சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாத காரணத்தால் , ஒரு உயிர் போனதை அறிந்து வருந்திய நாம்,வளர்ச்சியடைந்துவிட்டதாகப் பெருமிதம் கொள்ளும் நமது மாநிலத்தில் நிகழ்ந்த கொடுமையை எப்படி சகித்துக்கொள்ளப் போகிறோம்?
வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று புள்ளி விவரங்கள் சொல்வதெல்லாம் சரிதான்,ஆனால் கடைநிலைப் பாமரனும் அந்தப்புள்ளி விவரத்தில் காட்டப்பட்ட வளர்ச்சியின் பலனை அடையாமல் போனால், அது நம் சொந்த சகோதர சகோதரியைப் பட்டினி போட்டு விட்டு, பார்க்க வைத்து நாம் மட்டும் உணவு உண்பதற்குச் சமம் .
திருநெல்வேலியில் சமீபத்தில் நிகழ்ந்த கொடுமை கொரோனா காலக் கொடுமையைக் காட்டிலும் சகித்துக் கொள்ள இயலாதது.
வளர்ச்சி அடைந்து விட்டோம், இந்தியாவில் மருத்துவத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறோம், கல்வியில் சிறந்து விளங்குகிறோம் என்று பெருமை பேசி என்ன பலன்?
அந்த மருத்துவமும் , கல்வியும் மனிதாபிமானத்தை வளர்க்க வேண்டாமா?
சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவதனை மருத்துவரை ஒரு இளைஞன் கத்தியால் குத்தினார்.அந்த அளவிற்கு அவர் மனதில் வன்மம் விளைந்தது எதனால்?
காரணம் அலட்சியமும், அதிகார துஷ்பிரயோகமும் தான்.
பதவியும், பணமும் கிடைத்த பிறகு, நாமும் ஒரு காலத்தில் எளிய நிலையிலிருந்து தானே இந்த நிலையை அடைந்தோம் என்பதை மறந்து விட்டுப் பாமர மக்களின் மீது தமது பதவித் திமிரைக் காட்டுகின்றனர் சிலர்.
அப்படியான அலட்சியத்தால் நிகழ்ந்த கொடுமை தான் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அரங்கேறிய சம்பவம்.
ஆம். பெற்ற தாயின் சடலத்தை மிதிவண்டியின் சுமைதாங்கியில் கட்டி 18 கிமீ , உருட்டிச் சென்றிருக்கிறார் ஒருவர்.
இதில் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தத் தாயும் மனப்பிறட்சி நோயால் பாதிக்கப்பட்டவர், அந்த நபரும் மனநிலை சரியில்லாதவர்.
ஏதோ கொரோனா காலத்தில் தனது மனையின் சடலத்ததை தானே கொண்டு சென்று புதைத்த சம்பவம் வடமாநிலத்தில் நிகழ்ந்ததை வைத்து நாம் பரிதாபப் பட்டுக்கொண்டிருந்தோம்.
ஆனால் இன்று இங்கே நமது மாநிலத்தில் நிகழ்ந்த இது பெரும்பாலான மக்களுக்குத் தெரியக்கூட இல்லை.
திருநெல்வேலியில் இருந்து 18-20 கிமீ தொலைவிலிருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அந்தப் பெண்..அவருக்கு மூன்று மகன்கள்..அதில் இளைய மகன் தான் இப்போது அந்த அம்மாவை கவனித்து வருகிறார்.
அவரும் சமீபத்தில் நிகழ்ந்த ஏதோ ஒரு விபத்துக் காரணமாக சிறிதளவு மனநிலை பாதிக்கப்பட்டவர்.
அந்த அம்மாவோ மனச்சிதைவு நோய்க்காகத் தொடர்ச்சியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவராம்.
சம்பவத்தன்று அந்த அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ,அந்த அம்மாவின் மகனிடம் வேறு யாராவது இருந்தால் கூட்டி வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அவரோ என்ன செய்வதறியாது அவரது அம்மாவை அங்கிருந்து அழைத்துச் சென்று விடுவதாகக் கூறியுள்ளார்.
அவர்களும் சரி கூட்டிக்கொண்டு போங்க என்று கூறிவிட்டார்களாம்.. இதுதான் மருத்துவமனை நிர்வாகம் தன்மீது பழி இல்லை என்று சொல்லும் பதில்.
அதாவது, ஒரு நோயாளியை சிகிச்சை முடிந்து அனுப்பும் போது, அவரது நிலை என்ன? அவர் அனுப்பப்படலாமா கூடாதா? இந்த நிலையில் அனுப்பினால் அவருக்கு அடுத்து என்ன ஆகும் என்பதைக்கூட யோசிக்காமல், அதுவும் மனநலன் பாதிக்கப்பட்ட மகன் சொன்ன காரணத்திற்காக உடனடியாக அனுப்பிவிட்டார்களாம்.
அவர் எப்படி வந்தார், எப்படிக்கூட்டிக் கொண்டு செல்வார் என்ற கேள்விகளைக் கேட்கும் அளவிற்கு ஒரு ஆள் கூட மொத்த மருத்துவமனையிலும் இல்லை..
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.மருத்துவத் துறையில் வேலை செய்யும் மக்களின் பணிச்சுமை என்பது.
சரி அதே காரணத்தைச்சொல்லி இன்னும் எத்தனை நாளுக்குக் தான் இப்படி அப்பாவி மக்களை வஞ்சிக்கப்போகிறோம்.
வளர்ச்சியடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் நமக்கு இதுபோன்ற சம்பவங்கள் மல்லாக்கப்படுத்து காறி உமிழ்வதற்கு ஈடான ஒன்று தானே?
ஒரு வயதான மனச்சிதைவு நோயாளியை, அதுவும் உடல்நிலை மிக மோசமான நோயாளியை, முறையாகப்பேசி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்திருக்கலாம்.
அல்லது அவர் வீட்டிற்கு அனுப்பப் படப்போகிறார் என்றால், முறைப்படி ஆம்புலன்ஸ் ல் அனுப்பியிருக்கலாம்.
ஆனால் அவரது மனநிலை சரியில்லாத மகன் சொல்லிவிட்டார் என்பதற்காக, நல்லவேளை நமக்கு ஒரு வேலை மிச்சம் என்று போய்வாருங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டனராம்.
கொஞ்சம் , முன்யோசனையும், கருணையும், மனிதாபிமானமும் அல்லது இதில் ஏதாவது ஒன்றாவது இருந்திருந்தால் அந்த நபர் அந்த அம்மாவின் சடலத்தை மிதிவண்டியின் சுமைதாங்கி (சைக்கிள் கேரியரில் ) வைத்து 18 கிமீ நடக்க வேண்டிய அவசியமென்ன?
ஆமாம் மருத்துவமனையிலிருந்து வெளியே தனது தாயை சைக்கிளில் அழைத்து வந்து சிறிது தேநீர் வாங்கிக் கொடுத்து அருந்தச் செய்திருக்கிறார். ஆனால் அந்தம்மாவால் அதைக்குடிக்க இயலவில்லை.மேலும் அந்த இடத்திலேயே அவர் உயிர்போனதையும் இவர் உணர்ந்து கொண்டார்.
அதன்பிறகு அந்த அம்மாவின் உடலை கயிற்றில் கட்டி சைக்கிள் கேரியரில் வைத்தே உருட்டிக்கொண்டே ஊருக்குச் சென்றிருக்கிறார்.
வழியில் இதைக்கண்டு பாவப்பட்ட மக்கள் யாரோ, காவல்துறைக்குத் தகவல் சொல்லி, பிறகு காவல்துறை வந்து நடந்தவற்றை விசாரித்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மீண்டும் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அந்த உடல் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டிருக்கிறது.
மோசமான நிலையிலிருக்கும் ஒரு நோயாளியை ஏன் வெளியே அனுப்பினீர்கள் என்று கேட்டதற்கு.
அவர் கேட்டாரு நாங்க அனுப்பிட்டோம், என்று பள்ளி மாணவர்களை அப்பாவோடு அனுப்பியது போல பதில் சொல்லியிருக்கிறது மருந்துவமனை நிர்வாகம்..
வளர்ச்சி என்பது கவுன்சிலர் ஹோண்டா காரில் போவதும், மினிஸ்டர் பென்ஸ் காரில் போவதும் மட்டுமல்ல…
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு கல்வியில், மருத்துவத்தில் , சுகாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அந்தக்கல்வி கருணை, மனிதாபிமானம் ஆகியவற்றை வளர்க்காமல் விட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.
பெற்ற கல்வியையும், பதவியின் பலனையும் அடைந்து விட்டவர்கள் , கீழ் நிலையிலிருக்கும் மக்களை அலட்சியமாகக் கையாண்டு விட்டு, நம்ம இந்தப்பதவியில இருக்கும் போது நம்மள யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சாதாரணமாகத் தப்பிக்கொள்ளும் வாய்ப்பு, இது மாதிரியான சம்பவங்களை அதிகரித்து விடக்கூடாது.
அப்படி இது தொடரும்பட்சத்தில் வருங்காலங்களில் சாது மிரண்டா காடு கொள்ளாது என்ற ரீதியில் வெகுண்டெழும் மக்களால் ஆங்காங்கே கத்திக்குத்து சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உள்ளது.
அரசு முறையாக நடவடிக்கை எடுத்து, இனி எந்தவொரு சூழலிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.
உண்மையான வளர்ச்சியின் பலனாக ஒவ்வொரு சாதாரண பாமர மக்களும் அதை அனுபவிக்க வேண்டும்.
இந்த சம்பவத்தை இருட்டடிப்புச் செய்யாமல் ஆராய்ந்து , அந்த மருத்துவ ஊழியர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
ஒரு துளி விஷம் கலந்த பால் என்பதால், அதைப் பால் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
ஆதங்கத்துடன்
நினைவுகள்.