Categories
தற்கால நிகழ்வுகள்

குதூகலச் சென்னை- பீச் கிரிக்கெட் ஒளிபரப்பு அனுபவம்

சென்னை, என்று சொன்னாலே நம் மக்களிடமிருந்து இரண்டு விதமான எதிர்வினைகள் வரும்.

என்னப்பா எதுக்கெடுத்தாலும் சென்னை சென்னைனு. மத்த ஊர்ல இருக்கவம்லாம் மனுஷன் இல்லையானு, சென்னைக்கு சம்பந்தமில்லாத சென்னையின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ளும் சிலர் பேசுவதுண்டு.

இவர்களாவது பரவாயில்லை. இன்னும் ஒரு சிலர் உண்டு, இங்கேயே வந்து வாழ்ந்து அனுபவித்து சம்பாதித்து விட்டு, இந்த ஊரையே, ஊரா இது? என்று கூறும் நன்றி கெட்ட ரகம்.

நம்ம சென்னை இதுக்கெல்லாம் கவலைப்படாமல் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் அள்ளி அணைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வாய்ப்பளித்து வாழ வைத்து விடும்.

வாழ வைத்து விடும் என்பது மட்டுமல்ல, தினம் தினம் கொண்டாட்டம் தான்.

இலவசமாக இன்பமாகப் பொழுதைக் கழிக்க வசதிகள் செய்யப்பட்ட கடற்கரைகள், மலிவாக பொருட்கள் வாங்க பல்லாவரம் சந்தை, பாரீஸ் பஜார்.

மலிவாக துணிகள் வாங்க தியாகராய நகர் என்று ரகரகமாக மக்களுக்கு ஏற்றாற் போல சென்னை பன்முகம் உடையது.

இதைத் தாண்டி சென்னையின் ஒவ்வொரு சின்ன சின்ன பகுதிகள் வரை, பூங்காக்கள் புணரமைக்கப்பட்டு, மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்கள் விளையாடவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு அம்சமாக, நேற்று நான் கண்ட காட்சி எனக்கு வியப்பளித்தது.

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இந்திய- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பெரிய திரையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

திரையின் காட்சி

இதற்கு ஏற்பாடு, SDAT, அதாவது தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம்.

கிட்டதட்ட திரையரங்கு அளவிலான பெரிய திரையில் இந்தப் போட்டி ஒளிபரப்பப்பட்டது. ஒரு 3000-4000 எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றாக கரகோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்து, சத்தம் எழுப்பிக்கொண்டே விராட் கோலியின் ருத்ரதாண்டவத்தை ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது எனது மனம் குழந்தைப்பருவத்தை அடைந்தது.

கூட்டத்தின் ஒரு பகுதி

சிறுவயதில் நண்பர்களோடு இணைந்து கூட்டமாகக் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்பதில் அவ்வளவு ஆவல். பொதுவாக கிரிக்கெட் என்பதையே கூட்டமாக அமர்ந்து கைதட்டி ரசிப்பதில் தான் அதன் உண்மையான மகிழ்ச்சியை நம்மால் உணரமுடியும்.

இன்னும் நன்கு நினைவிருக்கிறது, எங்கள் தெரு முருகன், மகேஷ் சகோதரர்களின் வீடு, சிறு வயது நண்பன் அசோக் வீடு, பள்ளி நண்பன் ராஜா வீட்டில் அவனது பாட்டியோடு இணைந்து பலகாரம் சாப்பிட்டுக்கொண்டே பார்த்தது, டியூஷன் சென்டரில் தொலைக்காட்சிப் பெட்டியை கொண்டு வந்து இந்திய – ஆஸ்திரேலிய இறுதிப் போட்டி பார்த்தது என்று என் மனம் குழந்தைப் பருவத்திற்கு ஒரு முறை சென்று விட்டது நேற்றைய அனுபவத்தின் போது.

உண்மையிலேயே இவ்வளவு பெரிய திரையில், இவ்வளவு பெரிய கூட்டத்தோடு அமர்ந்து கிரிக்கெட் ரசிப்பதில் எவ்வளவு குதூகலம் என்பதை உணரமுடிந்தது.

இதற்கு முன் ராணிப்பேட்டையில் நான் வேலை செய்த போது பெல் நிறுவன குடியிருப்பில் இது மாதிரி ஒரு பெரிய திரையில் கிரிக்கெட் ஒளிபரப்ப பட்டதை ரசித்திருக்கிறேன்.

இப்போது நான் பணிபுரியும் ஐஐடி வளாகத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை பெரிய திரையில் ரசித்திருக்கிறேன்.

ஆனால் யாரென்றே முகம் தெரியாத பலர் சூழ அமர்ந்து, அதுவும், குளுகுளுவென பீச் காற்றில் அமர்ந்து பெரிய திரையில் கிரிக்கெட்டை ரசித்தது ஒரு அலாதியான மகிழ்ச்சி தான்.

அதிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கிரிக்கெட் வர்ண்ணனையாளர் முத்து, பெசன்ட் நகர் பீச்ல ஒரு பெரிய ஸ்கீரீன்ல கிரிக்கெட் பாக்குறாங்க, பெஸி மக்களே வணக்கம்னு சொன்னபோது, இங்கே கூட்டத்தினுள்ளே பெரும் கூச்சல்.

தமிழக அரசுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்திற்கும் நன்றிகள் பல.

மத்த ஊர்லாம் என்ன பாவம் செஞ்சாங்க. எல்லா ஊர்களிலும் இது போல ஏற்பாடுகள் செய்தால் சிறப்பு தானே? தயவுசெய்து செய்யவும் என்ற வேண்டுகோளுடன்.

நினைவுகள்.