Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சு

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

பசுமரத்தாணி போல என்ற வாக்கியங்கள் குழந்தைப் பருவத்தில், அதாவது இளம் வயதில் கற்றலை போதிப்பதற்கான வாக்கியங்கள்.

அதாவது இளம் வயதில் நல்ல விஷயங்களை, வாழ்க்கைக்குத் தேவையான போதனைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அதன் விளக்கம்.

எப்படி குழந்தைகள் நல்ல விஷயங்களை மனதில் பதிப்பித்துக் கொள்கிறார்களோ, அதேபோல, தன்னைச் சுற்றி இருக்கும் சமூகம் காட்டும் வக்கிரங்களையும், தீயவற்றையும் கூட எளிதாக உட்கிரகித்துக் கொள்கிறார்கள்.

தன்னைச் சுற்றி இருக்கும் சுற்றத்தில் பேசப்படும் வார்த்தைகளை சரளமாகப் பேசத் துவங்கும் குழந்தைகள் செய்கைகளையும், அவர்கள் மீது காட்டப்படும் உணர்ச்சிகளையும் திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.

அன்பு காட்டப்பட்டு ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் வளரும் குழந்தை கேஜிஎப் பட கதாநாயகன் போல, தளபதி ரஜினி போல அடிதடிக்காரனாக மாறுவதில்லை.

அது யதார்த்தம்.
குழந்தைகளும் கண்ணாடி போலத்தான்.

நாம் அவர்களுக்கு என்ன தருகிறோமோ, அதைத்தான் அவர்கள் திருப்பித் தருகிறார்கள்.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் நெஞ்சை உலுக்கக் கூடியது.
ஒரு பதிமூன்று வயது சிறவன், ஆறு வயதான சிறுமியை , முகத்தை சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான்.

காவல்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான தகவல் தந்து பிறகு வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறான்

அவன் அந்தச் சிறுமியின் நெருங்கிய உறவுக்காரப் பையன் தான்.
அவளைக் கொன்றதற்குக் காரணம், அந்தக்குடும்பத்தினர் அந்தச் சிறுமியின் மீது காட்டிய பாசமும், இவனுக்கு அதன் மீதான ஏக்கமும் தான்.
அது அந்தச் சிறுமியின் மீது இவனுக்கு கொடூரமான வன்மத்தை உருவாக்கியிருக்கிறது.

மேலும் முகத்தைச் சிதைத்து கொல்லும் அளவுக்கு வன்முறை எங்கிருந்து கற்றுக் கொண்டான் என்று விசாரித்த போது சமீபத்தில் பார்த்த தொடர்கொலை கதை கொண்ட படத்திலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறான்.

குழந்தைகளின் மீது காட்டப்படும் அன்பில் இருக்கும் பாரபட்சமும், குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்ற தீர்மானமில்லாமல் அவன் பார்த்த வன்முறை சினிமாவும் அவன் மனதில் விதைத்தத வன்மமும், வன்முறையும், கோபமும் தான் இந்தச் சம்பவத்தின் ஆணி வேர்.

இது ஒரு கசப்பான உதாரணம்

வேண்டும் குழந்தை வளர்ப்பில் கவனம்.

வேண்டுகோள் வைக்கும் நினைவுகள்.