Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

உலகம் நம் கையில், நம் மூளை எதன் கையில் ?

உலகமே உன் கையில் என்று நம் கையிலிருக்கும் தொலைநுட்பக் கருவிகள் நமது கையில் உலகத்தைத் திணித்து விட்டு மூளையை அது எடுத்துக் கொள்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சமீபத்திய ஒரு பயணத்தின் போது, எனது நண்பர் ஒருவர், தனது அலைபேசியின் மின்னூக்கியை மறந்து விட்டு வந்துவிட்டார். என்னுடையதும் அவருக்கு ஒப்பவில்லை. ஆகையால் அவரது அலைபேசி மறுநாள் காலை எழும்போது அணைந்து விட்டது.

அவருக்கு ஏதோ ஒரு சின்ன ஆத்திரம், தனது வீட்டிற்கு அழைத்துப்பேச வேண்டும் என்று.

நான் என்னுடைய அலைபேசியைக் கொடுத்து , இதிலிருந்து தொடர்பு கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

சார், பேசுங்க பரவால, என்று அன்புக் கட்டளை இட்ட பிறகு தான் அவர் தன் தலையைச் சொரிந்து கொண்டே உண்மையை விளக்கினார்.

“அது வந்து, அதாவது இப்ப நான் என்ன சொல்றது!!!!????”

அவருக்கு வீட்டு எண் மனப்பாடமாகத் தெரியாது….

தனது அலைபேசியைக் காணோமே என்பதை விட இவரது வீட்டு எண் கூட நினைவில் இல்லையே என்பது தான் இவருக்குப் பெரிய வருத்தம்.

ஆம். பெரும்பாலான ஆட்கள் இப்படித்தான் வாழ்கிறோம். தன் மனைவி, பிள்ளைகளின் எண்களைக்கூட நினைவில் கொள்ளாமல் அலைபேசியில் பதிந்து விட்டாலே போதும் என்று நினைக்கிறோம்.

அந்தக்காலத்தில் லேண்ட்லைன் இணைப்புகள் இருந்த போது எண்களை மனப்பாடமாக வைத்திருப்போம். ஆனால் இப்போது அனைவரது கையிலும் உலகம் வந்துவிட்ட காரணத்தால், மூளையில் சுமை ஏற்ற மறுக்கிறார்கள்.

உலகம் நம் கையில் வருவது சரி, அறிவியல் வளர்வது ஏற்புடையது தான். ஆனால் இப்படி மூளையில் எதையுமே ஏற்றாமல் மழுங்கிப் போய் வாழ்வது சரியா?

நாம் உபயோகிக்கும் 8 GB, 16 GB எல்லாம் தாண்டி பல்லாயிரம் மடங்கு திறன் உடையது நமது மூளை, அதை சரியாக உபயோகிக்காவிட்டால் கெட்டு விடும்.

இனியாவது நமது உற்றார், உறவினர், சுற்றங்களின் எண்களை மனப்பாடம் செய்யத்துவங்கலாமா?

வேண்டுகோளுடன் நினைவுகள்.