

சிறு குறு வியாபாரிகளை நசுக்கும் கார்ப்பரேட் நுணுக்கம்

முந்தின நாள் மாலை 7.15 மணிக்கு குட் பேட் அக்லி படத்திற்கு மீண்டும் பதிவு செய்து சிறிது காரணங்களால் வெகு தாமதமாகி போக முடிநாமல் போனது.
சரி வீட்டில் இருந்தாலும் பொழுது போகாது என்று கிளம்பி திரையரங்கம் இருக்கும் அந்த வணிக வளாகம் வரை சென்றோம்.
ஏதாவது சாப்பிட்டு வீடு திரும்பலாம் என்று.

தற்செயலாக எனது பர்ஃப்யூம் காலி என்பது நினைவில் வரவே அங்கிருக்கும் டி மார்ட் உள்ளே நுழையலாம் என்ற எண்ணம்.
எனக்குப் பொதுவாக இந்த மிகப்பெரிய வணிக வளாகங்களில் மலிவு விலையில் பொருட்களை வாங்கி பணத்தை மிச்சம் செய்யும் எண்ணம் கிடையாது.
எனது வீட்டைச் சுற்றி, வீட்டருகே இருக்கும் சிறு வியாபாரிகளும் வாழ வேண்டும் என்ற பொது சிந்தனை உண்டு.
இன்றளவும் எங்கள் தெருவில் உள்ள கடைக்காரரிடம் தான் நாங்கள் வியாபாரம் செய்கிறோம்.

எனக்கு நன்றாகத் தெரியும் நான் உள்ளே பர்ஃப்யூம் வாங்கச் சென்றால் அத்தோடு வெளியே வரமாட்டேன்.எனது நுகர்வுப் பசி தூண்டப்படும் என்று.

அது மாற்றமில்லாமல் நிகழ்ந்தது.
நான் வெளியே வரும் போது நான் வாங்கி வந்த மொத்தப் பொருட்களின் மதிப்பு 2800 ரூ.கூடவே அதை சுமப்பதற்கான பை 30 ரூ.

இதில் பர்ஃப்யூமின் விலை 190 ரூ மட்டுமே.

அந்த மீதிப்பணம் 2610?

எனக்கு அத்தியாவசியமானது அல்ல..ஆனாலும் வாங்கி விட்டேன்.
காரணம், விலை மலிவு, பொருட்களின் மீதான ஈர்ப்பு, மற்றவர்கள் வண்டியை உருட்டி உருட்டி அள்ளிப் போடுவதைக் கண்டு , தூண்டப்பட்ட நுகர்வு உணர்வு.

ஆமாம். எதைப்பார்த்தாலும் இதை வாங்காலாமா அதை வாங்கலாமா என்ற அளவில் விலையிலும், பொருட்களை அடுக்கி வைத்த விதத்தலும் கவர்ச்சி.

தஞ்சாவூர் நயம் பொன்னி அரிசி கிலோ 45 ரூ. அடடே நம்ம கிலோ 60 ரூ கொடுத்து வாங்குறோமோ? சரி ஒரு 3 கிலோ வாங்கித்தான் பார்ப்போமா?

அடுத்தது அஸ்ஸாம் டீ ஒரு கிலோ 138 ரூ.
அட என்னாங்கடா நான் 100 கி 3 ரோஸஸ் 90 ரூபாய்க்கு ல வாங்கிக்கிட்டு இருக்கேன்?

அடுத்தது சோப்பு, 20 ரூ தள்ளுபடி, பாதாம், கிலோ 600 ரூ , எங்கும் கிடைக்காத விலையில்.

ஆஹா டாக்டர் நம்மள பாதாம் சாப்புட சொன்னாரே?

பிஸ்தா – 400 கி 400 ரூ.
பிஸ்தா சாப்பிடும் அளவிற்கு நாம மஸ்தான் இல்லை.ஆனாலும் 400 கி பிஸ்தா 400 ரூ என்றால், ஒருமுறை தான் வாங்கிச் சாப்பிட்டால் என்ன?

இப்படி நான் வாங்க வேண்டிய பர்ஃப்யூமை மறந்து ஏதேதோ பொருட்களை வாங்கிக் குவித்து ,திரும்ப பர்ஃப்யூம் ஞாபகத்திற்கு வந்து அதையும் வாங்கி விட்டு,இந்த சுமைக்கு 30 ரூ கொடுத்து ஒரு பையும் வாங்கியாயிற்று.

இதையெல்லாம் வீட்டிற்கு கொண்டு சென்றதும் , என் அம்மா என்னடா படத்துக்குப் போறேனு போனீங்களே இதென்ன மளிகை சாமான்கள வாங்கிட்டு வர்றீங்க,என்றதும், படத்திற்கு தாமதமான கதையையும், டிமார்ட் பற்றிய விளக்கத்தையும் சொன்னேன்.

அப்படின்னா மாசம் மாசம் அங்கேயே வாங்கிட்டா, செலவு குறையுமா என்று கேட்டார்கள்.
உண்மைதான்.

ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.

மாசம் ஒரு ஆயிரம் ரூபாய் மிச்சத்திற்காக, நான் தினமும் வேலைக்கு செல்லும் போதும் வரும்போதும் என்னைப் பார்த்து கைகாட்டி சிரிக்கும் அந்தக் கடைக்காரர் .
பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நான் வெளியூர் செல்ல நேரிட்டால் , வீட்டிற்கு தேவையான பொருட்களை வீட்டில் சென்று கொடுக்கும் அந்தக் கடைக்காரர்.

கிட்டத்தட்ட ஒரு சொந்தக்காரர் போல, ஒரு நண்பரைப் போலப் பழகும் அந்தக் கடைக்காரர்.
இரவு 10.30 மணி வரை எங்கள் ஏரியாவின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் காவல் நிலையம் அவரது கடை.
மளிகைப் பொருட்களைக் கடனாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
ஆத்திர அவசரமென்றால் தேவையான உதவிகளையும் செய்வார்.

இப்படிப்பட்ட ஒருவரின் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு, அவரது குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை ச
சீரழிக்கும் அந்த ஆயிரம் ரூபாய் சேமிப்பு எனக்கு அவசியம் தானா?

சிறு குறு வணிகர்களை நசுக்கும் கார்ப்பரேட் வியாபாரங்களை ஒழிப்போம்.