Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

நல்லதைப் பாராட்டு – காட்பரீ விளம்பரம் உணர்த்தும் உண்மை

அறிவை, அன்பைப் பகிர மொழி அவசியமில்லை.
ஒரு செயலோ, சைகையோ அல்லது ஒரு புன்னகையோ கூடப் போதும்தான்.

ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் நாமென்ன பேசிப் பழகியா அன்பைப் பகிர்கிறோம்? ஐந்தறிவென்ன நம்மில் பலர் உயிர் இல்லாத வாகனங்கள் உட்பட சில பொருட்களின் மீதும் கூட பேரன்பு கொண்டிருக்கலாம்.

இவற்றுக்கெல்லாம் மொழி அவசியமில்லை.

உலகில் மொழி வரும் முன்பே, அன்பும் அறிவும் பகிரப்பட்டு தான் இருந்திருக்கிறது.

கும்மிடிப்பூண்டி தாண்டினால் சோறு கிடைக்காது, ஏக் சாய் தேதோ என ஹிந்தி பேசத் தெரிய வேண்டும் என்று அந்நிய மொழித்திணிப்பை நிகழத்துடிக்கும் அரசியல் அமைப்புகள் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு காரணி மட்டும் தான். பத்து அல்ல இருபது மொழி கூடப் படிக்கலாம், தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் பள்ளிப் பாடத்தில் அதைத் திணித்து, அதில் தேர்ச்சி பெறாவிட்டால் மாணவர்களை தேர்வடையாதவர்களாகக் கணக்கில் கொள்ளும் கல்வி முறை தவறு.

அதைப்போல மூன்றாவதாக ஒரு மொழியை எமது மாநில மக்களும் மாணவர்களும் படிக்கவே கூடாது என்ற மாநில அரசின் கண்டிப்பும் தேவையற்றது.
நமது வசதிக்கேற்ப அந்த மூன்றாவது மொழியைப் பயிற்றுவிக்கலாம் தான்.

இந்தக் கட்டுரையின் சாராம்சம், அந்த மொழி அரசியலின் விளக்கமோ, எதிர்ப்போ அல்ல.
அன்பைப் பகிர்ந்து கொள்ள மொழி அவசியமற்றது என்பதை அழகாக ஒரு விளம்பரம் சொல்கிறது. அந்த விளம்பரத்தைப் பாராட்டும் விதமாகவே இந்தக் கட்டுரை.

ஆம், பல விளம்பரங்களையும், போலி, பித்தலாட்டம் என்று விமர்சித்து எழிதியிருக்கிறோம். அந்த வகையில் இப்படியான நல்ல விளம்பரங்களைப் பாராட்டுவதும் முறை தானே!

சமீபத்தில் வெளியான காட்பரீ டெய்ரிமில்க் சாக்லேட் விளம்பரம் தான் அது.

வட இந்திய மாநிலத்தில் ஒரு வீட்டு மொட்டை மாடியில் சில பெண்கள் அமர்ந்து குதூகலமாகப் பேசிக் கொண்டிருக்கையில், அங்கு வேறு இரு பெண்கள் வருகிறார்கள். அதில் ஒருவரை இன்னொருவர், இவர் நம் பக்கத்தில் குடிவந்திருக்கிறார். சென்னையிலிருந்து வந்திருக்கிறார் என்று அறிமுகம் செய்ய, அவர்கள் ஹிந்தி மொழியில் ஏதேதோ கேட்க, சென்னைவாசிப் பெண், முஜே ஹிந்தி தோடா, தோடா என்று சொல்கிறார்.

புரிந்து கொண்ட மற்ற வட இந்தியப் பெண்கள், உரையை ஆங்கிலத்தில் தொடர்கிறார்கள்.
டப்பா இங்கிலீஷ் தான், ஆனால் சொல்ல வந்த கதையை அந்தப்பெண் சொல்லி முடித்து விடுகிறார்.
முடித்து விட்டு மேலிருந்து அழைத்த தனது பட்டம் விடும் பையனிடம், ஃப்ளை, ஃப்ளை என்று அர்த்தம் புரியாமல் சொல்ல கூட்டமே சிரிக்கிறது.

தனது ஆங்கிலப்பேச்சில் தவறு இருப்பதை உணர்ந்து சிரிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்ட அந்தப் பெண், வெட்கப்புன்னகையுடன், my English little little என்று சொல்லி, சாக்லேட்டை சென்னைப் பெண்ணிடம் தருகிறார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு, சின்னதாக இருக்கலாம், ஆனால் இனிமை அதிகம் என்று சொல்ல விளம்பரம் முடிகிறது.

அவ்வளவு அழகான விஷயம் இது. அன்பைப் பகிர்ந்து கொள்ள மொழி ஒரு தடையல்ல.

இதே போன்ற அனுபவம் எனக்கும் உண்டு.
என்னோடு அலுவலகத்தில் பணிபுரிந்த பீகார் மாநில நண்பரின் தாயார் ஒரு முறை சென்னை வந்திருந்தார்.
அவரிடம் அந்த நண்பன் என்னைப்பற்றி ஏதேதோ நல்லதாக சொல்லியிருப்பார் போல. அந்தம்மா என்னிடம் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் போஜ்பூரியில் பேசினார்களா, மைதிலியில் பேசினார்களா, அல்லது இந்தியில் தான் பேசினார்களா என்பது கூட எனக்குப் புரியவில்லை.

ஆனால் அன்போடு பேசினார்கள் என்பது புரிந்தது.
பாஷை உணர்த்தாத அர்த்தங்களை அன்பு உணர்த்தியது.

மொழி என்பது கௌரவமோ, அறிவோ, அடையாளமோ அல்ல.

அதற்காக தாய் மொழியை மதிக்கவே கூடாது என்பதும் அல்ல. எப்படி நம்மைப் பெற்றவளைத் தாய் என்று வணங்குகிறோமோ அதுபோல, நமது பிராந்திய மொழியைத் தாயாகப் போற்றுதல் சரி. ஆனால் அரசியல்செய்து மற்ற மொழிகளைத் தூற்றுவதோ, திணிப்பதோ வேண்டாமே!

அன்போடு இணக்கமாக இருந்துவிட்டால் மொழி என்பது அவசியமா, அனாவசியமா என்ற போட்டியே வராது.

தொடர்ந்து பல கோணங்களில் மொழி பற்றி விவாதிப்போம். அன்புடன் நினைவுகள்.