Categories
தற்கால நிகழ்வுகள்

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – நிறைவேறுமா?

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது இல்லாமல், அவரைக் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அந்தப்பெண்ணுக்கு மருத்துவ உதவியும், நஷ்ட ஈடும் அரசாங்கம் தர முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்த தண்டனையைச் செய்த நபருக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய யாரும் துணிந்திரா வண்ணம் இருக்க வேண்டும்.

அதை பொதுவெளியில் யாரும் மறக்காதபடி செய்ய வேண்டும்!

ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி பாலியல் சீண்டல் செய்வதற்கே அவனுக்கு மிகப்பெரிய துணிச்சல் இருந்திருக்க வேண்டும். இதை செய்து விட்டு தப்பித்து விடலாம் அல்லது அந்தப்பெண் இதைப் பொதுவெளியில் சொல்லத் தயங்கி அமைதியாக இருந்து விடுவாள் என்ற எண்ணத்தில் தான் அவன் அதைச் செய்திருப்பான். ஆனால் அதையும் தாண்டி அந்தப் பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி அவளது கர்ப்பம் கலைந்து போகும் அளவிற்கு துன்பத்திற்கு அளிக்கும் அவனது மனநிலை பைத்தியக்காரன் அல்லது சைக்கோ மனநிலையாக அல்லவா இருக்கிறது.

இப்படியான சைக்கோக்களை தண்டிக்கும் விதம் தான் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

நஷ்ட ஈடு என்பது ஒரு நன்மதிப்பைப் பெற்றுத் தரலாமே ஒழிய பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் தராது.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக சமாச்சாரம் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு கடைசியில் இப்போது அதை மறந்து விட்டோம்.
அதைப்போல கல்கத்தா பெண் மருத்துவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் மறந்து போனது.

இப்படி ஒவ்வொன்றாக மறந்து கொண்டே இருக்க இருக்க, புதிது புதிதாக ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. சட்டம் எளிமையானதாகவும், குற்றவாளிக்கு சாதகமாகவும், தண்டனை சாதாரணமானதாகவும் இருக்கும் வரை இந்த அநீதி ஓயாது.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற தண்டனை முறை, குறைந்தபட்சம் இந்தப் பெண்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்தால், இது மாதிரியான அநீதிகள் குறையும்.

நினைவுகள் சார்பான அன்பான வேண்டுகோள்.