மளிகைக் கடை அண்ணாச்சிகளும், அவர்களின் கேலியான பேச்சுகளும் என்றைக்குமே நினைவிலிருந்து நீங்கா இனிமை.
ஒரு மளிகைக்கடை அண்ணாச்சி என்பவர் அந்த குறிப்பிட்ட பகுதியின் மாட்டுவண்டி அச்சாணி போல இருந்த காலம் மாறி இப்போது இணைய வழிப் பொருட்கள் வியாபாரத்தின் அதிகரிப்பால், அண்ணாச்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறி வருகிறது.
சிரித்து ஜனரஞ்சகமாகப் பொருட்களை வியாபாரம் செய்து, அதில் ஒரு உறவு ஏற்படுவது அண்ணாச்சிகளின் காலம்.
உதாரணத்திற்கு, “என்ன அண்ணாச்சி நேத்தே லிஸ்ட் குடுத்தேன், இன்னும் சாமான் போட்டு வக்கலியா?“ என்பதற்கு அவர் நக்கலாக ஒரு பதில் தருவார்.
“நேத்து நாள் சரியில்லணே, இன்னைக்குத் தான் நெறஞ்ச நாளா இருக்கு, இன்னைக்கு போட்டு நானே வீட்ல குடுத்துருவேன்.“
“ஏன் அண்ணாச்சி அப்ப இன்னைக்கு நீங்க சாமான் குடுக்க வரைக்கும் எங்க வீட்டுக்கு வந்தவுகள பட்டினியா இருக்கச் சொல்லவா?“
“அட என்னவே, மத்தியானத்துக்குள்ள குடுத்துருவேன், வீட்டுக்கு யாரு வந்துருக்கா?”
“சொந்தக்காரங்க அண்ணாச்சி.”
“எவ்வளவு மைல் தாண்டி வந்தாலும் சொந்தக்காரங்க வந்துருதாகளே?
நீங்க பேசாம வீட்ல ஆள் இல்லைனு சொல்லிடலாம்லா?”
“அட அண்ணாச்சி, வேண்டிய ஆளுக அண்ணாச்சி, மத்தியானத்துக்குள்ள தயவு செஞ்சு பொருள குடுங்க..”
இது மாதிரி நமது வீட்டு விவகாரங்கள் வரை பேசிப்பழகி வெளியூரில் இருக்கு நமக்கு இன்னொரு சொந்தம் போன்றவர்கள் இந்த அண்ணாச்சிகள்.
பல குடும்பங்களுக்கு மாதத் தவணையில் மளிகைப் பொருட்களும், மாதப் பணம் வராத போதும் அடுத்த மாதமும் இல்லை என்று சொல்லாமல், பணம் வந்தாவுட்டு குடுங்க என்று வியாபாரம் செய்யும் அண்ணாச்சிகளை விட்டு தான் நாமெல்லாம் இணைய வழி வியாபாரத்தைத் தேர்வு செய்திருக்கிறோம்.
காரணம் விலை குறைவு என்ற மாயை.
நம் அண்ணாச்சிகளிடையே வியாபாரம் செய்யும் போது ஒரு பொருளின் தரத்தை அவரது உபயோகித்தினாலோ, அல்லது பிற உபயோகித்துச் சொன்ன அனுபவத்தின் மூலமாகவோ அறிந்துகொள்ளலாம். அதுவே ஒரு ஆரோக்கியமான உரையாடலை உருவாக்கித் தரும்.
“என்ன அண்ணாச்சி, அங்குனகுள்ள புது ஐட்டம்
தொங்குது. சாப்புட நல்லா இருக்குமா?”
“எல்லாம் மைதா தான் அது மட்டும் என் அப்பன் கம்பெனியா?
அதே கழுதைதான் , கலர்மட்டும் தான் மாறுதல்.
வாங்கிச் சாப்புடுங்க, அந்த வீட்டுக்கு வந்த அக்கா சொன்னாங்க
நல்லா இருக்குனு.“
“சரிங்க அண்ணாச்சி, நல்லா இல்லாட்டி அந்த அக்காட்ட கொடுத்துரவா?”
“அது சரிதான் யப்பா, உங்க கிட்ட யாவாரம் பாத்து பத்து பைசா சம்பாதிக்கதுக்கு நாங்க ரத்தத்துல தான் எழுதிக் கொடுக்கனும்போல
விவேக் ஒரு படத்துல, நீ போடுற பத்து பைசா பிச்சைக்கு இவ்வளவு டீட்டெயில் கேப்பியா னு கேப்பாருல, அந்தக்கதையா இருக்கு உங்க வியாபாரம்.“
“சரிங்க அண்ணாச்சி கோச்சுக்காதீங்க ரெண்டு குடுங்க.”
இது மாதிரி ஜனரஞ்சகமாக பேசி சிரிக்க மட்டுமல்ல. ஒரு ஆத்திர அவசர உதவிக்கும் அண்ணாச்சிகள் பெயர் போனவர்களே!
ஏண்ணே உங்க அம்மாக்கு ஆபரேஷனா?
ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்கணே என்று துவங்கி, நாம் வீட்டில், ஊரில் இல்லாமல் வெளியூர் செல்லும் போது, அண்ணாச்சி எங்க அம்மா மட்டும் வீட்ல இருப்பாக, ஒரு ரெண்டு நாளைக்குப் பால், மளிகை சாமான் ஏதும் தேவைனா வீட்ல குடுத்துருங்க, என்று சொல்லும் போது சரிங்கணே வருத்தப்படாம போயிட்டு வாங்க என்று உறுதுணையாகவும் நிற்கிறார்கள்.
இப்படிப்பட்ட அண்ணாச்சிகளின் உறவுகளை உதறித் தள்ளிவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்திலும் மண்ணள்ளி போட்டுவிட்டு தான் நாம் ஸ்விகி டெலிவரி, பிக் பாஸ்கட் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.
என்றென்றும் ரத்தமும் சதையுமாகப் பழகும் ஆட்கள் போல ஆன்லைன் என்பது வராது.
அண்ணாச்சிகளைத் தவிக்க விடாமல் மீண்டும் திரும்புவோம் பழைய முறைக்கு.
அன்பிற்கு முன்னால் 50 பைசா ஒரு விஷயமல்ல என்பதை உணர்ந்து அண்ணாச்சிகளை வாழ வைப்போம்.
அன்புடன் நினைவுகள்