குழந்தைப் பருவத்தில் நாயகனாக, வழிகாட்டியாகத் தெரியும் அதே தந்தை விடலைப் பருவத்தில் வில்லனாகத் தெரிவது வழக்கம்.
அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே mobile ரொம்ப உபயோகிக்காதே, சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டதோ? தண்ணி அடிக்கிற மாதிரிதெரியுதே? என்ன செலவு பண்ற? நல்ல ஆட்களோட மட்டும் பழகு. நல்ல பழக்கங்களைப் பழகு என்று சொல்லும் போதும், கேட்கும் போதும், வெறுப்பாகத் தான் தோன்றுகிறது.
சும்மா எப்ப பாரு advice. என்ற வாசகத்தை உபயோகிக்காதவர்கள் வெகு குறைவு.
ஆனால் அவர் பேசுவது நமக்காக, நம் வாழ்க்கைக்காக என்பதை உணர நாம் முயற்சி செய்வது கூட இல்லை.
அட அந்தாளு கெடக்குறான். எப்பப் பாரு நய் நய்னு advice என்று போதையில் பிள்ளை உளருவதைக் காதால் கேட்ட பிறகு கூட, “ஏய் அவன் சாப்பிட்டானானு கேளு?” என்று தன் மனைவியிடம் எதுவுமே கேட்காதது போல நடிக்கும் அந்த வாழும் தெய்வங்களின் மதிப்பை உணர்வது நம்மில் மிகச் சிலர் மட்டுமே.
சிறு வயதில் நமக்கு சோறு ஊட்ட அம்பாரி ஏத்தி யானையாக முட்டி தேயத் திரிந்த அந்த ஜீவன், விடலைப் பருவத்தில் நாம் ஆசைப்பட்டதை வாங்கித் தர உடலை வருத்தி உழைக்கும் அந்த ஜீவனை, தன் மகன் பட்டப் படிப்புப் படித்து பெரிய அதிகாரியாக வேலை செய்வதற்காக பல அதிகாரிகளிடம் தனது கர்வத்தையும், சில நேரம் தன்மானத்தையும் கூட விட்டுக் கொடுக்கும் அந்த ஜீவனை, தன் மகன் பட்டம் பெற்ற போதும், வேலைக்குப் போகும் போதும் உலகிலேயே அதிக அளவில் பூரிப்படையும் அந்த ஜீவனை, எளிதாக உதாசீனப்படுத்தி விடுகிறோம்.
கடவுள் இல்லை என்ற வாசகம் தவறு.
வெறும் பத்து மாதம் சுமந்த தாய் கடவுள் என்றால், வாழ்க்கை முழுதும் தன் தோளிலும், நெஞ்சிலும் சுமக்கும் தந்தை?
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. சரிதான்.
தந்தையைக் காட்டிலும் பெரிய தெய்வமுமில்லை.
வெறும் initial மட்டுமல்ல தந்தை. அவருடைய ஒரு உயிர்த்துளி தான் நாம்.
தன்னை வணங்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் எதிர்பார்ப்பதில்லை. குறைந்தபட்சம் உதாசீனம் செய்யாமலாவது வாழ்வோம்.
அப்படி இல்லாவிட்டால் நாம் வாழும் வாழ்க்கை மட்டுமல்ல நாமும் தவறானவராவோம்.