Categories
நினைவுகள்

இனிக்கும் நினைவுகள்!

பள்ளி ஆண்டு விழா!

பெற்றோர், பெரியோர், தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஒருங்கிணைந்த நீங்கா நல்ல நினைவுகளைத் தரும் நிகழ்வு பள்ளியின் ஆண்டு விழா.

இதன் உணர்வு எனக்கு 1992 துவங்கி இப்போது வரை பயணிக்கிறது.

ஆமாம். 1992 ல் எனது பள்ளியின் ஆண்டு விழா!
இந்த ஆண்டு எனது மருமகளின் பள்ளி ஆண்டு விழா.

1992 லும், இப்போதும் எனக்குக் கிடைத்த உணர்வு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பெற்றோர்களின் கைதட்டல் நிரம்ப அவர்களின் முன்னே டான்ஸ் ஆடுவது என்பது ஒரு அலாதியான அனுபவம். அப்படி நான் முதன் முதலாக ஆர்வமாக நடனமாடப் பெயர் கொடுத்து கலந்து கொண்ட போது, ராஜா சின்ன ரோஜாவோட பாடலில் வரும் குரங்குகளாக என்னையும், எனது சில நண்பர்களையும் தேர்ந்தெடுத்தனர்.

அடப்போங்கடா டான்ஸ் ஆட வந்தா குரங்காடச் சொல்றாங்க என்று அந்த ஆண்டுவிழாவில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.

அடுத்தடுத்த ஆண்டுகளில், மும்மொழியில் வரவேற்புரை, விளையாட்டுப் போட்டிக்கு பரிசு, (லெமன் இந்த ஸ்பூன் போன்ற போட்டிகள்), பள்ளியில் நன்கு படித்ததற்கான பரிசு என்று இரண்டு மூன்று முறையாவது மேடையேறிய தருணங்களை மறக்க முடியாது.

அதிலும் அப்போதைய அந்த வருடத்தின் ட்ரென்டிங் பாடல்களான அவள் வருவாளா மற்றும் திருப்பதி ஏழுமலை வெங்கடேஷா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்ட காரணத்தால், ஒட்டுமொத்த கலைவிழாவிலும் நாங்கள் தான் டாப்.

அவள் வருவாளா பாடலுக்கு சிவப்பு நிற நெக் டீசர்ட் மற்றும் ப்ளூ நிற ஜீன்ஸ்போட்டு 8 மாணவர்கள் ஆடியதெல்லாம் அப்போதைய கால கட்டத்தில் வாய்பிளந்து பார்க்கும் நிகழ்வு.

திருப்பதி ஏழுமலை வெங்கடேஷா பாடலுக்கு பிரபுதேவா போல ஒருவனைத் தூக்கிப் போட எல்லாம் பயிற்சி வழங்கலாமா என்று பேச்சு வந்து பிறகு கைவிடப்பட்டது.

ஆனாலும் சினிமாவுக்கு நிகராக நல்ல ஆடல்.

எங்களுக்கெல்லாம் ஒரே வருத்தம் வெல்வட்டா வெல்வட்டா பாடலுக்கு பொன்மதியோடு டூயட் ஆட முடியாமல் போனதுதான்.

கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆனாலும் அந்த ஆண்டு விழாவின் பசுமையான நினைவுகள் மறக்கவில்லை.

அதேபோல நேற்று எனது பள்ளி ஆண்டுவிழாவில் அவள் மேடையேறிய தருணம் எனக்குள் இருவிதமான உணர்வுகளைக் கடத்தியது.

நினைவுகளும், நிகழ்காலமும்.

அது ஒரு புதிய அனுபவம். மேடையாலாடிய எனது மருமகளின் வடிவில் என்னை நான் யூகித்துக் கொண்டு எனக்கு நானே கைதட்டிய தருணம்.

அவள் ஆடிய பாடலும் புதிதல்ல. 1999 ல் ஜோதிகா ஆடிய பூவ பூவ பூவே பாடல் தான்.

அதனால் இன்னும் கூட மனதிற்கு நெருக்கமாகவே அமைந்தது. புத்தாடை உடுத்தி அவள் மேடையேறி பயமின்றி நடனமாடி முடித்து வந்த உடன், எதையோ சாதித்தது போல 250 மிலி ப்ரூட்டியில் பாதிக்கு மேல் குடித்த போது, நாங்கள் செய்த அதே சேட்டைகள் நினைவில் வந்து போனது.

டான்ஸ் ஆடி முடித்த பிறகு லிட்டில்ஹார்ட் பிஸ்கட், மற்றும் கூல்ட்ரிங்ஸ். லிட்டில்ஹார்ட் பிஸ்கட்டெல்லாம் வந்த புதிய காலம் அது. எல்லா இடத்திலும் கிடைக்காது.

வாழ்வின் பல நிகழ்வுகளும் நம்மையும் குழந்தையாக்கி, நமது குழந்தைப் பருவத்தை நமது கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.
ஆனால் என்ன, எல்லாம் கானல் நீர் தானே!

வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ்வோம். ரசித்த தருணங்களை அணைபோடுவோம். சோகங்களைத் தள்ளி வைப்போம்.

அன்புடன் நினைவுகள்.