அப்பா – ஒரு ஒப்பற்ற சொல்.
எத்தனை எத்தனை கோபம், விமர்சனம், மனஸ்தாபம், சண்டைகள், வார்த்தை முரண்பாடுகள், சிந்தனை வேறுபாடுகள், தகராறு என இருந்தாலும், எத்தனை வயது காலனமானாலும் அப்பா அப்பா தான்.
அப்பாவிடம் பொதுவாக பல பிள்ளைகளும் தேவையில்லாமல் கோவித்துக் கொண்டு விரோதியாக பாவித்து ஒதுக்கி விடுவார்கள். கவிஞர் வைரமுத்து கூட தனது தந்தையின் இறப்புக்குப் பின்னரே, அவர் அப்பாவின் அருமையை உணர்ந்தார்.
அது மாதிரி அப்பாவின் அருமை உணர்த்தும் ஓரிரு காட்சிகள் இந்தப் படத்தில் இருந்தாலும், மொத்தத்தில் படம் வேற மாதிரி.
வயது வந்தோர் மட்டுமே பார்த்து ரசித்து சிரிக்கும்படியான படம்.
பெருசு…
ஊரில் பவுசாக பந்தாவாக வாழும் பெருசு, அந்தப் பெருசுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், ஒருவர் பள்ளிக்கூட தலைமையாசிரியர், மற்றொருவர் VIP மற்றும் மதுப்பிரியர்.
பெருசு தனது பால்ய சிநேகிதர்களோடு இணைந்து காலம் போன காலத்தில் ஏதோ வயகரா வகை மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டு, பாடி தாங்காமல் பரலோகம் அடைந்து விடுகிறது.
சோகம் என்னவென்றால், பெருசு வயகரா சாப்பிட்டதால் கிளம்பிய உணர்ச்சி அடங்கும் முன்பு இறந்து விடுவதால், அது கிளம்பியவாறே நின்று விடுகிறது. புரிதல் இல்லாவிட்டால் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
இப்படி தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொள்ளும், அவரது மகன்களான வைபவ் மற்றும் சுனில் இருவரும் தங்களாலான முயற்சிகளைச் செய்து தனது தந்தையின் கௌரவத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.
உலக்கை வைத்து உருட்டினாலும் பலனில்லை என்ற நிலை வந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல், வரிசையாக குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் விஷயம் தெரிய அவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்களும், அடிக்கும் லூட்டியும், குடிகாரத்தம்பியான வைபவ் போதையில் செய்யும் சேட்டையும், அவரது நண்பர்கள் செய்யும் எதிர்பாராத சம்பவமும் என இரண்டு மணி நேரம் சிரிப்பை அடக்கி வைக்க முடியாமல் படம் நகர்கிறது.
பெருசுக்குக் கிளம்பிய உணர்ச்சியை வெளியே தெரியாதவாறு மறைக்க அந்தக்குடும்பம் படும் பாடு நமக்கு சிரிப்பைக் கிளப்பி விடுகிறது.
ஒரு கிராமத்துப் பின்னனியில் ஒரு ஊர் பெரியவர் இறந்தால் என்னென்ன சம்பவங்கள் நிகழும், குடும்பத்து ஆட்கள் எப்படியெல்லாம் வந்து நின்று பேசுவார்கள். பக்கத்து, எதிர்வீட்டு ஆட்கள் எப்படி நடந்து கொள்வார்கள், பெரியவரின் நண்பர்கள், அவரது பிள்ளைகள், அவர்களது சம்பந்தார்கள், பிள்ளைகளின் நண்பர்கள், இழவு வீட்டு காரியத்திற்கு வேலை செய்ய வரும் ஆட்கள், ஊர்க்காரர்கள் என்று ஒட்டுமொத்த ஊரிலுள்ள அத்தனை கதாபாத்திரங்களையும் நமது மனதில் நிறுத்தி அவர்களோடு நம்மை அந்நியமாக உணர வைக்காமல் இரண்டு மணி நேரம் பயணித்தது அருமை.
படத்தில் எந்த ஒரு இடத்திலும், இது தேவையில்லாத கேரக்டர், இது சும்மா என்ற காட்சிகளோ, கதாபாத்திரங்களோ இல்லவே இல்லை.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், ஒரு புள்ளியில் இணைத்திருப்பது அருமை.
அதிலும் கிராமத்தின் இளைஞர்களில் ஒருவன் வந்து இந்தக் குடும்பத்திடம் பாடாய்பபடும் காட்சி நமக்கே அவன் மீது பரிதாபத்தை வரவழைக்கிறது.
இதற்கு மேல் இந்தப்படத்தில் விமர்ச்சிக்கவோ விளக்கவோ இடமில்லை.
படத்தின் மூல காரணம், அந்தரங்க தர்மசங்கடமான காரணமாக இருப்பதால், குழந்தைகளோடு பார்த்து ரசிக்க இயலாது.
மற்றபடி வயது வந்தவர்கள் பார்த்து ரசித்து சிரிக்கலாம்.
படம் பார்த்து சிரிக்க மட்டும். மற்றபடி அதிலிருந்து கருத்துகள் எதையும் எடுத்துக் கொள்ளும்படி இல்லை.
நியாயப்படுத்தப்பட்ட சில விஷயங்கள் நியாயமானதாகவும் இல்லை.
மொத்தத்தில் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்.
அவ்வளவே!