ஆயிரம் வெற்றிகளைக் கண்டவன் அல்ல நான்.
ஆயிரம் தோல்விகளைக் கண்டவன்.
இது ஆயிரத்து ஒன்று என்று கூட சொல்லலாமோ?
விடாமுயற்சி, வினையாக்கியதா ?
பெரும்பாலான ரசிகர்களுக்கு இது வீண் முயற்சியாகத்தான் தோன்றுகிறதோ?
ஆம்.ஹாலிவுட் தரத்திலான படம் தான். ஆனால் படத்தின் நீளம்? 151 நிமிடங்கள். 151 நிமிடங்கள் இருக்கும் ஹாலிவுட் படங்களில் ரசிகர்களைக் கட்டி வைத்திருக்க வேறு ஏதோ ஒரு மாயம் உள்ளே இருந்திருக்கும்.
ஆனால் இந்தப்படத்தில் அந்த மாயம் உள்ளே இருந்தது போலத் தோன்றவில்லை.
எல்லாம் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருந்தால் சரியாக இருந்திருக்கலாமோ என்ற மன உறுத்தலைத் தந்தது.
நல்ல ஹாலிவுட் தரத்திலான கதாநாயகன். ஸ்டன்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் டாம் க்ரூஸ் போல நடிக்கத் தயார். அவரை வைத்து ஸ்டன்ட் காட்சிகள் தயாரான விதம் அருமை.
வில்லனும் சரி, சாதாரண சொத்தை நடிகரெல்லாம் அல்ல. ஆக்ஷன் கிங் அர்ஜூன். அவரையும் தாண்டி, இன்னொரு மிரட்டலான வில்லனாக வலம் வந்திருக்கிறார் ஆரவ்.
இவர்களை ஒட்டுமொத்தமாக வழிநடத்துபவராக ரெஜினா. அவரது கதையும், பின்புலமும் நன்றாகத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கதாநாயகன்- கதாநாயகி காதல், தாம்பத்ய வாழ்வு வெளிப்பட்ட விதம், விறுவிறுவென முன்னும் பின்னும் நிகழ்ந்த காரணத்தால் ரசிகர்கள் மனதில் ஒட்டாதது போன்ற உணர்வு.
நேர்கொண்ட பார்வை படத்தில் சில நிமிடங்களே வரும் கணவன் மனைவி காட்சியில் அத்தனை காதலும், அன்பும் இருந்தது. ஆனால் அந்த மாதிரி காதலும் அன்பும் இந்தப் படத்தில் இல்லை.
இருவரது இளமைக்கால காதல் காட்சிகளை அருமையாக வடிவமைத்து விட்டுத் திருமணத்திற்குப் பிறகு இவர்களது வாழ்க்கை எப்படிப் பயணமானது என்பதை ஓரிரு காட்சிகளில் விறுவிறுவென நகர்த்தி விட்டதால், ஒரு ஆழமான உணர்வு ரசிகர்களுக்குக் கடத்தப்படவில்லை.
முன்னும் பின்னுமாக நகர்ந்த கதை, நேர்கோட்டில் பயணித்திருந்தாலோ ரசிகர்களுக்கு இன்னும் தெளிவாக, சில விஷயங்கள் பதிவாகி இருக்கலாமோ என்ற உணர்வு.
படத்தின் மையக்கரு துவங்கிய பிறகு, சஸ்பென்ஸ்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. கிட்டதட்ட 3 முதல் 4 சஸ்பென்ஸ் வரை உள்ளது. அதில் இரண்டு நம்பும்படியாக இல்லை.
வில்லன் குழு, கதாநாயகன், நாயகியை ஏமாற்றுவதற்கு பேய்க்கதை சொல்கிறார்கள் என்பதை நம்மால் கண்டறிந்து இயல முடிகிறது.
ஒரு சஸ்பென்ஸ் சொல்கிறார்கள் என்றால், அதை நாம் நம்பும்படி ஏதாவது ஆழமான பின்புலக்காட்சிகள் இல்லை. ச்சே அப்படி இருக்காது, இந்த ரெஜினா லூஸு லொல்லாய்க்கு சொல்லது. இது வேற ஏதோ டீலிங். இது காசுக்காக அடி போடுது என்று நாமே உணர்ந்து விட முடிகிறது.
மேலும் ஒரு தாபா போன்ற இடத்தில், சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் கடைசி வரை அங்கிருந்து எந்த உருப்படியான விஷயமும் வெளிப்படவில்லை.
மேலும் அங்கே சுற்றி சுற்றி நேரம் வீண்டிக்கப்பட்டது, நமக்கும் நெளிசலை ஏற்படுத்தியது.
கதாநாயகனுக்குத் தகவல் தரும் ஒரு தெரியாத நபர், தப்பாகக் காட்டப்பட்ட காவல்துறை எல்லாம் பின் வரும் காட்சிகளில் அதன் உண்மை முகத்தை உரிக்கும் போது நன்றாக இருந்தது.
ஊரில் அவ்வளவு பிரச்சினை இருந்திருக்கிறது.
பல கணவன்மார்கள் கொல்லப்பட்டு, மனைவிகளைக் கடத்தி ரஷ்யக்காரனுக்கு விக்கிறாங்க என்று அஜித் அவரது மனைவியைக் கண்டுபிடித்த அடுத்த நொடியிலேயே காவல்துறை, வழக்கை முடிப்பதும், இவர்கள் தான் அந்தக் குற்றவாளிகள்.
இவர்களை நீங்கள் கொன்றது பாராட்டுக்குரியது என்று சொல்வது சரி.
ஆனால் இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது இந்த லாரி டிரைவர் என் மனைவியைக் கடத்திட்டானு அஜித் கதரும் போது, நீங்க சாப்பிட்டு விட்டு சாயுங்காலம்டீ குடிச்சுட்டு, 40 கிமீ தள்ளி இருக்கிற போலிஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுங்க என்று சொல்வதெல்லாம்?
அந்த ரோட்டுல, நாயகன்-நாயகியை பாடாய்ப்படுத்தியது ஆரவ் குழு. அப்போதெல்லாம் காவல்துறை வரவில்லை. ஆனால் இவர்களுக்கு எந்தெந்த காட்சிகளில் தேவையோ அப்போதெல்லாம் போலிஸை வரவழைத்துக் கொண்டார்கள்.
லாஜிக்காகவும் சில ஓட்டைகள்.
யதார்த்தமாகவே படம் நகரும் என்று சொல்லி அஜித்துக்கான மாஸ் காட்சிகள் கூட இல்லை. ஆனால் எதற்கு 2.30 மணி நேரம்?
பேசாமல் 2 மணி நேரத்தில் இன்னும் நறுக்கென முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே?
எத்தனை உழைப்பு, எத்தனை காலம்?
ஆனால் அத்தனைக்குமான பலன் கிடைத்தது போல மனதில் திருப்தி இல்லை.
மீகாமன் படத்திலும் பெரிய ஹீரோயிசம் இருக்காது. ஆனால் ஆரியாவுக்கு சுடத்தெரியாது என்று கேலி செய்யும் கும்பல் போன பிறகு அவர், சுட்ட இடத்திலேயே குறிதவறாமல் சுடுவது, இரு கைகளால் சுடுவது, மொத்த கும்பலையும் சுட்டு வீழ்த்தி தப்பிப்பது, பிறகு அதற்கு வில்லன் குழு நடத்தும் புலனாய்வு, இறுதிக்காட்சியில் வாயில் ப்ளேடு போட்டுத் துப்புவது போன்ற பல காட்சிகளில் இருந்த மாயம் இந்தப்படத்தில் எங்குமே இல்லை.
தடம் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையைப் பார்க்கும் போது, அந்த இயக்குனர் தான் இந்தப்படத்தை எடுத்தாரா என்று தோன்றுகிறது.
ஒரு முறை பார்க்கலாம்.
பெரிய மனதிருப்தி இல்லை.
குடும்பங்களும் கொண்டாட வழியில்லை. மொத்தத்தில் ஹாலிவுட் தரத்திலான நல்ல முயற்சி.
ஆனால் வீண் முயற்சி தான்.
வருத்தத்துடன் அஜித் ரசிகன்.