Categories
நினைவுகள்

குழந்தைகள் அழுதுவிட்டன, நாம் என்ன செய்ய?

ஆம் குழந்தைகள் அழுதுவிட்டன.
நாம் என்ன செய்ய?

ஒரு குடும்பமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒன்றுகூடும் போது, நமது உறவினர்களை கண்டுகளித்து உறவாடி மகிழும் போது மனதிலிருக்கும் பாரமெல்லாம் காணாமல் போகும்.

அந்தக்காலங்களில் ஏதாவது சின்ன சின்ன விஷேசமாக இருந்தாலும் மொத்தக் குடும்பத்தையும் கூப்பிட்டு விழாப்போல நடத்திய வழக்கம் உண்டு.
விஷேச வீட்டாரின் வசதிக்கு ஏற்றார் போல, விருந்தும் மற்ற உபசரிப்புகளும் இருக்கும். விஷேச வீட்டினர் எத்தகைய வசதியோடிருந்தாலும், மொத்த சொந்தமும் வந்திருந்து விழாவை சிறப்பித்து விட்டுச் சென்ற வழக்கம் சில காலத்திற்கு முன்பு வரை இருந்தது.

ஆனால் இப்போதோ, நாங்க பங்ஷன சிம்பிளா நடத்துறோம்,அதனால எல்லாரையும் கூப்பிடல, இல்லாட்டி வெளியூர் ஆட்கள கூப்புடல, வார வேலை நாட்கள் ல இருக்கிறதால யாரும் பெருசா வரப் போறதில்லை என்ற ரீதியில் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது.

முன்பெல்லாம் 25 , 30 பேர் வந்தாலும் திண்ணையிலும், வீட்டினுள்ளும் , வெளியேயும் தங்கியிருந்து, ஊர் பொது குழாயிலோ, குளத்திலோ, ஆற்றிலோ குளித்து விட்டு, விழாவை சிறப்பித்த உறவுகள் இப்போதோ வேறு மாதிரி யோசிக்கத் துவங்கி விட்டார்கள்.

அங்க போனா தங்க இடமிருக்காது, அதனால , காலையில இங்கிருந்து கிளம்பி, சும்மா தலையக்காட்டிட்டு வந்துருவோம் என்ற ரீதியில் சில விழாக்கள் இப்போது நடைபெறுகின்றன.

கால சூழலியல் மாற்றமும், வாழ்வியல் மாற்றமும் தான், இப்போது ஒட்டுமொத்தக் குடும்பங்களின் ஒன்றுகூடலை நிகழ விடாமல் தடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு மஹிந்த்ரா வேனை வாடகைக்கு எடுத்து, 25 முதல் 30 ஆட்கள் வரை சமாளித்து அமர்ந்து கொண்டு பாடல்களை ஒலித்துக்கொண்டே உறவுகளின் இல்லம் தேடிச்சென்ற அந்தக்கால நினைவுகள் அலாதி தான்.
அதிலும் குழந்தைகளை முன்னாடி ஒரு பலகையில் ( கியர் பாக்ஸ் மேலே)அமர்த்தி வைத்து விடுவார்கள்.

சித்தப்பாவுக்கு பிடித்த பாட்டு, பெரியப்பாவுக்கு பிடித்த பாட்டு என்று எல்லாருக்காமான நல்ல பாடல்களை கேட்டுக்கொண்டே அந்த வேன் , லாரிகளை, பேருந்துகளை முந்திச் செல்லும் போது, அந்த வேன் டிரைவரை கதாநாயகன் போல் பார்த்து வியந்த நினைவுகள் பசுமையானது.

அப்படியான ஒரு சிறிய அனுபவம் இப்போது சமீபத்தில் நிகழ்ந்து மனதை நிறைவடையச்செய்தது.

ஒரு சின்ன ஆன்மீகச் சுற்றுலாவுக்காக, சில குடும்ப உறவுகளின் ஒன்றுகூடல் நிகழ்ந்தது.

விடியற்காலையில் அனைவரையும் எழுப்பி, சுடுநீரைப்பகிர்ந்து குளித்துக்கிளம்பி, டெம்போ டிராவல்லரில் ஏறி அரைத்தூக்கத்தோடு பயணித்த போது, வீட்டிலுள்ள குட்டி வாண்டுகள் டிவில படம் போடுங்க என்று சேட்டை செய்யத் துவங்கியது.
சரி ஏதாவது ஒரு படம் என்று தேடிப்பார்க்கும் போது லப்பர் பந்து படம் கண்ணில் சிக்கியது…அந்தப் படம் போட்ட பிறகு ஒருவர்கூட தூங்கவில்லையே.

அரைத்தூக்கம் , முக்கால் தூக்கமெல்லாம் காணாமல் போனது…

போகும் வழியில் வாண்டுகளுக்கு பிஸ்கட் , நமக்கு வடை என்று வாங்கி சாப்பிட்டுப் படம் பார்த்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது.

படம் பார்த்துக் கொண்டே பயணம் என்பது வழக்கொழிந்து விட்டது. அது திரும்ப நிகழ்ந்த போது மனதிற்கு இதமாகத்தான் இருந்தது.

ஆன்மீகச் சுற்றுலாவிலும் சரி, வீட்டிலிருந்த போதும் சரி, மாமா கண்டித்தால் அத்தையிடம், அத்தை கண்டித்தால் மாமாவிடம், இருவரும் கண்டித்தால் ஆச்சியிடம் தஞ்சம் புகுந்து தனக்குத் தேவையான விஷயங்களைத் தடை இல்லாமல் செய்து கொண்டுவிட்டனர்.

ஒரு மூன்று நாளுக்கு வீட்டில் எந்த இடத்திலும் காலைப் பார்த்து பார்த்து தான் வைத்து நடக்க வேண்டிய கட்டாயம்.

தெரியாமல் காலை வைத்து விட்டால்,குவா குவா என கத்தும் பொம்மையோ, காரோ, பைக்கோ , தாயக்கட்டயையோ, சோழியோ மிதிபடும் அளவிற்கு வீடே அல்லோகலமாக இருந்தது.

தொலைக்காட்சியைப் பார்க்கும் எண்ணமே வரவில்லை.

காலை உணவு முடித்து மதிய உணவு தயாராக, காலை உணவுப் பாத்திரங்களைக் கழுவ நேரம் சரியாக இருந்தது. இடையே ஒரு தேநீர்கேட்ட போது பெரிய கலவரமே நிகழ்ந்தது.

கலகலப்பான ஒன்றுகூடல், திங்கட்கிழமை பள்ளிக்கூடம், ஆபீஸ் என்பதை நோக்கி ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேலே சிறிது சிறிதாக வெறிச்சோடத் துவங்கியது.

என்ன பாப்பா, எங்கள விட்டுட்டு ஊருக்குப் போறியா என்ற கேள்வி, அந்தக் குழந்தையின் முகத்தை வாடச்செய்தது.

இரவு இரயில் நிலையத்தில் இருவேறு ஊர்களுக்குச் செல்லும் இருவேறு குடும்பங்களை வழியனுப்ப நின்றபோது இரயில் நிலையத்தில் குழந்தைகளின் சேட்டையைக் கண்டு ,டிடிஆர், வாடே இந்த இரயில்ல என்று கலகலத்துக்கொண்டே, இருக்க, அவர்களது இரயில் அடுத்தடுத்து வந்து நின்றது.

அனைவரையும் இரயில் ஏற்றி விட்டு வீடு திரும்பும் போது மனதில் இருந்த பெரிய பாரம், எனது கண்களின் வழியே வழிந்து விடக் கூடாது என்று சமாளித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே நகர்ந்த போது, அக்காவிடமிருந்து போன்.

பாப்பா திடீர்னு அத்தை, அத்தை னு அழுவுறா என்று..
அவளிடம், அடுத்த மாதம் மாமாவும் அத்தையும் ஊருக்கு வாரோம்னு சொல்லி சமாதானம் செய்து விட்டோம்.

அது குழந்தை அழுதுவிட்டது.

நாங்கள் என்ன செய்ய?

பதில் இல்லை..

சமாதானம் செய்யவும் யாருமில்லை.
ஓட்டத்தின் மத்தியில் ஒரு இளைப்பாறலாக, தென்றலாக இருந்த நாட்களின் நினைவுகளோடு , மீண்டும் அதுபோன்ற சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் சாதாரண மனிதர்கள்.

அன்புடன்

நினைவுகளின் வலியோடு நினைவுகள்.