இரு நண்பர்களுக்கிடையிலான உரையாடல்.
நபர் 1: என்ன மச்சான் வெயில் இந்தப் பொள பொளக்குது.
நபர் 2: ஆமா, மச்சான்.
இப்பத்தான் சித்திரை பிறந்திருக்கு.இப்பவே வெயில் இப்படி இருக்குனா இன்னும் அக்னி வெயில்லாம் வரப்ப நம்ம உசுரோட இருப்போமானே தெரியலியே மச்சான்.
நபர் 1: ஆமாடா இதுல இந்த சனியன் புடிச்ச டிராபிக் வேற. ச்சேய். காலைல நல்லா குளிச்சி மொழுகி பளபளனு வேலைக்குக் கிளம்பினா, வேலைக்குப் போயி சேரக்குள்ள எம் மூஞ்சியே எனக்கே அடையாளம் தெரியாத போயிடுது மச்சான்.
நபர் 2: அட ஆம மச்சான் ,வண்டி ஓடும் போது கூட சகிச்சிடலாம்.
ஆனா சிக்னல் ல நிக்கும் போது யப்பா…முடியல டா சாமி..இதுல ஹெல்மெட் வேற..
நபர் 1: பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் லீவு வரப்போகுது டா.
பேசாம 2 நாள் லீவப்போட்டு ஊட்டி கொடைக்கானல் னு போயிட வேண்டியது தான்.
இந்த வெயில், குறிப்பா இந்த டிராபிக் ல இருந்து விடுபட்டு நிம்மதியா 2 நாள் சந்தோஷமா இருந்துட்டு வரனும்.
நபர் 2: சரி மச்சான் , பாத்து போயிட்டு வா, எனக்கு லீவெல்லாம் தர மாட்டானுங்க..
ஒரு வாரம் கழித்து .
நபர் 2: என்ன மச்சான் , கொடைக்கானல் எல்லாம் போனியே குளு குளுனு இருந்துச்சா.
நல்ல என்ஜாயின்மென்ட்டா?
நபர்1: அட ஏன்டா நீ வேற? இங்க கடுப்பா இருக்குனு கொடைக்கானல் போனா அங்க அதிவிட கடுப்பா இருக்கு.
இங்கயாச்சு , சிக்னல் போட்டா 3-4 நிமிஷத்து கிளம்பிடலாம்
ஆனா அங்க ஒரு முறையே இல்லாம அங்கொன்னும் இங்கொன்னுமா வரிசை இல்லாமல் நிறுத்தி ஒரு பெரிய டிராபிக் ஜாம்.
அதிலிருந்து மீண்டு வந்தாலே போதும்ங்கிற அளவு ஆயிடுச்சு மனநிலை.
அட மச்சான், இங்கிருந்து மலை ஏறும் போதே வரிசை ஆரம்பிச்சிடுச்சு .
என் பையன், அந்த வரிசையப் பாத்துட்டு, அப்பா நாம கொடைக்கானல் மலைக்கு வந்திருக்கோமா? இல்ல சபரிமலைக்கு வந்திருக்கோமானு கேக்கிறான் டா.
அடிச்சு, பிடிச்சு கொடைக்கானல் போயாச்சு.
ஆனா எங்க போனாலும் கூட்டம், கூட்டம் , கூட்டம்…சுற்றுலா ல நான் எதிர்பார்த்த முக்கியமான அம்சம்,, நிம்மதி்..அது கிடைக்கவே இல்ல மச்சான்.
விரக்தில சூசைட் பாய்ன்ட் ல இருந்து குதிச்சிடலாம்னு நினைச்சேன் மச்சான்.
நபர் 2: அட பைத்தியம், அப்புறம் என்னாச்சு.
நபர் 1′: அங்க ஒரு 150 பேர் வரிசையில நின்னான். அதப்பாத்து மேலும் மன உளைச்சலாகி, இனி எக்காரணத்தக் கொண்டு மலைப்பிரதேசத்திற்கு கோடை காலத்துல வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டு் இங்கேயே வந்துட்டேன்.
நபர் 2: சரி விடுடா இப்பலாம் எல்லாருமே வசதியாகிட்டாங்க.
பொசுக்கு பொசுக்குனு கார் எடுத்துக்கிட்டு எங்கயாச்சு கிளம்பிடுறாங்க.
போதாக்குறைக்கு இந்த யூடியூப் காரனுங்க வேற.
காலம் மாற மாற ஏற்படும் மாற்றங்களையும் நாம சகிச்சுக்கிட்டு தானே ஆகனும்.
ஆமாம் உண்மைதானே?
நமது தாத்தா பாட்டி காலத்தில் அரிசிச் சோறே அபூர்வம்.
அப்பா அம்மா காலத்திலும் கொஞ்சம் பொருளாதார சிக்கல் இருந்தது உண்மை தான்.
இன்று கல்வியறிவு நமக்குக் கொடுத்த வளர்ச்சியின் காரணத்தால் எல்லாருமே பொருளாதாரத்தில் ஓரளவிற்கு உயர்ந்து நிற்கிறோம்.அதனால் கோவில், சுற்றுலா, விடுமுறைக் கொண்டாட்ட தலங்கள், உணவகங்கள் கூட நிறைந்து தான் காணப்படுகிறது.
இதில் யாரையும் குறை சொல்ல இயலாது.
ஆனால் நாமெல்லாம் ஒரு விஷயத்தைக் கடைபிடிக்கலாம்.
நாம் சுற்றுலா செல்லும் இடங்களின் அழகையோ, அல்லது செல்லும் கோவிலின் புனிதத்தையோ கெடாமல் பாதுகாக்கலாம்.
நம் மக்கள் இணைந்து திருச்செந்தூர் கோவிலின் கடலைக் கலக்கியவாறு, இனி ஓரிரண்டு ஆண்டுகளில் ஊட்டி, கொடைக்கானலை சீர்குலைக்காமல் இருந்தாலே நல்லது.
வேண்டுகோளுடன் நினைவுகள்.