தனியார் நலனுக்காகத் தவிக்கும் பொதுமக்களின் கதையைப் பார்க்கும் முன்பு நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம்.
ஒரு பெரிய ஊரில், போக்குவரத்து நெரிசல் இருக்கும் ஊரில், ஒரு மிகப்பெரிய திரையரங்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.
அங்கே வந்து படம் பார்க்க மக்கள் கூட்டமாக வரப்போவது உறுதி. அந்தத் திரையரங்கம், இருக்கைகளை அதிகப்படுத்திக் கொள்ளை, லாபம் சம்பாதிக்க முடிவெடுத்து, தனக்கு இருந்த நிலத்தில் மொத்தமாக பெரிய அளவில் அரங்கத்தைக் கட்டி விடுகிறது.
அது நல்ல திரையரங்கம் என்பதால் அங்கே படம் பார்க்க வரும் மக்கள், தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை சாலை ஓரங்களில் வரிசை வரிசையாக நிறுத்திவிட்டு உள்ளே சென்று படம் பார்த்து வருகிறார்கள். இதை நாம் ஏற்றுக் கொள்வோமா? அல்லது அரசாங்கம் தான் ஏற்றுக் கொள்ளுமா?
கண்டிப்பாகப் பொதுமக்கள் போராட்டம் செய்து திரையரங்கு மூடப்படும் என்பது மறுக்க முடியாத ஒன்று. அவன் லாபம் சம்பாதிக்க நாம எதுக்குப் போக்குவரத்து நெரிசலில் தவிக்க வேண்டும்?
உண்மைதானே?
ஒரு திரையரங்கு முதலாளி திரையரங்கை வடிவமைக்கும் போதே, வரும் ரசிகர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் படம் முடிந்து ரசிகர்கள் வெளியே போகும் போதும், புதிய ரசிகர் கூட்டம் உள்ளே வரும் போதும், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம், தனது ஊழியர்களைக் கொண்டு கூட்டத்தை சீர்செய்ய வேண்டும். இது பின்பற்றவும் படுகிறது.
திரையரங்கானாலும் சரி, உணவகமானாலும் சரி, மதுபானக்கூடமானாலும் சரி, லாபம் சம்பாதிக்கும் எந்தவொரு தனியார் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம், வாகன நிறுத்துமிடக் கட்டிடக் கட்டமைப்பு கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், இணைய வழித் தேர்வு நடத்தி கோடிகளில் சம்பாதிக்கும் தனியார் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வாகன நிறுத்துமிட வசதியைச் செய்யவில்லை.
ஆம், நான் வசிக்கும் கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள பார்ச்சூன் டவர்ஸ் என்ற கட்டிடத்தில் இயங்கி வரும் டாடா நிறுவனமானது, வங்கி வேலைவாய்ப்பு உட்பட அனைத்து இணைய வழித் தேர்வுகளையும் நடத்தும் மையமாகும். அதாவது அந்த மென்பொருள் நிறுவனத்திற்குப் பணியே இதுதான்.
கொடுக்கப்படும் வினாக்களைப் பதிவேற்றி, அது எந்த நேரத்தில் திறந்து எந்த நேரத்தில் எந்தெந்த மாணவர்களுக்குத் தேர்வு நிகழ வேண்டும் என்பதில் துவங்கி, திருத்தம் செய்து மதிப்பெண் பதிவேற்றுதல் வரை அத்தனை காரியங்களையும் பராமரிக்கும் மென்பொருளை இயக்கும் நிறுவனம் அது.
அங்கே ஒரு நேரத்தில் அதாவது ஒரு இரண்டு மணிநேரத் தேர்வுக்குக் 600-800 தேர்வர்கள் வருவார்கள்.
600-800 கணினி போதும் அந்தத் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்த.
அது போக பத்து காவலாளிகளும், 20 மேற்பார்வையாளர்களும் போதும்.
இதை சிறப்பாகச் செய்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் தேர்வெழுத வரும் தேர்வர்களுக்கு கட்டிடத்தினுள் வாகன நிறுத்தம் கிடையாது.
அவர்கள் பல்லாவரம் – துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். இதனால் தேர்வு நடக்கும் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கே தேர்வெழுத வரும் தேர்வர்கள் தங்கள் வாகனங்களை அந்த சாலையில் வரிசைகட்டி நிறுத்துகிறார்கள்.
மேலும் பல பெற்றோர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்களில் பிள்ளைகளை அழைத்து வந்து தேர்வு முடியும் வரை அங்கேயே சாலை ஓரங்களிலும், மேம்பாலத்தின் மேலேயும், வரிசையாக வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள்
இதனால் தேர்வு நாட்களில் அந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதைக் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் கேள்வி கேட்கவில்லை.
பொதுமக்களும், இது தேர்வுக்கூடம் என்பதால் சகித்துக் கொள்கிறார்கள். இதே சினிமாத் திரையர்காகவோ, அல்லது உணவகமாகவோ இருந்தால் விடுவார்களா?
ஆனால் இதுவும் தவறு தான். எப்படி ஒரு சினிமாத் திரையரங்கு படம் போட்டுக்காட்டுவது மட்டும் என் வேலை, பார்க்கிங் என் கடமை அல்ல என்று சொல்ல இயலாதோ, அதுபோல தேர்வு நடத்தும் இந்தத் தனியார் நிறுவனம், கணினி தருவது மட்டும் அதன் பொறுப்பாக எண்ண கூடாதல்லவா? இவர்கள் லாபம் சம்பாதிக்க, பொதுஜனம் வெளியே சீரழிவது சரியா?
தேர்வுக்கூடாரமாக இதைத் தேர்வு செய்த அரசாங்கம் சிறிது முன்யோசனையோடு இங்கே வாகன நிறுத்தம் இருக்கிறதா என்று எண்ணியிருக்கக் கூடாதா?
இது நிச்சயம் கேள்வி கேட்க வேண்டிய ஒரு விஷயம்.
முறையான வசதிகள் இல்லாமல் இவர்கள் இந்த இடத்தில் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் என்ன?
ஏதாவது தனியார் பள்ளி கல்லூரிகளில் வாடகை கொடுத்து அங்கேயே நடத்தலாமே.
அப்படி இங்கே தான் நடத்த வேண்டுமெனில், இந்தத் தேர்வுக்கூடத்திற்கு சொந்த வாகனங்களில் வரக்கூடாது, நாங்கள் அந்தந்த இடங்களுக்கு அனுப்பும் எங்களது வாகனங்களில் தான் வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்து, அவ்வாறு பொது வாகனங்களை ஏற்பாடு செய்து, சென்னை முழுவதிலும் இருந்து வரும் தேர்வர்களுக்குப்பயண ஏற்பாடும் செய்து இந்த நெரிசலைத் தவிர்க்கலாமே.
கேள்வி கேட்க ஆளில்லாமல், லாபம் மட்டுமே நோக்கம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தனியார் நிறுவனத்தை யார் கேட்பது?
கேட்டால் பொதுநோக்கம், வேலைவாய்ப்புக்கான தேர்வு, எதிர்காலப்படிப்புக்கான தேர்வுகள் நடக்கிறது என்று பொதுமக்களை ஏமாற்றி விடுவார்கள்.
தேர்வு நடத்துபவனுக்கே ஒழுக்கமில்லையே என்பது தான் பெரிய வருத்தம்.
கண்டிப்பாக அரசாங்கம் இதில் தலையிட்டு பொதுமக்களின் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
எதிர்பார்ப்புடன் நினைவுகள்.