நவீன வளர்ச்சி, நவீன முன்னேற்றம், என்பது போல, நவீன மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை தான்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ்ல் தற்போது நிகழ்ந்து வரும் மகா கும்பமேளாவில் நவீன மூடநம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது.
ஆமாம். மகா கும்பமேளாவில் குறிப்பிட்ட நாட்களில் நதியில் புனித நீராடுவது புனிதம், பெரும் பலன் என்று கூறப்படுகிறது. அதை நம்பி குளிக்கச் சென்று கூட்டத்தில் நசுங்கி இறந்தவர்களை நாம் ஏற்கனவே சாடியுள்ளோம். இது மாதிரியான மூட நம்பிக்கை அவசியமா என்று.
அதற்குப் பிறகும் அங்கே கூட்டம் குறைந்தபாடில்லை.
பக்தர்களின் பக்திப் பரவசம் உயிர்பயத்தையும் தாண்டி விட்டது என்பதை உணர்த்தியது.
மேலும் மகா கும்பமேளா பகுதியில் ஆறுகளில் உள்ள நீர் குளிக்கத் தகுதியற்றது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை கொடுத்தது. ஆனால் அந்த அறிக்கையை யாரும் கண்டு கொள்வதாயில்லை.
கூட்டத்தில் நசுங்கி பல உயிர்களே போன பின்பும் அதைக் கண்டு கொள்ளாமல் உயிரைக்காட்டிலும் பக்தியே மேல் என்று போகும் கூட்டமா இந்த தண்ணீர் தரம் பற்றிய அறிக்கையைப் பற்றி கவலைப்படப் போகிறது?
இந்தக்கூட்டத்தைக் குதூகலப்படுத்தும் விதமாக இன்னொரு செய்தியும் வந்துள்ளது.
ஒரு ஆள்/கூட்டம், ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
மகா கும்பமேளாவில் வந்து கலந்து கொண்டு புனித நீராட முடியாத பக்தர்கள், தங்கள் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி, 1200 ரூ பணமும் அனுப்பினால், அவர்கள் அந்த புகைப்படத்தை ஆற்றில் குளிப்பாட்டி காணொளி அனுப்புவார்களாம்.
இதெல்லாம் எந்த விதத்திலாவது புத்தியுள்ள மனிதர்கள் ஏற்பார்களா? ஆனால் இதையும் ஒரு வியாபாரமாக செய்யத்துவங்கி விட்டார்கள் எனில் பக்தி மனிதனை எப்படி முட்டாளாக்கியுள்ளது என்பதை உணர வேண்டாமா?
இது மாதிரி கூத்துக்களும், கலவரங்களும், அடிதடிகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தாலும், நிகழ்ச்சி என்னவோ சிறப்பாகத்தான் முடிந்திருக்கிறது.
ஆனால் அந்த ஊரின் நிலை என்ன என்பதைத் தான் இனி உணரவேண்டும்.
நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் ஒரு பௌர்ணமி இரவில் கூட்டமாக மக்கள் திரண்டதால் என்ன ஆனது என்பதைப் பற்றி பேசியிருந்தோம்.
இந்த ஊரிலோ கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் பக்தர்கள் வந்து போயிருக்கிறார்கள்.
இதுவரை சரி, விழா நடத்திய அரசாங்கம் பொறுப்பெடுத்து எல்லவற்றையும் செய்தது.
ஆனால் விழா முடிந்த மறுநாள், பக்தர்களும், அரசாங்கமும் தனது பணிக்குத் திரும்பி விடும்.
இந்த விழா நடந்ததன் விளைவை அந்த ஊர்பொது ஜனம் தான் சந்திக்க வேண்டும்.
ஏற்கனவே அங்குள்ள மக்கள் மனம் குமுறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தங்களது சாதாரண வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியவில்லை என்று. இன்றைய நாளிதழ் ஒன்றில் பிரயாக்ராஜ் நகரின் ஒரு குடிமகனின் வேண்டுகோளாக ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
அவரின் வேண்டுகோள் இதுதான். தயவுசெய்து கூட்டம் கூட்டமாக இங்கே வராதீர்கள். இந்தப் புனித நதியும், இந்தக் கோவிலும் இங்கே தான் இருக்கும். சிறிது நாட்கள் தள்ளி வந்தால் நிம்மதியான அனுபவத்தைப் பெறலாம், இன்பமாக நதியில் நீராடலாம். இப்போது வந்தால் கூட்டத்தில் தான் சீரழிய வேண்டும். ஏற்கனவே ஊரினுள்ளும், ஊருக்கு வரும் நெடுஞ்சாலைகளும் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்துள்ளது என்று பேட்டியளித்திருந்தார்.
உண்மையிலேயே அந்த ஊர் மக்கள் பாவம்.
சாதாரண காய்கறி முதல் உயிர் காக்கும் மருத்துவம் வரை இந்தக் கூட்டத்தில் ஒருவராகத் தான் சிக்கி சீரழிந்து பெற்றிருக்க வேண்டும்.
தினசரி வேலை சென்று வீடு திரும்பும் ஆட்கள், இந்தக் கூட்டத்தின் இடையே சிக்கிச் சீரழிந்து தான் வீடு திரும்பியிருக்க வேண்டும்.
தாங்கள் பார்த்து ரசித்த ஊரை, இப்போது வேறு கோணத்தில் பார்த்து வெறுத்திருப்பார்கள்.
எது எப்படியோ, ஒரு திருவிழா என்றால் இதெல்லாம் நிகழத்தான் செய்யும். ஆனால் வளர்ந்து வரும் அதீத மூடநம்பிக்கையும் போக்குவரத்து வசதிகளும், மக்களின் கூட்டத்தையும் நெரிசலையும் அதிகப்படுத்துகிறதே ஒழிய குறைப்பதாக இல்லை.
இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன்
நினைவுகள்