எப்போதும் நமது சொந்த அனுபவம் பிறர் அனுபவத்தோடு ஒத்துப் போகும்.அதுவும் சிறுவயதில் நாம் நமது சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு விடுமுறைக்குப் பயணிப்பது அலாதியான அனுபவம்.
சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்திலும் கூட அந்த உணர்வு மெலிதாகக் கடத்தப்பட்டிருக்கும்.
அப்படியான என்னுடைய அனுபவம், எனது அம்மா வழி தாத்தா பாட்டி ஊர் மற்றும் வீடு , மற்றும் எனது அத்தை மாமா ஊர் மற்றும் வீடு.
இரண்டும் வேறு வேறு விதமான அனுபவங்கள்.
முதலில் எனது அத்தை மாமா வீடு.
அங்கே எனக்காக அன்பைத் தரக் காத்திருக்கும் இரண்டு மச்சான்களும், ஒரு மதினியும்.
அதில் இளைய மச்சானுக்கு என்னை கேலி செய்வதில் பெரும் பிரியம். என் நினைவுக்கு மூத்த மச்சான் அப்படி இல்லை..அமைதியான ரகம்.அன்பான குணம்.
இளையவருக்கும் அன்பில்லாமல் இல்லை.மாப்பிள்ளை என்ற ரீதியில் உருத்தோடு விளையாடுபவர்.
அவர்கள் வசித்த ஊர் திருக்குறுங்குடி.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆற்றங்கரையில் பச்சை பசேலென இருக்கும் ஊர்..ஏற்கனவே நமது ஊர் சுற்றலாம் பகுதியில் திருக்குறுங்குடி பற்றி எழுதியிருக்கிறேன்.
அந்த ஊருக்குச் செல்வதே எனக்குப் பிடிக்கும்.
அங்கே கிரிக்கெட் விளையாடும் காலி இடங்களில் கூட வெயில் பார்த்தாக ஞாபகம் இல்லை.வாழைத் தோப்பிற்குள்ளும், மாமரங்களுக்கு நடுவிலேயும் தான் விளையாட்டு.
அதில்லாமல் மதினி மச்சான்களோடு தாயத்து உட்பட சில விளையாட்டுகளும் ஜோராக இருக்கும்.
இதையெல்லாம் தாண்டி எனது மாமா- அத்தையின் அந்த வீட்டு நிர்வாக முறை.
ஒழுக்கம் என்பதை அங்கிருக்கும் போது ஒரு நாளும் தவற முடியாது.
காலை எத்தனை மணிக்கு எழ வேண்டும், என்பதில் துவங்கி , இரவு எத்தனை மணிக்குத் தூங்க வேண்டும் என்பது வரை மிலிட்டரி ரூல் தான்.
நான் எங்க வீட்டில் கக்கற புக்கற என்று இஷ்டத்திற்கு வாழ்ந்த காரணத்தால், ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை அந்த ஒழுக்கமான வாழ்வு பிடிக்கும்.
விடுமுறை என்பதால் காலை 6 மணிக்கு எழுந்தால் போதும்😐.
6-6.30 மணிக்குள் பல் துலக்குதல் மற்றும் காலைக்கடன்களை முடித்து விட்டால், 6.30-7 மணி வரை ஓய்வு மற்றும் தேநீர்.
7-7.30 குளியில் நேரம்
அவசியம் இல்லாதபட்சத்தில் சுடுதண்ணீர் கிடையாது.
பெரும்பாலும் பம்பில் தண்ணீர் அடித்துக் குளித்ததாக நியாபகம்.
அதற்கும் முன்பு கிணற்றில் நீர் இறைத்துக் குளித்த அனுபவமெல்லாம் எனக்கு அங்கே தான் கிடைத்தது.
இடையிடையே ஆற்றில் நீரோட்டம் இருந்தால் அங்கே சென்று குளிப்போம்.
குளித்து தயாரானதும் சூடான காலை உணவு உண்டால் நன்றாக இருக்குமல்லவா?
அதுதான் கிடையாது. கோவிலுக்குப் போவோம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று .
அதன்பிறகு தான் சாப்பாடு்
எனக்குப் பசிக்குமில்ல அப்படின்னு கதறினால், மச்சான் இரண்டே இரண்டு பிஸ்கட்டைத் தருவார்.அதிலும் இளைய மச்சான் ஒரு பிஸ்கட்டைப் பிடுங்கி வைத்து விளையாட்டடுக் காண்பித்துப் பிறகு தான் தருவார்.
ஒரு மணி நேரம், பெருமாளே பெருமாளே என்று நடையோ நடை நடந்து சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்தால் தான் காலை உணவு.
காலை உணவென்றால் , நல்ல சத்தான உணவு, களி, போன்ற உணவுகள் எனக்கு அங்கே தான் தொண்டைக்குழியில் இறங்கும்.
சமவிகித உணவு என்பது பட்டியல் ஏதும் இல்லாமல் தயாராகும் எனது அத்தை வீட்டில்.
அந்த ரகசியம் இன்னும் புரியவில்லை.
சாப்பிட்ட முடித்த பிறகு பொழுது எங்களுக்கானது.
தோப்புக்குள் விளையாட்டுகள் தான்..பிறகு மதிய சாப்பாட்டுக்கு ஆஜர்..அது முடிந்து மாலை வரை வெளியே அனுமதி கிடையாது.
மாலை 5 மணிக்கெல்லாம் நல்ல சுவையான காபி.
பிறகு சிறிது நேரம் உள்ளே, அல்லது வெளியே என விளையாடிவிட்டு, 7.30-8 மணிவாக்கில் இரவு உணவு முடிந்து விடும்..கட்டாயம் ஒரு வாழைப்பழமும் திணிக்கப்படும்.
ஒரு 8.45 மணிக்கெல்லலாம் விரிப்புகளைப் போட்டு 9 மணிக்கெல்லாம் தூக்கம்.மதினி எனது தலையை வருடித் தூங்க வைத்ததெல்லாம் நினைவில் இருக்கிறது.
எனக்குப் பிரியமான இரண்டாவது இன்பச் சுற்றுலா எனது அம்மா வழி தாத்தா பாட்டி ஊரான சங்கரன்கோவில்.
பெரிய விசாலமான காத்தோட்டமான வீடு.
இன்றும் கூட அங்கே உள்ளே நுழைந்தால் வெளியே வருவதற்கே மனசு வராது.இன்றைய நாளில் சிறிய மாறுதல்களோடு ஆனால் அதே குளிர்ச்சியோடு தான் உள்ளது.
சங்கரன்கோவிலைப் பொறுத்தவரை திருக்குறுங்குடிக்கு அப்படியே எதிர்மறை.
அங்கே காலை பல் துலக்கினால் தான் காலை தேநீர்.
இங்கே அப்படி இல்லை.
ஆச்சி , ஸ்பெஸல் தோசை வேணும் னு சொன்னதும் பத்து நிமிடத்தில் எனது மாமா தோசை வாங்கி வந்து விடுவார்..பல் விலக்கிட்டியா என்று ஆச்சி கேட்டால் , ” சாப்பிட்டு விலக்குறேன் என்று சொல்லிவிட்டு பார்சலைப் பிரித்து விடுவேன்…
உடனே தாத்தா கேலி செய்வார்.
“பட்டிக்காட்டு , அழுக்குப்பிடிச்ச பய, ச்சீ” என்று..
உடனே ஆச்சி நமக்கு ஆதரவுக்கு வந்துவிடுவார்.சின்னப்பய தான , அழுக்குலாம் இல்ல..அவன் சாப்புட்டுத் தேச்சுக்குவான் என்று.
ஆச்சியின் சமையல் அவ்வளவு அருமையாக இருக்கும். சமையலறை அவ்வளவு சுத்தமாகவும், உணவு தயாரிக்கும் முறை சுகாதாரமாகவும் இருப்பது என்பதைத் தாண்டி நல்ல ருசியோடு இருக்கும்.
ஆனால் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்ற ரீதியில் நான் எனது ஆச்சி வீட்டுக்குப் போகும் போதெல்லாம் பெரும்பாலும் கடையில் ஸ்பெஷல் தோசை, மதியம் சுல்தான் பிரியாணி தான்.
அந்தச் சிறு வயதில் கடை உணவு என்றால் ஒரு குஷி தானே.
அனாவசியமாக சுல்தான் பிரியாணியை தினமும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.
இன்றைய சூழலில் குற்றால சீசனின் போது சுல்தான் பிரியாணி வாசலில் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது, இந்த பிரியாணியவா நாம தினமும் வாங்கி சாப்பிட்டோம் என்று தோன்றுகிறது.
அடுத்தது , அங்கே நமக்குக் கேட்டது கிடைக்கும்,எங்கே போவதற்கும் தடைகள் இல்லை.
எனது ஆச்சியின் தங்கச்சி மகன்களோடு சினிமாக் கொட்டகைகளே கதி என்று கிடந்தது இன்றும் மனதில் ஒரு தனி நினைவலையைத் தருகிறது.
கேப்டனின் வல்லரசு படத்தை என் ஆச்சி வீட்டில் விடுமுறையில் இருந்தபோது 9 முறை பார்த்தேன்.அதாவது பத்து நாள் இருந்ததில் ஒரு நாள் தவிர்த்து மீதி நாட்கள் அனைத்திலும் காலை காட்சி பார்த்தேன்.
காலை சாப்பிட்டு தியேட்டருக்குப் போய் படம் பாத்துட்டு, மதியம் வீட்டுக்கு வந்தால் பிரியாணி தயாராக இருக்கும்.
அந்தத் திரையரங்கில் பெண்கள் வரிசையில் 5 ரூ கட்டணம் அப்போது.
நானும் எனது உறவுக்காரப் பையனும் சிறுவர்கள் என்பதால் எங்களிடம் 10 ரூ வாங்கி உள்ளே விட்டு விடுவார்கள்.
பிறகு இடைவேளையில் பத்து ரூபாய்க்கு முறுக்கு.
இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது ஏன்டா வளந்தோம்னு தான் இருக்கு.
மாலை என் ஆச்சி வீட்டுத்தெரு முனையில் 5 மணிக்கு வடை சுக்காபி போடத் துவங்குவார்கள்..5-6 ஒரு ரகமான வடை, 6-7 ஒரு ரகமான வடை, 7-8 வேறு ரகமான வடை.
எனக்குத் தெரிந்து ஒரு மணி நேர ரகத்தில் 3 ரகத்தையும் விடுவது கிடையாது.😂
நேற்று யதார்த்தமாக நண்பர்களோடு அந்த வடைக்கடையைக் கடந்து செல்லும் போது மனதில் பெரிய பாரம்.
கண்களில் திரண்டு நின்ற இருதுளிக் கண்ணீர்.
எனது இனிய நினைவுகளின் வெளிப்பாடு.
ஆச்சி- தாத்தவோடு கட்டி உருண்டு பாசத்தைப் புழிந்து கொண்டிருக்கும் போது திடீரென சொல்லாமல் அப்பா வந்து நிற்பார்..ஏலேய் என்ன இங்கினயே கிடக்கப் போறியா, வா ஊருக்கு என்று.
என் ஆச்சிக்கு என்னை விடவே மனசு இருக்காது.
ஒரு மாசம் லீவு இருக்குலா, இங்க இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும் என்பார்.
இல்ல, அங்க இவன் கூட்டாளிக எல்லாம் இவனத் தேடி தேடி வாராங்க.
போதும் பத்து நாள் இருந்தாச்சுல, காலாண்டு பரிச்சை லீவு விட்டதும் வரட்டும் என்று பேசி என்னைக் கையில் பிடித்துக்கொள்வார்.
அவசர அவசரமாக மாமா சுமதி சேவு, பலகாரங்களை வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுவார்…
நிலையத்தில் கிளம்பிய பேருந்து எனது ஆச்சி வீட்டுத் தெருவின் இன்னொரு முனையைக்கடந்து செல்லும்.. பேருந்து நிலையத்தில் எங்களை வழியனுப்பி விட்டு வேகமாக நடந்து அந்த முனைக்கு வந்து நின்று எனது பேருந்து கடக்கும் போது அங்கே டாட்டா காட்டுவார்கள் எனது தாத்தாவும், ஆச்சியும்.
அதை நினைத்து இப்போது இதை எழுதும் போது கூட சிறிது துளி கண்ணீர் வராமல் இல்லை..
நாமெல்லாம் வளர்ந்து விட்டாலும் கூட, சமயத்தில் அவர்களுக்குப்பணம் கொடுத்து உதவும் நிலைக்கு ஆளாகி விட்டால் கூட , அவர்களுக்கு நாம் இன்னும் அதே சின்னப்பிள்ளைகள் தான்.
நேற்று கூட பரபரப்பாக நண்பர்களோடு போகும் வழியில் ஆச்சியை ஒரு எட்டுப் பார்க்கச் சென்ற போது , சாப்புட்டுப் போடா இவ்வளவு நேரத்துக்குப்பிறகு எங்க சாப்புடுவ? என்ற பாச அதட்டல் இருந்தது.
லேசாக காது மந்தமானதால் நான் சொன்னது அவர் காதில் விழவில்லை, அதான் சாப்புட்டுப் போ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பிறகு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றதும் மொதலயே சொல்லியிருந்தா எல்லாருக்கும் சாப்பாடு வச்சிருப்பன்ல என்ற அவர்களின் அன்பு எங்கே தேடி நமக்குக் கிடைக்கப் போகிறது.
இதை எழுதக் கொண்டிருந்தால் நான் மீண்டும் பிறந்து குழந்தையாகி அங்கே போய் எனது பழைய வாழ்க்கையை வாழும் வரை எனது ஆதங்கம் தீராது.
ஆனால், என் மனதில் உள்ள சுகமான நினைவுகளைப் பகிர்ந்து, உங்களுக்கு உங்களது சொந்த பந்தங்களின் ஊர்வழிப்பயண நினைவுகளைத் தூண்டி உங்களையும் என்னைப்போல , குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என புலம்ப வைப்பதில் எனக்கொரு ஆனந்தம்.
யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.
அன்புடன்,
நினைவுகளுக்காக..