Categories
தற்கால நிகழ்வுகள்

மும்மொழித் தகராறு- மத்திய மாநில அரசுகளின் தவறு.

இன்று அல்ல, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இதுதான் அரசியல் பரபரப்பு.

இந்தி மொழியைத் திணிக்காதே!

‘இந்தி மொழியைத் திணிக்காதே’ என்று துவங்கி, ‘இந்தி தெரியாது போடா’ வரை வந்துவிட்டோம்.
இப்போது மீண்டும் மத்திய அரசிடமிருந்து இதே மாதிரியான ஒரு போக்கு.

இதில் ஆராய வேண்டும் என்றால், கல்வி என்பது மத்திய பட்டியலிலோ, மாநிலப் பட்டியலிலோ இல்லை. அது பொதுப்பட்டியல். அதன் அடிப்படையில் ஒரு தனி மாநிலத்திற்கு அதன் கல்வித்திட்டத்தைக் கட்டமைத்துக் கொள்ள நமது சட்டம் உரிமை அளித்திருக்கிறது.

அப்படியிருக்கும் பட்சத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தரப்படாது என்று மத்திய அரசு கூறுவது மிரட்டலுக்குச் சமமான ஒன்றுதான்.

இதுமாதிரி ஒரு மாநிலத்தின் மீது மத்திய அரசு தொடர்ச்சியாகத் தனிப்பட்ட வெறுப்பைக் காட்டும் போது, நாங்கள் ஏன் தங்களோடு ஒருங்கிணைந்த தேசமாக இருக்க வேண்டும்? எங்களுக்கான சுதந்திரத்தை, நிதி ஒதுக்கீட்டை நீங்கள் பறிப்பீர்களே ஆனால் நாங்கள் ஒருங்கிணைந்த இந்திய தேசத்திலிருந்து விடுபட்டு, தனி நாடாக எங்களைக் கட்டமைத்துக் கொள்ளலாமே? தங்களோடு இருந்து எங்களுக்கு என்ன உபயோகம் என்ற ரீதியிலும் முடிவெடுக்க நமது அரசமைப்பு அதிகாரம் தந்திருக்கிறது.

இப்படியெல்லாம் இவ்வளவு அதிகாரம் இருக்கும்பட்சத்தில் கூட ஒரு மத்திய அமைச்சர் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளா விட்டால் தங்களுக்கு நிதி கிடையாது என்று பேசுவது ஆணவம்.

விஞ்ஞானமும், வசதிகளும் வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் 3 அல்ல, 30 மொழிகள் தெரிந்திருந்தால் கூட நல்லது தான், ஆனால் அது அதிகாரத்திணிப்பாக இருக்கக் கூடாது என்பது தான் பெருவாரியான பொது மக்களின் விருப்பம்.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் சார்பில் பேசும் அனைவரும் கூறும் ஒரே ஒரு விஷயம் இதுதான்.

மாநில அரசின் அரசியல்வாதிகளும் சரி, எதிர்கட்சியினரும் சரி, வளரும் கட்சியினரும் சரி தங்களது பிள்ளைகளை பல மொழிகளைப் பயில அனுப்பி விட்டு சாதாரண பொது மக்களை வஞ்சிக்கிறார்கள் என்று பேசுகிறார்கள்.

இருக்கலாம் என்று கூட சொல்ல இயலாது.
உண்மைதான்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம், நான் தமிழில் மட்டுமே பிழைப்பேன் என்று இயங்குவதில்லை.

வளரும் கட்சியின் தலைவர் தனது படங்களைத் தமிழில் மட்டுமே வெளியிடுவதில்லை.

எல்லாமே பெருமைக்குரிய பேன் இந்தியாவாகும் போது, பாலிவுட் அதாவது இந்தி பெருமையாக உள்ளது. ஆனால் பாடம் என்று வந்துவிட்டால் மட்டும் இந்தி இஞ்சி போல எரிச்சலைத் தருகிறது.

இங்கே அரசியல்வாதிகளும், அவர்களது பிள்ளைகளும் பல்மொழிகளையும் பயின்று பல மாநிலங்களில் தங்களது வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்யும் போது பொதுமக்கள் ஏன் மூன்றாவதாக ஒரு மொழி பயிலக் கூடாது?

அந்த மூன்றாவது மொழி இந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. சென்னை, கோவை போன்ற நகரங்களில் மற்ற மொழிகளைப் பயிற்றுவிக்கவும் ஆசிரியர்கள் எளிதாகக் கிடைக்கத்தான் செய்வார்கள்.

பொதுமக்களில் பலர் தமிழ்வேண்டாம் என்று செகண்ட் லாங்குவேஜ், பிரெஞ்சு, சமஸ்கிருதம் என்று CBSE பள்ளிகளில் தேடிப் பயிலத் துவங்கி விட்ட போது, அரசுப் பள்ளிகளில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை உருட்டுவது அரசியலாகத்தான் தோன்றுகிறது.

தனது தேவைக்கு மாணவர்கள் இந்தியையோ, மற்ற மூன்றாவது மொழியையோ படித்துப் பார்க்கட்டுமே?
ஒருவேளை நன்கு படித்துத் தேறிவிட்டால்?

லாபம் நமக்குத் தானே?

இல்லை, மூன்றாவது மொழி வரவே வராது என்று சொல்வது அபத்தம்.

ஒரு தமிழனாக பாரதியார் போல, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிது என்று பேச வேண்டும் என்றால் மற்ற மொழிகளை அறிந்து தானே ஆக வேண்டும்?

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நடிகர்களின் மொழித்திறமையை வியந்து கைதட்டுவது?

நம் வீட்டுப் பிள்ளைகளும் நாலு மொழி படிக்கட்டுமே?

விடுங்க சார். உங்க அரசியலை வேறு எதிலாவது காட்டுங்களேன்.

அன்புடன் நினைவுகள்.