வீர தீர சூரன்.
பெயருக்கு ஏற்றாற் போல, ஒரு வீரனின் கதை.
பல வீரர்களை இதற்கு முன்பு இதேபோன்ற கதைகளில் நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். இது தமிழ்சினாமாவுக்கு மிகப்புதிதான கதை ஒன்றுமல்ல.
ஆனால் திரைக்கதையின் தன்மையும், சில காட்சிகளின் வடிவமைப்பும் நமக்கு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தருகிறது.
ஒரு பெரிய வில்லனிடம் எத்தனை அடியாட்கள் இருந்தாலும், அந்த வில்லனுக்கு ஒரு இக்கட்டான சூழல் வரும்போது அவர்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாமல் கதாநாயகன் தான் வந்து தன்னைக் காப்பாற்றுவான் என்று, எப்போதோ தன்னிடமிருந்து விலகி இப்போது எந்த வம்பு வழக்கிற்கும் போகாமல் திருந்தி வாழும் கதாநாயகனைத் தேடிச்சென்று, அவன் காலில் விழுந்து தன்னையும் தனது மகனையும் காப்பாற்றும்படி கதறுகிறான்.
தர்மசங்கடமான சூழலில் மாட்டிக்கொள்ளும் கதாநாயகன், வில்லனுக்காக, காவல்துறை உயரதிகாரியை கொலை செய்ய முயலும் போது அது தவறிவிடவே, படபடப்பு அடைந்த வில்லன் குழு, கதாநாயகனின் குடும்பத்தை சுற்றுப் போட்டு, இப்ப நீ அவன கொலை செய்யாவிட்டால், நாங்கள் உன் குடும்பத்தைத் தீர்த்து விடுவோம் எனக் கூற, கதாநாயகன் கடுப்பாகி நாம ஏன் இவங்களுக்காக மறுபடியும் கெட்டது செய்யனும்னு நினைத்து, காவல்துறையோடு இணைந்து இரட்டை வேடமிட்டு வில்லன் கும்பலைத் தீர்த்துக் கட்டும் கதை.
எத்தனையோ படங்களை இதுபோன்ற சாயலில் பார்த்திருந்தாலும் இந்தப்படத்தின் திரைக்கதையும், கொலைக்கான திட்டமிடல் காட்சியும், கதாநாயகனின் பின்னனி கதை என்ன என்பதைக்காட்டும் காட்சியும் தனித்துவம், அட்டகாசம். இந்தப்படத்தை நம்மோடு இணைப்பது அத்தகைய காட்சிகள் தான்.
மற்றபடி டப்பு டுப்பு என்று சுடுதலும், கதாநாயகன், பல பேரைப் பந்தாடுவதும் என வழக்கமான சண்டைக்காட்சிகள் தான்.
சிங்கம் போல நடந்து வரான் பாடல் மீண்டும் சீயானுக்காக ஒலித்திருப்பது அரங்கின் ரசிகர்களிடையே ஆராவாரத்தைக் கிளப்புகிறது.
விக்ரமுக்கு சமீப காலமாக மிகப்பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை. அவைகளை ஒப்பிடும் போது இது ஒரு நல்ல படம்.
எத்தனை வயதானாலும் படத்திற்காக தனது உடலை வருத்தித் தாயாராவதில் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் விக்ரம்.
அதிரடி ஆக்ஷன் பட ரசிகர்களுக்கும், விக்ரம் ரசிகர்களுக்கும் இது ஒரு நல்ல விருந்து.
அன்புடன் நினைவுகள்.