விடியும் என்று நம்பித்தான் நிம்மதியாக உறங்குகிறோம்.
அதைப்போலவே முடியும் என்று நம்பி படபடப்பு இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால் நிச்சயமாக முடியும்.
ஒருவேளை அது முடியலாம், அல்லது அந்த முயற்சி வெற்றியைத் தராமலும் போகலாம் ஆனால் முயன்றது தோல்வி அல்ல. முயற்சி என்பதே வெற்றி தான் என்பதை உணர்ந்தி கொண்டால் இந்த உலகை வென்று விடலாம்.
உலகை வென்று விடலாம் என்றால், மாவீரன் நெப்போலியன் போல படைகொண்டு உலகைக் கட்டி ஆள்வதல்ல.
ஒரு முயற்சியில் நாம் தோல்வியுறும் போது, நம்மை கேலி பேசும் உலகை அடப்போங்கடா, எனது வெற்றி தோல்வியைப் பற்றி தீர்மானிக்க நீங்கள் யார். எனது முயற்சி முழுமையானது. அதுவே எனக்கு வெற்றி தான் என்று நிம்மதியாக நாம் அடுத்த முயற்சியைச் செய்யலாம்.
நாம் வெற்றி அடைந்த பிறகு அதைப்பற்றிய விளக்கம் கொடுக்கலாம். ஏனென்றால் அதேபோல் பலரும் முயற்சிப்பார்கள், அந்த வார்த்தைகள் ஊக்கமளிக்கும் என்பதற்காக.
ஆனால் நாம் தோல்வியடைந்ததை கேலி செய்யும் யாருக்கும் நாம் எந்தவிதமான விளக்கமும் கொடுக்க அவசியமில்லை.
பழைய விளக்கம் தான் என்றாலும், நியூட்டன் தனது முதல்முயற்சியில் சலித்திருந்தால் நமக்கு இன்று வெளிச்சமில்லை.
ரைட் ப்ரதர்ஸ் தமது முயற்சியை முழுமையாக செய்யாதிருந்தால் நாம் இன்று பறக்க முடியுமா?
வானை அளப்போம், கடல் மீனை அளப்போம் என்று நவீன அறிவியல் வரும் முன்பே கற்பனையை விண்வெளி வரை வளர விட்டவர்கள் நாம்.
இன்று விண்வெளியில் தங்கி, பல தடைகளைத் தாண்டி பூமியைத் திரும்ப அடைந்திருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பற்றி பாராட்டிப் பேசி விட்டு, நமது அன்றாட வேலையை நம்மால் முடிக்க இயலுமா என்ற சந்தேகத்தோடு பயணிக்கிறோம்.
நம்மைப்போன்ற ஒரு சக மனிதி இத்தனை சாதனைகளைப் படைக்கும் போது நம்மாலும் பல சாதனைகளைப் படைக்க இயலும் என்ற உத்வேகம் வர வேண்டுமே!
நம்பிக்கையோடு எதிர்கொள்வோம் ஒவ்வொரு நாளையும்.
எல்லா நாளும் இனிய நாளே!