நமது ஊர்களில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு.
வெல்லம் சூப்புரது ஒருத்தன், வெரல சப்புறது ஒருத்தன் னு.
இந்த கட்டுரையில் பேசப்போகும் விஷயத்திற்கு இந்த சொல்லாடல் சொல்லித் துவங்குவது என்பது தவறு தான். ஆனால் சமுதாயம் போகும் போக்கில் இப்படி சில விஷயங்களைத் தாறுமாறாக சாடை பேசாமல், சாடாமல் இருக்க முடியவில்லை.
சமீபத்தில் ஒரு செய்தி. ராசிபுரத்தில் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனால் தாக்கப்பட்டு இறந்து விட்டான்.
இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செய்தி அல்ல. 9 ஆம் வகுப்பு வரை கொலை செய்யும் சம்பவங்கள் ஊடுருவி விட்டன.
ஏதோ கோபத்தில் தெரியாமல் நடந்த சண்டை அல்ல.
யாரு கெத்து என்று தொடர்ச்சியாக நிகழ்ந்த இருதரப்பு மோதலில், ஒருவர் கெத்தாகி விட்டார், மற்றொருவர் மௌத்தாகி விட்டார்.
இரண்டு பேட்டை ரௌடிகளுக்கு இடையே இப்படி ஒரு சண்டை நிகழ்ந்து ஒருவர் கெத்தாகி ஒருவர் மௌத்தாகி இருந்தால் அது செய்தி.
இரண்டு 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நீண்ட நாள் தகராறு நீடித்து அதில் ஒருவன் இன்னொருவனைப் போட்டுத் தள்ளி இருக்கிறான் என்றால் அது அழிவின் அறிகுறி.
இறந்து போன சிறுவனின் பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டம் செய்கிறார்களாம்.
பத்துலட்சம் பணமும், ஒருவருக்கு அரசாங்க வேலையும் வேண்டுமாம். சரி அது இழப்புக்கு ஈடாக தந்து விடுவது நியாயம் தான்.
ஆனால் அவர்கள் வைக்கும் இன்னொரு முக்கியமான கோரிக்கை என்னவென்றால் இந்த சம்பவத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணமாம்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்.
இப்போது புரிகிறதா?
வெல்லம், விரல் கதை?
மாதா, பிதா, குரு, தெய்வம்.
இதுதான் வழிமுறை.
ஒரு குழந்தையின் வளர்ப்பில், நன்னடத்தையில் முதலாவது வழிகாட்டி, மாதா, இரண்டாவது பிதா, இதற்கடுத்துதான் குரு.
இப்போது பிள்ளை இறந்த பிறகு மாதா பிதாவுக்கு பத்து லட்சம் நஷ்ட ஈடும் குருவுக்கு தண்டனையும் என்றால் அதெப்படி நியாயமாகும்?
அந்தப் பிள்ளை அடிதடிக்கார சண்டைக்காரப் பிள்ளையாக வளர்ந்தது எல்லாம் இவர்களின் கண் முன் தானே?
அதை கண்டிக்காமல் இஷ்டத்துக்கு விட்டு விட்டு இப்போது பாவம், பொம்மைகளாக இயங்கும் ஆசிரியர்களை பழிப்பது எந்த விதத்தில் நியாயம்?
அந்த இறந்து போன சிறுவனின் புகைப்படம் தினசரியில் இருந்தது. அந்த சிகை அலங்காரமே சொல்லி விடுகிறது, இவன் அடங்காதவன் என்று.
இதுமாதிரி ஒரு சிகை அலங்காரத்தோடு நாங்கள் 9 ஆம் வகுப்புப் படிக்கும் காலத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூட பள்ளி வளாகத்திற்குள் வர இயலாது.
ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பிருந்தது. அவர்களின் பிரம்புக்குச்சியின் மீது பயமிருந்தது.
அந்த மதிப்பையும் பயத்தையும் சிறிது சிறிதாக அழித்து சிதைத்து விட்டோம். இப்போது ஆசிரியர் மாணவனைத் திட்டினால் அவன் சிரிக்கிறான்.
அடிக்கக் கை ஓங்கினால், அவன் ஆசிரியரை அடித்து விடுகிறான். இப்படியிருக்க எம்புள்ள செத்ததுக்கு ஆசிரியர் தான் காரணம் என்றால், உங்கள் மனது ஆறிவிடுமா?
தங்கள் பிள்ளை இன்னொருவனிடம் அடிவாங்கி கழிவறையில் துடிதுடித்து உயிரிழந்து போனதற்கு முழுக்காரணமும் நீங்கள் தான் உங்கள் வளர்ப்பு தான்.
அவனை ஒரு முறை கண்டித்து ஒழுக்கமானவனாக வளர்த்திருந்தால், மன்னிப்புக் கேட்க கற்றுக் கொடுத்திருந்தால்? இன்று பள்ளியில் சக நண்பனிடம், சண்டை வேணாம் நண்பா, மன்னிச்சுரு என்று சொல்லி உயிரோடு இருந்திருப்பானே?
அதைவிடுத்துத் தாங்கள் செய்த குற்றத்தைத் தூக்கி ஆசிரியர் சமூகத்தின் மீது போட்டு நிம்மதியாக வாழநினைக்கிறீர்களா?
பத்து லட்சம் பணமும், அரசாங்க வேலையும் நிம்மதியைத் தராது. பிள்ளைய ஒழுக்கமா வளக்காம இப்படி பறிகொடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி உங்களைத் தூங்க விடாது. தினம் தினம் அதை எண்ணி எண்ணி மனது வெந்து நொந்து போவது நியதி.
இந்த சம்பவம் இழப்பை அடைந்த இந்தப் பெற்றோருக்கு மட்டுமல்ல. தன் பிள்ளையை தறுதலையாக வளர்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தான்.
வார்த்தை உச்சரிப்புகளின் வீரியம் என்பது இந்த சமூகம் எனக்களித்த கோபத்தின் வெளிப்பாடு.
Nothing personal என்ற ஆங்கில விளக்க உரையோடு, கோபத்தின் வெளிப்பாடாக, இழப்பின் துக்கம் தாளாமல், இன்னொரு பள்ளி மாணவன் இப்படி இறந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தோடு..
நினைவுகளுக்காக.