Categories
விளையாட்டு

நீ ஆடு தல!

என்னதான் அச்சு இந்த சிஎஸ்கே வுக்கும் தோனிக்கும்? என்று பலரும் கதறிக்கொண்டிருக்க, தோனி வன்மக்குழு சந்தடியில், தோனி மட்டும் இல்லாவிட்டால் சிஎஸ்கே மீண்டும் சிங்கமாக கர்ஜிக்கும் என்று வசைபாடத்துவங்கி இருக்கிறார்கள்.

மேலும் தோனியே அணியைப் பின்னுக்கு இழுப்பதாகவும், கிரிக்கெட் என்ற கலாச்சாரமே மாறி வருவதாகவும் சொல்லி தோனியை அணியிலிருந்து விலகுமாறு வன்மத்தைக் கக்கி வருகிறார்கள்.

இதில் ஒரு உண்மை கட்டாயம் பொதிந்திருக்கிறது.

கிரிக்கெட் என்ற விளையாட்டுக் கலாச்சாரத்தைத் தாண்டி தோனி வந்து ஒரு சிக்ஸ் அடித்தால் போதும் கொடுத்த பணத்திற்கு மகிழ்ச்சி கிடைத்து விட்டது என்று கேப்ரே நடனக்கலையை ரசிப்பது போல அந்தக் காட்சியை ரசித்து விட்டு சிஎஸ்கே வென்றாலும் சரி, தோற்றாலும் சரி இப்போதைக்கு நமக்கு தோனியின் தரிசனமும், சிக்ஸர் காட்சியும் கிடைத்து விட்டது என்று மனநிறைவுடன் ரசிகர்கள் கிளம்பி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கலாச்சாரம், முதன்முதலாக தோனி ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்று கூறிய அந்தக் குறிப்பிட்ட வருடத்தில் துவங்கியது. ஆரம்பத்தில் தோனி ஓய்வு அறிவிக்கும் முன்பு அவரை ஒரு தடவை நேரில் பார்த்து விட வேண்டும் என்று முண்டி அடித்து ஆரவாரம் செய்து கிரிக்கெட்டுக்காக அல்லாமல் தோனிக்காக மைதானத்தில் கூடியது அந்தக்கூட்டம்.
அந்தக்கூட்டம் தான் முதல் பேட்டிங்கில் ஜடேஜா வந்தால், அவுட் ஆகச் சொல்லி கூச்சலிட்டு, ஜடேஜா அவுட்டானதற்குக் கைதட்டிக் கொண்டாடியது.

அதை அப்படியே படிப்படியாக இந்த மீடியாவும், கிரிக்கெட் வியாபார மாஃபியாவும் உபயோகித்துப் பிரபலப்படுத்தியது.

தோனி வரும்போது மைதானத்தில் இத்தனை டெசிபல் சத்தம் வந்தது, அப்படி கூச்சல் இருந்தது என்று துவங்கி, தோனி கேமியோவை ஒரு கேப்ரே நடனம் போல பிரபலப்படுத்தியது.

நாளாக நாளாக சென்னை அணியின் வெற்றி தோல்வியைவிட தோனியின் தரிசனம் தான் முக்கியம் என்ற ரீதியில் ரசிகர்களிடையே ஒரு மாய பிம்பம் கிளம்பியது.

முந்தைய வருடங்களில் சென்னை அணி ஒரு கோப்பையும் வென்று, சென்ற ஆண்டு, பிளே ஆப் வரை நெருக்கி வந்து விட்டதால், இந்த கலாச்சாரமும், அப்படியே உயிர்ப்புடனே இருந்தது.

இந்த வருடம் சென்னை அணியின் தொடர் தோல்விகள் ரசிகர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. அணித்தேர்வில் துவங்கி, டெவின்கான்வே முதல் இரு ஆட்டங்களில் களமிறங்காத விஷயம், கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்யாத விஷயம், கடைசிக்கு முந்தைய ஆட்டம் வரை டூபே சரியாக ஆடாதது, ஜடேஜாவின் சொதப்பல் என்று ரசிகர்களுக்குக் கோபம்.

இந்தக் கோபத்தின் நடுவிலேயும் ஒரு விஷயம் மாறவில்லை.

அதுதான் தல தரிசனம்.

என்னடா ரணகளத்துலயும் கிளுகிளுப்பா என்ற ரீதியில் தோனியின் ரசிகர்கள் சிலருக்கே அது கோபத்தை வரவழைத்தது. அவரது எதிர்ப்பாளர்களுக்குச் சொல்லவா வேண்டும்?

தோனியால் தான் சென்னை அணியும் கிரிக்கெட் கலாச்சாரமும் சீரழிகிறது என்று கிளப்பி விடத் துவங்கி விட்டார்கள்.

வயதாகி விட்டது இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் 10 ஐபிஎல் அணிகளிலேயே சிறந்த கீப்பர் என்றால் அது தோனிதான். அதையும் தாண்டி , அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் 15 ரன்களாவது சராசரியாக அடிக்கிறார். ரிஷப் பந்த் அடித்த மொத்த ஓட்டம் இதுவரை 26 தான். இதையெல்லாம் பேச மாட்டார்கள். தோனி என்றால் கிளம்பி விடுவார்கள்.

அவர் தேவையான நேரத்தில் களமிறங்குவதில்லை என்று ஒரு புரளி. கடைசி பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் தேவையான நேரத்தில் களமிறங்கி 12 பந்துகளில் 27 ரன்கள் அடித்து எதிரணியை கலங்கடித்தார்.

ஆனால் என்ன சொல்வார்கள்?
ஜெயிச்சு தரலையே?
அவர் மட்டும் எப்பயுமே ஜெயிச்சு கொடுத்துக்கொண்டே இருக்க அவர் என்ன மிஷினா?

ஒரு மனிதன் உச்சகட்ட புகழ் பெறும் போது, இது மாதிரியான வசைகள் வரத்தான் செய்யும்.

அவர் இந்திய அணிக்குச் செய்த அளப்பரிய சாதனைகளை ஒருபோதும் மறக்கக்கூடாது.
சென்னை அணி அவரால் தான் கெடுகிறது என்ற வாதம் ஒருபோதும் வேண்டாம்.

ஆர்சிபி ரசிகர்கள் 18 வருடம் கோப்பை வாங்காத போதும் ஒரு நாளும் விராட் கோலியை திட்டியதில்லை. ஆனால் சென்னை ரசிகர்களில் சிலர் மோசம்.

சம்பந்தமே இல்லாமல் ஒருவரைத் திட்டுவது நியாயமல்ல. தோனி போயிட்டா மட்டும் மற்ற பத்து பேர் ஆடாமல் ஆட்டத்தை வெல்ல முடியுமா என்ன?

அணியாக என்ன செய்யலாம் என்று யோசிப்பது சிறப்பு. தனிப்பட்ட ஒருவரின் மீது வன்மத்தைக் கக்கக் கூடாது.

நீ ஆடு தல. நாங்க இருக்கோம்.