Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பகட்டா, உயிரா? சிந்திப்போமா?

வரவு எட்டணா, செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் குந்தணா என்ற பாடலையும், கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்ற பாடல்கள் வெளிவந்து பல காலம் ஆகி விட்டதால் நாமும் அதை மறந்து விட்டோம்.

சிக்கனம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட கஞ்சன் என்ற ரீதியில் கேலிக்குரிய வார்த்தையாகவே மாறிவிட்டது.

ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைப் போல, எவ்வளவு செலவு செய்கிறான் என்பதிலும் பகட்டுப் போட்டி வந்து விட்டது.

முன்பு எதிர் வீடு பக்கத்து வீடுகளைப் பார்த்து பகட்டுக்கு செலவு செய்து கொண்டிருந்த காலம் மாறி இன்று சமூக வலைத்தளங்களில் காட்டப்படும் அனைத்தையும் நாமும் ஒருமுறை செய்து விட வேண்டும் என்ற ஆசையில் செலவுப் போட்டி அதிகமாகி விட்டது.

இந்த ஹோட்டல்ல இத சாப்புடுங்க செம்மயா இருக்கும், இந்த கடையில இந்த டிஷ் மார்வலஸா இருக்கும்.

கொடைக்கானல்ல இருந்து 25 கிமீ ல இந்த ட்ரெக்கிங் ஸ்பாட் வேற லெவ்வல்ல இருக்கும்னு ஆசை தூண்டப்பட்டு, இந்தச் செலவு நமக்கு உகந்தது தானா, நாம் சம்பாதிக்கும் சம்பாத்தியத்திற்கு உட்பட்டதா என்பதை மறந்து இதை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆவல் மிகுதியில் கடனை வாங்கியாவது அதை செய்து விட வேண்டும் என்று செய்கிறோம்.

நமது தேவையைப் பூர்த்தி செய்வதற்கு என்றே, “க்ரெடிட் கார்டு வேணுமா சார்? லோன் வேணுமா சார்?” னு நம்மை கடனாளியாக்குவதற்கு என்றே ஒரு கூட்டமே அலைகிறது. அவர்களுக்கு நம்மை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்ற சமூக அக்கறை கிடையாது. நம்மிடம் கடனை அளித்து விட்டு நம்மிடம் வட்டி வசூல் செய்வது தான் தலையாய சிந்தனை.

அப்படி வட்டி வசூல் செய்யும் கூட்டத்தின் ஆடம்பரப் பேச்சுகளைக் கேட்டு அடுத்த மாதம் சம்பாதிக்கப் போவதை போன மாதமே செலவு செய்யும் மக்கள் இங்கு ஏராளம்.

ஒரு கட்டத்தில் அந்த வரவு செலவின் சுழற்சி தடைப்படும்போதோ,அல்லது செலவினத் தொகை கைமீறும் போதோ தான் புரிந்து கொள்கிறார்கள்.
நாம் வரவுக்கு மீறியும் தேவை இல்லாமலும் செலவு செய்து விட்டோம் என்று.

இது ஒரு ரகம் என்றால், அடுத்த ரகம், பிஸினஸில் சாதிக்கலாம் என்று கணக்கு வழக்கில்லாமல் பணத்தை செலவிடும் ரகம். ஒரு தெருவில் ஒரு தேநீர் கடை இருந்தது. அங்கே நல்ல வியாபாரம்.

ஒரு கட்டத்தில் மக்கள் காத்தருந்து வியாபாரம் செய்யும் அளவிற்கு வளர்ச்சி. அதைக்கண்ட விவரமறிந்த இன்னொரு வியாபாரி பக்கத்தில் இன்னொரு கடை போடுகிறார், வியாபாரம் பிரிகிறது. முதலுக்கு மோசமில்லை.

அடுத்து ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வருகிறது.
உங்களுக்குக் கடையை வைத்துக் கொடுத்து, சுவையாக தேநீர் தயாரிக்க சொல்லித் தருகிறோம்.
அதை வைத்து மாதம் நீங்கள் பத்து லட்சம் வரை சம்பாதிக்கலாம். எங்களுக்கு இதற்காக ஒரு 3 லட்சம் மட்டும் தந்தால் போதும் என்கிறது.

இதில் சிலர் தேவையான இடத்தில் கடை திறந்து தப்பித்துக் கொள்கின்றனர். வியாபார அடுபவமில்லாத பலரும், பத்தோடு பதினொன்றாகக் கடையைத் திறந்து வைத்து வியாபாரமில்லாமல் நஷ்டமாகி திண்டாடுகிறார்கள்.

எதையும் சிந்தித்துச் செய்ய வேண்டும், சிக்கனமாக செய்ய வேண்டும். இருப்பதை வைத்து தான் பறக்க வேண்டும் என்ற நமது முந்தைய தலைமுறையில் கடைபிடிக்கப்பட்ட பழக்கங்களை உடைத்த காரணத்தால் இன்று 100ல் 97 பேர் கடனாளிகளாகத் தான் இருக்கிறோம்.
பைக் முதல் வீடு வரை எதற்காவது லோன் என்ற பெயரில் வட்டி கட்டித் தான் வாழ்கிறோம்.
அதிலும் வீட்டு வட்டி எல்லாம் காலக் கொடுமை.

இப்படி வட்டியின் வலையில் விழுந்த காரணத்தாலோ அல்லது வியாபார வீழ்ச்சியில் ஏற்பட்ட கடனோ, ஏதோ ஒன்றில் சிக்கி 5 கோடி ரூபாய் கடனாளி ஆன ஒரு மருத்துவர், அவரது வழக்கறிஞர் மனைவி, அவர்களின் மருத்துவப் படிப்புக்காகத் தயாராகும் மகன், மற்றும் பத்தாவது வகுப்புப் பயிலும் அறியாச் சிறுவன் ஆகிய நால்வரும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்யோசனை இல்லாமல், அதாவது ஆழமறியாமல் காலை விடுவது என்ற பண்பு அந்த மருத்துவரின் குடும்பத்தை எங்கே தள்ளியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கடன் வாங்குவது எளிது.
செலவு செய்வது மிக மிக எளிது. ஒரு ரூபாய் சம்பாதிப்பது செலவு செய்வதை விட சற்றே கடினமானது.

அதைக்காட்டிலும் இந்தக்காலத்தில் சவாலான விஷயம் என்னவென்றால் சேர்த்து வைப்பது.
சேமிப்பு இல்லாவிட்டால், எதிர்காலத்தில் வரும் இன்னல்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதை சிந்தித்து எங்களிடம் பாலிசி எடுங்களேன் என்று சொல்லும் அதே கார்ப்பரேட்டுகள் தான் அந்தப்பணத்தை கையில் வைத்துக் கொண்டு, அதை பல மடங்காக மாற்ற இந்தப்பக்கம் வந்து “என்னங்க உங்க கிட்ட கார் இல்லையா? தொடர்ச்சியா பைக் ஓட்டினா பேக் பெயின் வரும். நாங்க ஒரு பத்து லட்சம் தரோம்.

0 டவுன் பேமன்ட் லே நாளைக்கே கார் புக் பண்ணிருங்க“ என்று நமது பணத்தை உருவிக்கொண்டிருக்கிறார்கள்.

சமநிலை தாண்டி, வெள்ளம் கழுத்தைத் தாண்டும் வரை புரியாமல் நாமும் அதில் மூழ்கி உயிர்களை மாய்த்துக் கொள்வது சரிதானா?

ஆதங்கத்துடன்…
நினைவுகள்..