சமீபத்திய மாநில நிதிநிலை அறிக்கையில் அரசு அதிகாரிகளுக்கு அவர்களே வியக்கத்தக்க வகையில் பல சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டிருந்தது.
அரசு வேலையில் இருப்பவர்கள் உயிர் துறக்கும் பட்சத்தில் மகளுக்கு திருமண செலவுக்கு 5 லட்சம், 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு என பிரம்மாண்ட சலுகைகள் வழங்கப்பட்டன.
தனியார் ஊழியர்கள் பலரும் நிரந்தரமான வேலைச்சூழல் மற்றும் நியாயமான சம்பளம் என்பனவற்றிற்கே திண்டாடும் போது அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இத்தகைய சலுகை கொடுப்பதை இங்கே யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
இதனால் தான் அரசு வேலை என்றாலே, ஒரு தனி மரியாதையும், கௌரவமும்.
அது சரி. ஆனால் இத்தனை சம்பளமும் சலுகைகளும் வாங்குபவர்கள் தனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலையை செய்ய வேண்டுமல்லவா? அப்படி அவர்கள் தனது வேலையில் தவறு செய்யும் பட்சத்தில், சலுகைகள் போல தண்டனையையும் தாராளமாகத் தந்தால் தானே அடுத்த முறை இன்னொரு அதிகாரி அந்தத் தவறை செய்ய மாட்டார்?
ஆனால் நடைமுறை அப்படியா இருக்கிறது?
அரசு அதிகாரிகள் கொலையே செய்தாலும் பணியிட மாற்றம், குறுகிய கால இடைநீக்கல் போன்ற தண்டனைகள் தான் பிரதானமாகத் தரப்படுகிறது.
இந்த மிதமான தண்டனைக் கலாச்சாரம், ஏற்கனவே அதிகார தொனியில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு மேலும் வசதியாகத்தான் போகிறது.
எனது வீட்டிலும் அரசு அதிகாரிகள் உண்டு, நண்பர்கள் சிலரும் அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளுக்கும் எதிரானது அல்ல. மேலும் சமீப காலத்தில் நான் செய்யும் பணி நிமித்தமாக, சில அரசுத்துறைகளோடு நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட்டது. அதனால் அந்தத் துறைகளில் நிர்வாகம் எப்படி ஒழுங்கான முறையில் நிகழ்கிறது என்பதையும் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த நிர்வாகத்துக்கும் கட்டுப்படாமல், பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்கும் அரசு அதிகாரிகளை முறையாக தண்டித்தல் என்பது அவர்களை சீரான முறையில் வழிநடத்துவதற்கு உபயோகப்படும்.
சமீபத்தில் நிகழ்ந்த இரு சம்பவங்களின் பாதிப்பாகத் தான் இந்தக் கட்டுரை.
முதலாவது அரசுத் தொடக்கப்பள்ளியில் மாணவிகளை கழிவறை சுத்தம் செய்யச் சொன்ன பள்ளி தலைமையாசிரியை.
ஒரு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை என்பவர் நினைத்தால் அரசிடம் வற்புறுத்தி பள்ளியை மற்றும் கழிவறையை சுத்தம் செய்வதற்கான ஆட்களைப் பணியில் அமர்த்தலாம். குறைந்தபட்சம் தற்காலிகமாகப் பணியில் அமர்த்தி, பள்ளிக்கூட பராமரிப்புத் தொகையிலிருந்து கூட அவருக்கு சம்பளம் அளிக்கலாம்.
அதைவிடுத்துப் படிக்க வந்த பிள்ளைகளை கழிவறை சுத்தம் செய்ய வைப்பது அவர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணத்தை விளைவிக்கும். அதுவும் தொடக்கப்பள்ளி மாணவர்கள். அந்த தலைமையாசிரியைத் தன் பிள்ளையை அப்படிச் செய்வாளா?
முதலில் அரசு அதிகாரிகளின், அமைச்சர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
சம்பளம் மட்டுமே அரசாங்கத்திடமிருந்து வாங்கி விட்டு மற்றவை எல்லாம் தரமான தனியார் என்றால், நீங்கள் தரமான வேலை செய்வதில்லையா?
பிறகு உங்களுக்கு எதுக்கு யாருக்குமில்லா சலுகைகள் என்ற கேள்வி எழ வேண்டும்.
இரண்டாவது சம்பவமும், பள்ளிக்கூட சம்பவம் தான்.
சத்துணவு சாப்பிட்ட 36 பிள்ளைகளுக்கு வாந்தி மயக்கம்.
காரணம் அலட்சியமும், ஊழலும்.
எனக்கு விவரமறிய எனது பள்ளி தலைமையாசிரியர் அவ்வப்போது சத்துணவு சாப்பாட்டை எடுத்து ருசி பார்ப்பார்.
அதனால் அவர்கள் எந்நேரமும் இவர் வரலாம் என்ற பீதியலேயே தரமில்லாத வகையில் உணவு தயாரிப்பது இல்லை.
ஆனால் வாந்தி மயக்கம் வரும் அளவிற்கு உணவு மோசமாக இருந்தைப் பரிசோதனை செய்யாமல் அத்தனை குழந்தைகளுக்கும் கொடுத்தது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. ஒரு தனியார் உணவகத்தில் சமையலைறையும், சமையல் பொருட்களும் எப்படிப் பராமரிக்கப்படுகிறதோ, அதைவிட பத்து மடங்கு சத்துணவில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டுமே!
இதை செய்யாதவருக்கும் இடைநீக்கம் தான்
பள்ளிக்குப் பாடம் படிக்க வந்த பிஞ்சுக் குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியையும் இடைநீக்கம் தான்.
அந்தப்பிள்ளைகளில் யாராவது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருந்தால் அந்தத் தலைமையாசரியை எந்த வகுப்பினராக இருந்தாலும் அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாய வேண்டும்.
அரசு அதிகாரிகள் தவறு செய்தாலும், தற்காலிக இடைநீக்கமும் கண்துடைப்பு தண்டனைகளும், மீண்டும் வேறு இடத்தில் பணியமர்வு என்ற நிலை இருப்பதாலேயே இது மாதிரி சில ஆட்கள் தங்கள் அதிகாரத்ததைத் தரமில்லாத காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
சலுகைகள் கொடுத்துக் கொண்டாடுவது போல, தவறு செய்யும்பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டால் மக்களுக்கு பயனுள்ள வகையில் அரசுத் துறைகள் மாறும்.