Categories
தற்கால நிகழ்வுகள்

சாமானிய மக்கள் கதிகலங்கும் விமான நிலைய விதிமுறைகள்

சாமானியர்களை மிரட்டுகின்றன விமான நிலைய சோதனைகளும், விதிமுறைகளும்.

ஆமாம். நான் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கக் கிளம்பிய போது யாதார்த்தமாக எனது பையை அங்கே கீழே வைத்து விட்டு, சிறிது நகர்ந்து என் குடும்ப்க் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று நகர்ந்த போது அங்கிருந்து பாதுகாவலர்கள் லப லப என்று கத்தியது, ஒரு மாதிரி மனதில் பாரத்தை தான் ஏற்படுத்தியது. ஆனால் அது அவர்களது பணி, விதிமுறை என்பதை நான் அறியாமல் இல்லை.

பிறகு பல வருடம் கழித்து விமானம் ஏறச்சென்ற போது விதிமுறைகள் எல்லாம் ஞாபகம் இல்லை. காலில் இருந்த ஷூ, இடுப்பிலிருந்த பெல்ட் என இரண்டையும், கழட்டியாக வேண்டும்.
பையிலிருக்கும் லேப்டாப், மற்றும் மொபைல் சார்ஜர் வயர்கள் போன்றவற்றை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஸ்கேனரில் அனுப்ப வேண்டும் என்பதையெல்லாம் கண்டு சிரிப்பாகத்தான் இருந்தது.

போன வாரம் எனக்கு நிகழ்ந்த அனுபவம் இன்னும் புதிது. கடந்த புதன்கிழமை இரவு 10.35 சென்னை – ஹைதராபாத் விமானத்தில் பயணிக்க வேண்டிய அவசியம். பணி காரணமாக.

அந்த விமானம் அன்று தாமதம். இரவு 12.30 மணிக்கு தான் புறப்பட்டது. எனக்கு அன்று லேசாக சளி இருமல், காது வலி வேறு. இந்தக்காது வலி வந்தாலே மூளை செயல்படாதே. அதேபோலத்தான், உறக்கக் கலக்கத்திலும் வலி மயக்கத்திலும் எனது அலைபேசியை இருக்கையின் பையிலேயே வைத்து விட்டு வெளியேறி விட்டேன்.

விமான நிலையத்தையும், விமானத்தையும் இணைக்கும் அந்த இணைப்புப் பாதையைக் கடந்த பிறகு தான் எனக்கு அலைபேசி ஞாபகமே வந்தது.

உடனடியாக பதறிப்போய் உள்ளே திரும்பினேன்
அந்த இணைப்புப் பாதையின் முனையில் இருந்த காவலாளி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.

அதிலிருந்து வெளியேறத்தான் அனுமதி, திரும்பி உள்ளே செல்ல அனுமதி கிடையாதாம்.

ஐயா, நான் டிக்கெட் வச்சிருக்கேன், தூக்கத்துல என் போன அங்க விட்டுட்டேனு சொன்னா கூட அவரு அசைஞ்சு கொடுக்கல.

அப்புறம் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஒரு இன்டிகோ வாடிக்கையாளர் உதவி அலுவலர் வந்தார்.

அவரிடம் பேசி புரிய வைத்த பிறகு உள்ளே இருந்த தனது சக அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு இதுபோல எனது இருக்கை எண்ணில் மொபைல் இருப்பதாகத் தகவல் அளித்தார். என்னை அங்கே உள்ளே விடுவதால் நான் ஏதும் விமானத்தைத் தகர்க்கப்போவதோ குண்டு வைக்கப் போவதோ இல்லை என்பது அந்தக்காவலருக்குத் தெரியும்.

ஆனாலும் அவருக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை அவர் மீற முடியவில்லை. என்னதான் ஆக்ரோஷமாகப்பேசி என்னை வெளியே அனுப்பினாலும் பிறகு அவர் வந்து எங்களிடம் ‘மொபைல் கிடைத்ததா?‘ என்று விசாரித்தார்.

இடையே அந்த இன்டிகோ வாடிக்கையாளர் உதவி அலுவலர், “நீங்க அவரத்தாண்டி வரதுக்கு முன்னாடியே பாத்துருந்தா அப்படியே பின்னாடி போயிருக்கலாம்.
தாண்டி வந்த பிறகு உள்ள விட மாட்டாங்க” என்று கூறினார்.

“என்னயா தமிழ்ல பேசுற?“ என்று கேட்டதும், ”நான் திருச்சி தான்னே, இங்க போஸ்டிங் ஹைதராபாத்ல“ என்றார்.

அதில்லாமல் அந்த அலைபேசி நம் கையில் நேரே கிடைக்காதாம், அது CISF இடம் ஒப்படைக்கப்பட்டு பிறகு நாம் எழுதிக் கொடுத்து அதற்குப் பிறகு தான் கிடைக்குமாம்.

இத்தனையும் முடியறுதுக்குள்ள விடிஞ்சிருமே என்று வருந்திய எங்களுக்குத் தம்பி ஷாபிக் தான் உதவி செய்து விறுவிறுவென 30 நிமிடங்களில் முடித்துத் தந்தார்.

எல்லா விமான நிலையங்களிலும், எல்லா சாமானியர்களுக்கும் ஷாபிக்குகள் உதவ வருவார்களா தெரியவில்லை.

ஆனால் சாமானியர்பளுக்கு விமான நிலையம் ஒரு வியப்பு என்பது அன்றாடம் புரிகிறது.
அனுபவங்கள் கற்றுத் தருகிறது.

அனுபவத்தை விட ஆசானும் உண்டோ?

அன்புடன் நினைவுகள்.