Categories
கருத்து நினைவுகள்

வாசிப்பையும் நேசிப்போமே! – நினைவுகளைப் பற்றி – ஆசிரியர் குறிப்பு

இரவில் தூங்கும் முன் கதை சொல்லி, அறிவுரை சொல்லி, வியாக்கியானங்கள் பேசி தூங்க வைக்கும் தாத்தா பாட்டிகள் இங்கே இப்போது இல்லை.

தாத்தாவும் ஃபேஸ்புக்கில் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார், பாட்டியும் கூட சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

பிள்ளைகள் ஆங்ரி பேர்டாகவோ, டெம்பிள் ரன்னராகவோ மாறி ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கதையை வாய் வழியாகச் சொல்லி செவி வழியாகக் கேட்ட போது குழந்தைகளிடையே இருந்த சிந்திக்கும், உருவகப்படுத்தும், கவனிக்கும் திறமை இப்போது இல்லை.

டிவியில், மொபைல் போனில் எல்லாவற்றையும் நேரடியாக உருவங்களாகப் பார்த்து விடுவதால் அவர்களாக கற்பனை செய்வது என்ற ஒரு பழக்கமே முற்றிலும் மறைந்து போனது.

தாத்தா பாட்டியுடனான ஒரு அன்பான உறவு தொலைந்து போனது. அப்பா அம்மாவே இங்கே செல்போன் தருவதற்கான ஆட்கள் என்று மாறிப்போன காலத்தில், தாத்தா பாட்டி எம்மாத்திரம்?

தற்கால குழந்தைகளைப் பொறுத்த வரை, அப்பாவின் மொபைலில் இல்லாத கேமை தாத்தா தன் மொபைலில் டவுன்லோட் செய்ய அனுமதித்தால் அவர் நல்ல தாத்தா.

இல்லாவிட்டால் போர், வேஸ்ட் தாத்தா.

பாட்டி கதைகள் இங்கே கந்தல்.

உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் அங்கே அன்பு, பாசம், உபசரிப்பு இருக்கிறதா என்று பார்ப்பது இல்லை.

WiFi, TV, AC  இதுவெல்லாம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

தாய் மாமன் கதி அதோ கதி.

அந்தக் குழந்தைகளை விட கொஞ்சம் technology ல் அப்டேட் ஆக இருக்க வேண்டும்.

டெம்பிள் ரன்னில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அந்த குழந்தையால் தாவி ஓட முடியவில்லை என்றால் அந்த தாய்மாமன் தாவ வேண்டும்.

இல்லை என்றால் அவன் ஒன்றுக்கும் ஆகாதவன். தாய்மாமன் கதியைப் பார்த்தீர்களா?

பாவம், இந்த ஆன்ட்ராய்டு உலகம்.

ஆதாம் க்கு ஏவாளை கஷ்டப்பட்டு படைத்த ஆண்டவன் செய்த செயல் தவறு.

Simple ஆக ஒரு ஆன்ட்ராய்ட் மொபைலைப் படைத்திருக்கலாம்.

சொல்ல முடியாது.

கடவுளே கூட இந்த கட்டுரையைத் தனது tab ல் படித்துக்கொண்டிருக்கலாம்.

எப்படி மீளப் போகிறோம் இதிலிருந்து?

இத்தனை வக்கனையாக தொழில்நுட்பத்தையும், மொபைல் போன் (அலைபேசி) உபயோகத்தையும் தவறு என்று பேசும் இந்தக் கட்டுரையைக் கூட நாம் இப்போது அலைபேசி வழியில் தான் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம்.

ஏனென்றால் மக்களிடம் இப்போது சென்றடையும் வழி இதுதான்.

இதே கட்டுரையை நான் ஒரு காகிதத்தில் எழுதி அதை 100 காகிதமாக அச்சடித்து, ஏதோ ஒரு பரபரப்பான சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மக்களிடையே கொடுத்தால், அதில் எத்தனை பேர் அதிலிருக்கும் விஷயத்தை வாசிப்பார்கள்?

பாதி பேர் வாங்கக் கூட மாட்டார்கள்.

ஆனால் இதே கட்டுரையை நான் எனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து விட்டால், பிடித்தவர், பிடிக்காதவர் என எனது அலைபேசி பெயர் பலகையில், என்னோடு வாட்ஸ்அப்பில் இணைப்பிலிருக்கும் அனைவருக்கும் சென்றடைந்து விடுகிறது.

இதுவும் இந்தக்கால ஆன்ட்ராய்டு அடிமைக் குழந்தைகளின் மனப்பான்மை போல, ஒரு விதமான சுயநல மனப்பான்மை தான். ஆனால் வேறு வழியில்லை என்கிற போது என்ன செய்வது.
வாழைப்பழத்தினுள் மாத்திரையை வைத்து மாடுகளுக்கு ஏமாற்றி அளிப்பது போல, இன்றைய ஆன்ட்ராய்டெ அடிமைகளுக்கு ஒரு நல்ல விஷயத்தைத் திணிக்க இதுதான் வழி.

இதிலும் பல விமர்சனங்கள் எழாமல் இல்லை. இந்தக் காலத்துல வந்து வாசி, படினு சொல்றியே, எவன்டா படிப்பான். நீ சொல்ல வரும் கருத்தை வீடியோவா எடு, ரீல்ஸ் போடு என்ற அறிவுரைகள் எழாமல் இல்லை.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில், ஒரு கதையை செவி வழியாகக் கேட்பதன் பலன் என்ன என்பதை விளக்கியது போல, வாசித்தல் என்பதிலும் ஒரு நல்ல அனுபவமும், உருவகப் பண்பும், பக்குவமும், ஒருங்கிணைந்த சிந்தனையும் உருவாகும்.

ஒரு கதையை, அறிவுரையை, கருத்தை செவி வழியாகக் கேட்பதைக் காட்டிலும் வாசித்தலின் போது அது ஆழமாகப் பதிகிறது. ஆகையால் தான் கல்வி கற்பித்தல் முறை இன்னமும் கூட, செவி வழி மற்றும் வாசித்தல் என்பதன் அடிப்படையிலேயே நிகழ்கிறது.

இத்தகைய அரிய பலன்களைத் தரும் வாசித்தல் என்பது பழமையான முறை தான். யாரும் கண்டுகொள்ளவில்லை, வீடியோ போடுபவருக்குக் கிடைக்கும் பதில்களும், மரியாதையும், கவன ஈர்ப்பும் எழுத்து வடிவத்திற்குக் கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருந்தாலும்.

வாசித்தலைத் தொடர்ந்து ஊக்குவிக்க என்னாலான ஒரு சிறிய பங்களிப்பைச் செய்து வந்தேன்.

அதை அர்த்தமுள்ளதாகவும், எனக்கு பலனளிக்கும் விதமாகவும் சிறிது காலத்தில் எனது நண்பன், நினைவுகளின் மற்றொரு பதிப்பாசிரியர் சிவப்ரேம், நீ தொடர்ந்து எழுது, உன்னை நான் ஊக்குவிக்கிறேன், உன் எழித்துகளுக்கான பலனையும் நான் தருகிறேன் என்று கைகொடுத்த போது, நமநு தொடர்ச்சியான முயற்சி வீண்போகாது என்பதையும் உணர்ந்தேன்.

இந்த இணையப் பக்கத்தில் நான் எழுதுவதை அவரும், அவர் எழுதுவதை நானும் வாசித்துத் திருத்தங்கள் செய்து எங்களால் இயன்ற சிறப்பான வெளிப்படுதலைத் தர முயற்சி செய்கிறோம். இதற்காக எங்களது அலுவல் நேரம் தவிர்த்து மீதி நேரங்களில் சில மணி நேரங்களை ஒதுக்கி சிறிது மெனக்கெட்டு தான் இந்தச் செயலை செய்கிறோம். எனக்கான பலனாவது சிவப்ரேம் ஆசிரியரிடமிருந்து கிடைக்கிறது.ஆனால் அவருக்கான பலன் என்பது எங்களது எழுத்துகளுக்குக

எங்களது எழுத்துப் பயணம் தொடர்கிறது, தொடரும். இன்று வீடியோ போடு, ரீல்ஸ் போடு என்று அறிவுரை சொல்பவர்களும் ஒரு நாள் இதை உணர்ந்து கொண்டு எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்கிறோம்.

நம்பிக்கையோடு நினைவுகளுக்காக.