Categories
தற்கால நிகழ்வுகள்

சமுதாயம் செய்த கூட்டு பாலியல் வன்முறை

கோவையில் ஒரு 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை.

சமீபத்தில் கூட நம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை விதத்தில் இது குறையுமா என்று!

அது ஒரு பார்வை.
குற்றம் நடந்த பிறகான பார்வை.

ஆனால்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”

என்ற வள்ளுவனின் வாக்கை நாம் நினைக்காமல் விட்டது ஏனோ?

ஆம், இந்தக்கூட்டுப் பாலியல் வன்முறை ஆள் அரவரமற்ற இரவிலோ, காட்டினுள்ளோ நடைபெறவில்லை.

ஒரு பெண்ணிடம் சமூக வலைதளத்தில் இயல்பாகப் பேசிப்பழகிய கல்லூரி மாணவன் ஒருவனின் அழைப்பின் பெயரில் அந்தப்பெண் அவன் தங்கியிருந்த அறையைத்தேடிச் சென்றிருக்கிறாள்.
அங்கே இருந்த அவனது நண்பர்களோடு இணைந்து அந்தப்பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், அந்தப்பெண்ணின் பெற்றோர், அந்தப் பெண் எங்கே போகிறாள், யாரிடம் பேசிப் பழகுகிறார் என்பதைக்கூட அறிந்திராமல் இருந்திருக்கிறார்கள்.
மேலும் அந்தப் பெண்ணுக்கு சகோதரனோ, சகோதரியோ இருக்கும்பட்சத்தில் குறைந்தபட்சம் அவர்களாவது அந்தப் பெண்ணின் நடவடிக்கையைக் கண்டறிந்திருக்கலாம். ஆனால் இது இரண்டுமே நிகழவில்லை.

சரி பெண் வீட்டில் தான் இந்த நிலை என்றால் அந்த இளைஞர்களின் வீட்டில் ஒரு வீட்டினர் கூடவா, சற்று கண்டிப்பானவர்களாக இல்லாமல் போனார்கள்?

அல்லது அந்த இளைஞர்களில் யாராவது ஒருவருக்குக் கூடவா, சகோதரிகள் இல்லாமல் போனது.

இந்தப்பெண்னை பாலியல் துன்புறுத்தல் செய்த போது, நமது சகோதரியை இப்படி யாராவது ஏமாற்றி கூட்டமாக பாலியல் வன்கொடுமை செய்தால் அவள் எப்படித் துடித்துப்போவாள் என்ற எண்ணம் அந்தப் பெற்றோரின் வளர்ப்பில் வந்திருக்க வேண்டாமா?

ஒருவேளை அந்த இளைஞர்களுக்கு காம வெறி ஏறிவிட்டால், தாய்க்கும், சகோதரிக்கும் கூட வித்தியாசம் தெரியாமல்போகுமோ?

அப்படி வெறி கொண்ட மிருகங்களாகத்தான் அந்த இளைஞர்களின் தாய்மார்களும், தகப்பனும் அவர்களை வளர்த்திருக்கிறார்களோ?

இதையும் தாண்டி, இன்னொரு சாதாரண விஷயம்.
அந்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் ஒரு பெண் போவதை யாரும் கேள்வி எழுப்புவதில்லையா?

நானெல்லாம் சென்னைக்கு முதல்முதலாகக் குடி வந்தபோது, ஓனரின்கெடுபுடி தாங்காமல் ஓடியவன்.

கோவையில் கல்லூரியில் பயின்ற போது, நாங்கள் தங்கியிருந்த அறைக்கு யாராவது நண்பர்கள் வந்தாலே வீட்டின் உரிமையாளர் எங்களை அழைத்து, இது யார் என்ன வேலையாக வந்தார், என்று கேட்டு, தேவை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார்.

அந்த அளவிற்கு கண்டிப்பு இல்லாவிட்டால் கூட, குறைந்தபட்சம் தான் வாடகைக்கு விட்ட வீட்டில், இளைஞர்கள், கற்பழிக்கிறார்களா, கஞ்சா புகைக்கிறார்களா? அல்லது சாராயம் காய்ச்சிக் குடிக்கிறார்களா? என்று எதையுமே கண்டுகொள்ளாமல் வாடகை வந்தால் போதும் என்று இருக்கும் வீட்டு உரிமையாளரும் இந்த சம்பவத்திற்கு ஒரு காரணம் தான்.

வீட்டின் உரியைமாளரைத் தாண்டி அந்த வீட்டின் அக்கம் பக்கத்தில் இருந்த ஆட்கள் சிறிது உஷாராகி கண்டித்திருந்தால் கூட இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது.

சிறிது காலம் முன்பு வரை ஒரு சிகரெட் பிடிக்க, ஊர் எல்லைக்குச் சென்று, சிகரெட் வாங்கி காட்டிற்குள் சென்று புகை வருதா வருதா என்று பயந்து பயந்து சிகரெட் பிடித்த காலம் மாறி, இப்போது பள்ளிச் சீருடையோடு டாஸ்மாக் பார்களில் ஆட்டம் போடும் நிலையை உருவாக்கிய இந்த சமுதாயச் சீரழிவு தான் இந்த பாலியல் சம்பவத்திற்கும் காரணம்.

இது கூட்டு பாலியல் வன்முறை தான். ஆனால் இந்த சமுதாயத்தால் நிகழ்த்தப்பட்டது.

இனியாவது கண்களைத் திறந்து பார்ப்போம்.
அநியாயங்களைத் தட்டிக் கேட்காவிட்டாலும், தடுப்பதற்கு நம்மாலான வழிமுறைகளைச் செய்வோம்.

அன்புடன் நினைவுகள்